பூச்சாண்டிகளின் விளையாட்டு..!
(தம்பி)
பொதுமக்களின் ஞாபக மறதிகளில்தான் – நமது பிரதிநிதிகள் அரசியல் செய்கின்றார்கள். அரசியல்வாதிகளின் பேச்சுக்களையெல்லாம் நாம் நினைவில் வைத்திருப்பதில்லை. அப்படி நாம் நினைவில் வைத்திருந்தால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. நாம் மறந்து விடுவோம் என்கிற நம்பிக்கையில்தான் - அவர்கள் பொய்களை விரும்பிச் சொல்கின்றார்கள். தேர்தல்களில் வெற்றியீட்டுவதே அவர்களின் இலக்காகும். துரதிஷ்டவசமாக அவர்கள் சொல்லும் பொய்களில் ஏராளமானவற்றை நாம் மறந்து விடுகிறோம். மிகுதியை உண்மை என்று நம்பி விடுகின்றோம்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் மேடைகள் உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கின்றன. குறிப்பாக, மு.காங்கிரசின் தேர்தல் மேடைகளில் உங்களை உணர்சிவசப்படுத்திய பேச்சுக்களை இப்போது நினைத்துப் பார்க்க முடிகிறதா? அவர்கள் சத்தமிட்டு, அலங்கார வார்த்தைகளால் சொன்ன பொய்களுக்கு நீங்கள் கரகோசித்ததை - இப்போது நினைத்தால், உங்களுக்கு வெட்கமாக இருக்கும்.
வெள்ளமாகத் திரண்டிருந்த மக்கள் முன்பாக நின்று - மு.காங்கிரசின் தலைவர் முழங்கியவற்றையெல்லாம் எண்ணிப் பாருங்கள். கிழக்கின் முதலமைச்சரை மு.கா வெற்றி கொள்ளும் என்றார். இப்போதிருக்கும் பொம்மை முதலமைச்சரைப்போல் தமது முதலமைச்சர் இருக்க மாட்டார் என்றார். ஆளுநரின் பிடிக்குள் கிழக்கின் ஆட்சி இனி இருக்கப் போவதில்லை என்றார். இன்னும் எதுவெதுவோ சொன்னார். நினைத்துப் பாருங்கள் - இவற்றில் எதுதான் நடந்தது?
மு.கா.வின் வியாபாரம்
கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரசால் ஒரு புல்லைக் கூடப் பிடுங்க முடியவில்லை என்பதே உண்மை நிலைவரமாகும். வெட்டிச் சாய்ப்பேன் என்று வீர வசனம் பேசியவர்கள் - இப்பொழுது அழுது புலம்புகின்றார்கள்.
'கிழக்கு மாகாண முதலமைச்சரின் கைகள் கட்டப்பட்டவை போல் உள்ளன. அவரால் எதையும் சுயமாகச் செய்ய முடியவில்லை. எதைச் செய்வதென்றாலும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் போய் நிற்க வேண்டிய நிலையில் உள்ளார். எனது அமைச்சினூடாக ஒரு நாட்குறிப்பேட்டினை அச்சிடுவதற்கே – என்னால் முடியாமலுள்ளது' என்று மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் அமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் - ஒருதடவை மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கூறியிருந்தமையை மறந்திருக்க மாட்டீர்கள்.
அப்படியென்றால், தேர்தல் மேடைகளில் மு.காங்கிரஸ் வாக்களித்த - முதலமைச்சர் எங்கே? பாலாறும், தேனாறும் பொங்கி வழிந்தோடும் கிழக்கு மாகாணசபை எங்கே? சுதந்திரமான ஆட்சி எங்கே?
எல்லாமே பொய்யாகிப் போய்விட்டன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தின் இடைத்தரகராகவே மு.காங்கிரஸ் செயற்பட்டிருக்கிறது. அல்லது முஸ்லிம் மக்களின் ஆiணையை வாங்கி – நல்ல விலைக்கு விற்றிருக்கிறது. அவ்வளவுதான்.
கிழக்கு மாகாண சபையினூடாக அதிகாரங்களைப் பெற்றுத் தருவதாகக் கூறிய மு.காங்கிரஸ் - முஸ்லிம் சமூகத்தின் கைகளில் விலங்குகளைத்தான் மாட்டியிருக்கிறது. திவிநெகும சட்டமூலத்தை கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரஸ் ஆதரித்ததமையினால், மாகாணசபைகளிடம் இருந்த கொஞ்சநஞ்ச அதிகாரங்களும் பலிகொடுக்கப்பட்டு விட்டன.
