அரபு நாடுகளுக்கு ஹமாஸ் போராளிகளின் நெத்தியடி
(Tn) இஸ்ரேல் – பலஸ்தீன நிலப் பரிமாற்றம் தொடர்பான அரபு லீக்கின் நிலைப்பாட்டை ஹமாஸ் தலைவர் காலித் மிஷால் நிராகரித்துள்ளார். இவ்வாறான முடிவு பலஸ்தீனர்களுக்கு பாதகமாக அமையும் என மிஷால், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
அரபு லீக் தூதுக்குழு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியை திங்கட்கிழமை சந்தித்தபோது, இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கு இடையிலான நிலக் கொள்வனவுகளை கருத்தில் கொண்டு 1967 எல்லையில் மாற்றம் கொண்டு வர முடியும் என அது குறிப்பிட்டது. எனினும் ஜோன் கெரியின் திட்டம் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பொருளாதார அமைதியை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று மிஷால் குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீன நிலத்தை மீட்க தமது அமைப்பு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என குறிப்பிட்ட ஹமாஸ் தலைவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் அந்த இலக்கு எட்டப்படும் என்றார். இதில் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்க தாம் கடுமையாக போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜோன் கெரியுடனான சந்திப்பின் போது 2002 அமைதி உடன்படிக்கைக்கு அமைய இஸ்ரேல் 1967 இல் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேறினால் அதனுடன் உறவை ஏற்படுத்த 22 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட அரபு லீக் வாக்குறுதி அளித்தது.
இஸ்ரேல் அமைதிப் பேச்சாளர் சிப்பி லிவினி, அரபு லீக்கின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார்.
மறுபுறத்தில் தமது எதிரி அமைப்பான பதாவுடன் சமரச உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தயாராகி வருவதாகவும் மிஷால் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் தேர்தலை நடத்துவதையொட்டியே இரு தரப்பும் சமரச உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன.

Post a Comment