Header Ads



சிந்தனையைக் கிளறிய அந்தச் செய்தி..!


(ஜெம்ஸித் அஸீஸ்)

அண்மையில் ஒரு பத்திரிகையில் படித்த செய்தி என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. எதையும் செய்வோம் எப்படியும் வாழ்வோம் நோட்டுக் கிடைத்தால் அதுவே போதும் என்று தாம் நினைத்தபடி வாழ்ந்து காலம் கடத்துகின்ற மனிதர்கள் நிறைந்திருக்கும் இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்களே என்ற ஆனந்தம் எனது நாடி நரம்புகளை நனைத்தது. சம்பவம்  இதுதான்:

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள அரச பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனமொன்றில் 1971ஆம் ஆண்டு மலசலகூட சுத்திகரிப்பு தொழிலாளர்களாகச் சேர்கிறார்கள் இரு பெண்மணிகள். அவர்களின் பெயர் அக்கு, லீலா. அங்குள்ள 21 மலசலகூடங்களையும் நாளாந்தம் மூன்று தடவைகள் சுத்திகரிப்பதுதான் அவர்களது தொழில். அதற்கான மாதச் சம்பளம் 15 ரூபா. (இலங்கை நாணயப்படி 45ரூபா). 2001ஆம் ஆண்டு வரை இந்தச் சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் வேலையில் அமர்த்தப்பட்டபோது இவர்களது சேவைகள், ஊதியம் என்பன ஒழுங்கமைக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை.

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நீதி கிடைக்காததால் அக்குவும் லீலாவும் கர்நாடக நிர்வாகத்துறை விசாரணை மன்றத்திடம் 2001இல் முறையிட்டார்கள். அதனையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 15ரூபா சம்பளமும் இடைநிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும், அவர்கள் அந்நிறுவனத்தில் மலசலகூடம் சுத்திகரிக்கும் பணியைக் கைவிட வில்லை. இவர்களின் பரிதாப நிலைமையை அவதானித்த கர்நாடக மாநில மனித உரிமைகள் பாதுகாப்பு நிறுவனம் நீதிமன்றங்களை நாடி அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தது. உச்ச நீதிமன்றம், கர்நாடக மேல் நீதிமன்றம், நிர்வாகத்துறை விசாரணை மன்றம் எல்லாமே அக்குவுக்கும் லீலாவுக்கும் சார்பாக தீர்ப்பு வழங்கின. 

எனினும், குறித்த பெண்கள் ஆசிரிய பயிற்சி நிறுவனமோ மாநில கல்வி அமைச்சோ நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று அதன்படி செயலாற்ற முன்வரவில்லை.

இந்நிலையில் இவ்விருவரது விவகாரம் கடந்த மாதம்  ஹிந்து| பத்திரிகையில் வெளியானதையடுத்து பொருளாதார ரீதியில் உதவி செய்ய உலகின் பல பாகங்களிலுமிருந்தும் பெருந்தொகையினர் முன்வந்தனர். ஆனாலும், அவர்களின் உதவி தமக்குத் தேவையில்லை. தமக்குக் கிடைக்க வேண்டிய பணத்தை சட்டபூர்வமாகப் பெற்றுத் தந்தால் போதும் தாம் கடந்த 42 வருட காலமாக செய்து வந்த வேலைக்கு தகுந்த கூலியைப் பெற்றுத்தர ஆவன செய்தால் அதுவே போதும், நாம் சந்தோஷமாக வாழ்வோம் என ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட் டார்களாம் அவ்விரு பெண்களும்.

சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் சிலர் அக்குவுக்கும் லீலாவுக் கும் பண உதவி செய்ய முன்வந்திருக் கிறார்கள். அப்போதும் கூட குறித்த ஆசிரியர்களின் வீட்டு மலசலகூடங்களை சுத்தம் செய்து விட்டு அதற்கான கூலியா கவே பண உதவியைப் பெறுவோம் என நிபந்தனை விதித்த அப் பெண்கள் ஆசிரி யர்களின் மலசலகூடங்களைச் சுத்திகரித்த பின்பே அதனைப் பெற்றிருக்கிறார்கள்.

பணத்துக்காக, சொத்து செல்வங் களைப் பெற்று சுகண்டியாக வாழ வேண்டுமென்பதற்காக தன்மானம், சுய கௌரவம், சுய மரியாதை என்பவற்றை யெல்லாம் மூட்டை கட்டி மூலையில் வைத்துவிட்டு முன்னேற்றம் காணத் துடிப்பவர்களே, வறுமையிலும் சுய கௌரவம் பேணும் அந்தப் பெண்களின் உயரிய பண்பாட்டைப் பார்த்தேனும் திருந்த மாட்டீர்களா?

தொட்டது எடுத்ததற்கெல்லாம் கையேந்திப் பிழைக்கும் வெட்கம் கெட்டவர்களே, உங்களுக்கும் இந்தச் சம்பவம் படிப்பினையாக அமையட்டும்! 

அடுத்தவர்களின், குறிப்பாக அனா தைச் சொத்துக்களைச் சுரண்டி வயிறு வளர்ப்பவர்களே, உங்கள் சீர்கெட்ட பழக்கத்தை இன்றே புதைத்து விடுங்கள்.
உங்களது காரியங்களை நிறை வேற்றிக் கொள்வதற்காக எவர் முன்னிலையிலும் பல்லிளித்து கூனிக் குறுகி நிற்பவர்களே, அற்ப இலாபத்தை அடைந்து கொள்வ தற்காக தன்மானமிழந்து செல்வாக்குமிக் கவர்களுக்கு வால் பிடிப்பவர்களே சிந்தி யுங்கள், படிப்பினை பெறுவீர்கள்!

அல்ஹஸனாத்

No comments

Powered by Blogger.