அமீரலியின் ஞானோதயமும் நாடகமும்
ஆனாலும், கிழக்கு மாகாணசபையை வைத்து ஆடப்பட்டு வரும் அரசியல் கூத்துக்கள் நின்றபாடில்லை. ஒவ்வொருவரும் தத்தமது பங்குக்கு ஏதோவொரு கூத்தினை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான அமீரலி ஆடத் தொடங்கியிருக்கும் அண்மைய கூத்து கோமாளித்தனமானது.
திடீரென்று மயக்கம் தெளிந்தவர்போல் அல்லது ஞானம் பிறந்தவர் போல், கிழக்கு மாகாணசபை குறித்து அண்மையில் அமீரலி கருத்தொன்றினைத் தெரிவித்திருந்தார். அதாவது, 'கிழக்கு மாகாணசபையின் செயற்பாட்டில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம். இந்த சபையினூடாக எவ்வித வேலைத் திட்டங்களும் நடைபெறுவதாக இல்லை. நடக்கும் என்கிற நம்பிக்கையையும் இழக்கப்பட்டு வருகிறது. இதனால், கிழக்கு மாகாண அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. அந்த மாற்றங்கள் தேசிய அரசியலையும் பாதிக்கும்' என்பதுதான் அமீரலி கூறியிருந்த விடயமாகும்.
கிழக்கு மாகாணசபையினால் ஒரு துரும்பினைக் கூட சுயமாகத் தூக்கிப் போட முடியாது என்பது புதியதொரு உண்மை அல்ல. கடந்த மாகாணசபைக் காலத்தின் போதே அதை உலகம் அறிந்து கொண்டது. விடயம் இப்படியிருக்க, அமீரலிக்கு புதிதாக ஞானோதயம் வரக் காரணம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். அந்த ஞானோதத்துக்குப் பின்னால் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் இருக்கின்றன.
அமீரலி - மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடியைச் சொந்த இடமாகக் கொண்டவர். மு.காங்கிரசின் ஊடாக 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகினார். ஆயினும், ஒரு வருடத்துக்குள் கட்சியிலிருந்து பிரிந்து, அப்போதைய அரசு பக்கமாகப் போய் அமைச்சரானார். அதனைத் தொடர்ந்து - அமைச்சர் றிசாத் பதியுத்தீனோடு இணைந்து அ.இ.மு.காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கினார். ஆயினும், பின்னரான காலப்பகுதியில் அமீரலியால் நாடாளுமன்றம் நுழைய முடியவில்லை. 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அமீரலி தோல்வியடைந்தார். அதனால் சிறிது காலம் அரசியல் அதிகாரம் எதுவுமில்லாமல் அமீரலி 'சும்மா' இருந்தார். பின்னர் கடந்த வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவி இம்முறை தனக்கே வழங்கப்படும் என்று அமீரலி நிறையவே நம்பியிருந்தார். அதனால், தனது தேர்தல் விளம்பரங்களிலெ;லாம் 'முதலமைச்சர் கனவை நோக்கிய பயணம்' என்கிற வாசகத்தினை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அமீரலியின் அந்தக் கனவு பலிக்கவில்லை.
இதேவேளை, அமீரலிக்கு தேசியப் பட்டியல் மூலமாக தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அரச தரப்பினால் உறுதிமொழியொன்று வழங்கப்பட்டது. அமைச்சர் பஷீல் ராஜபக்ஷ அந்த உறுதிமொழியினை வழங்கியிருந்தார். கடந்த வருடம் ஓட்டமாவடி பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பஷீல் ராஜபக்ஷ - 'அமீரலியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவேன்' என்று பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் வைத்து கூறினார். ஆளும் கட்சி சார்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் ஒருவர் ராஜிநாமாச் செய்வார் என்றும், அவ்வாறு ஏற்படும் வெற்றிடத்துக்கு அமீரலியை அரச தரப்பு நியமிக்கும் என்றும் அப்போது பேசப்பட்டது. ஆனால் - அந்த அதிஷ்டமும் அமீரலிக்குக் கிட்டவில்லை.
ஆக – முதலமைச்சராகவும் முடியாமல், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கிடைக்காமல் அமீரலி அதீத கடுப்பில் இருக்கின்றார். ஆட்சியாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்கிற கோபம் அமீரலிக்கு நிறையவே இருக்கிறது. எனவே, அவர் ஆசைப்பட்ட பதவிகளில் ஒன்றைப் பெறுவதற்கும், ஆட்சியாளர்களை பயமுறுத்திப் பார்ப்பதற்குமாக அமீரலி ஒரு நாடகத்தினை அரகேற்றிப் பார்க்க முயற்சிக்கின்றார். அதன் ஆரம்ப கட்டம்தான் கிழக்கு மாகாணசபை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்களாகும்.
அதனைத் தொடர்ந்து அமீரலியினுடைய நாடகத்தின் அடுத்தடுத்த பகுதிகள் அரங்கேறத் தொடங்கின. அவை,
01) சில வாரங்களுக்கு முன்னர் மு.காங்கிரசின் தலையகமான தாருஸ்ஸலாமில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இந்தக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினார். ஆச்சரியப்படும் வகையிலே இதில் அமீரலி கலந்து கொண்டு - ஹக்கீமுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.
02) இதனையடுத்து ஸ்ரீலங்கா மு.காங்கிரசில் அமீரலி இணைந்து கொள்ளவுள்ளார் என்கிற செய்தியொன்று திட்டமிட்டு ஊடகங்களில் பரப்பி விடப்பட்டது.
03) பின்னர், மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் - அமீரலி ஆகியோருக்கிடையில் சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறத் தொடங்கின.
இவற்றினூடாக அமீரலி இரண்டு விடயங்களை அடைந்து கொள்ள முயற்சிக்கின்றார் எனக் கூறப்படுகிறது. ஒன்று: மு.கா.வில் இணைந்து கொண்டு, அந்தக் கட்சியினூடாக கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவினைப் பெற்றுக் கொள்வதாகும். அல்லது மு.காங்கிரசில் இணைந்து விடுவேன் என்று ஆட்சியாளர்களுக்குப் பூச்சாண்டி காட்டுவது. இந்தப் பூச்சாண்டி குறித்து ஆச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கினால், அவர்களிடம் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருவதாகும். இவற்றினைக் குறி வைத்தே அமீரலி தனது காய்களை நகர்த்தத் தொடங்கியிருக்கின்றார் என பரவலாகப் பேசப்படுகிறது.
இவற்றினை உறுதி செய்வது போல், சில விடயங்களும் நடந்து வருகின்றன. உதாரணமாக, மு.காங்கிரசின் அதி உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சியின் செல்வாக்குள்ள பிரமுகர்களை அமீரலிக்கு நெருக்கமானவர்கள் அண்மைக் காலமாகத் தொடர்பு கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். இதன்போது, அமீரலியை கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக்க வேண்டியதன் 'தேவை' குறித்து - மு.கா. தரப்பாரிடம் அமீரலியின் ஆட்கள் பேசியுள்ளனர் என அறிய முடிகிறது.
தலைவலி மருந்து
சரி, அமீரலின் நகர்வுகள் ஒருபுறமிருக்கட்டும். அமீரலியை மு.காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளுமா? என்பதுதான் இங்கு முக்கியமாகும். அதிலும், மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் இதற்கு இணங்குவாரா என்பதே இங்குள்ள இமயமலைக் கேள்வியாகும்.
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமை மிக மோசமாக விமர்சித்துக் கொண்டு திரிந்தவர்களில் அமீரலியும் ஒருவராவார். சில காலங்களுக்கு முன்னர் 'குமாரி' என்கின்ற விவகாரத்தினை வைத்துக் கொண்டு ஹக்கீமுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சேறடித்தவர்களில் அமீரலி குறிப்பிடத்தக்கவராவார். ஆக, இப்படியான அமீரலியின் செயல்களை மறந்து, மன்னித்து, மீண்டும் மு.கா.வுக்குள் அவரை - ஹக்கீம் இணைத்துக் கொள்வாரா என்பது சந்தேகம்தான்.
சரி, ஹக்கீம் விரும்ப மாட்டார் என்றால், அமீரலியுடன் - ஹாபீஸ் நசீர் அடிக்கடி சந்திப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் ஏன் நடத்திவருகின்றார் என்கிற கேள்வி நமக்குள் தவிர்க்க முடியாமல் எழுகிறதல்லவா? இந்தச் சந்திப்புக்கள் வெறும் நட்பு ரீதியானவை என்கிறார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர். ஆனாலும், ஹாபீஸ் - அமீரலி சந்திப்பு தொடர்பான தகவல்கள் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் தரப்பிலிருந்தே ஊடகக்காரர்களுக்குக் கசிய விடப்படுகின்றன என்பதும் இங்கு கவனத்தக்குரிய விடயமாகும்.
எனவே, அமீரலியை மு.காங்கிரசில் இணைத்துக் கொள்வதில் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஆர்வம் காட்டுகின்றாரா? அல்லது அமீரலியை இணைத்துக் கொள்வதற்கு ஹாபீஸ் நஸீர் ஊடாக மு.கா. தலைமை முஸ்தீபுகளை எடுக்கிறதா? எனும் சந்தேகங்கள் நமக்குள் நீளுவதைத் தவிர்க்க முடியவேயில்லை. இவ்வாறு சந்தேகம் கொள்வதற்கு நியாயங்கள் இல்லாமலுமில்லை.
மு.காங்கிரஸ் தலைவருக்கும், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீருக்கும் - மு.கா.வுக்குள் சவாலாகவும் தலைவலியாகவும் இருப்பவர் அந்தக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூர் ஆவார். அண்மையில், மு.கா. தலைவர் ஹக்கீமுக்குத் தெரியாமலேலேயே - பஷீர் தனக்கான அமைச்சுப் பதவியினை பெற்றுக் கொண்டமையானது ஹக்கீமுக்கு அவமானத்தினையும், கோபத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கோபத்தினை ஹக்கீம் ஊடகங்களில் வெளிப்படையாகவே வெளிக்காட்டியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
ஆக, கட்சிக்குள்ளிருந்து பஷீரைக் காலி செய்வதே தனது தலைவலிக்கான நிரந்தர மருந்தாக அமையும் என்பது ஹக்கீமுக்குத் தெரியாமலில்லை. அப்படியென்றால், அதற்கான வழிகளில் இலகுவானது, பஷீரின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காங்கிரஸ் சார்பாக 'பெருத்த' அரசியல் தலைகளை களமிறக்குவதாகும்.
இந்தத் திட்டத்தினை ஹக்கீம் மனதில் வைத்துத் கொண்டுதான் - ஏலவே, ஹாபீஸ் நஸீரையும் மு.கா.வில் சேர்த்து, மட்டக்களப்பில் களமிறக்கினார் என்கிற கதையொன்றும் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. இப்போது, ஹாபீஸ் நஸீரோடு சேர்த்து அமீரலியையும் மு.கா.வில் இணைத்துக் களத்தில் இறக்கி விடுவதற்கு ஹக்கீம் யோசித்திருக்கலாம். யார் கண்டார்.
இன்னொருபுறம், மட்டக்களப்பு மாவட்ட அரசியல் களத்தில் பஷீர் இருப்பதை ஹாபீஸ் நசீரும் விரும்ப மாட்டார். காரணம், ஹாபீஸ் நஸீரின் அடுத்த இலக்கு நாடாளுமன்றம் செல்வதாகும். மட்டக்களப்பு அரசியல் களத்தில் பஷீரை வைத்துக் கொண்டு – ஹாபீஸ் நசீரால் அவருடைய நாடாளுமன்றக் கனவினை எட்டி விடுவதென்பது அத்துணை சுலபமில்லை.
எனவே, மு.கா.வுக்குள் அமீரலியைக் கொண்டு வந்து – அவரின் உதவியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கி வெற்றியீட்டுவது ஹாபிஸ் நஸீரின் திட்டமாக இருக்கலாம். அமீரலிக்குத் தேவையானவற்றை மு.கா.வுக்குள் பெற்றுக் கொடுப்பதும், தனக்குத் தேவையான உதவிகளை அமீரலியிடமிருந்து பெற்றுக் கொள்வதும் ஹாபிஸ் நஸீரின் எண்ணமாக இருக்கக் கூடும்.
ஆக, கிழக்கு மாகாண சபையினை வைத்துக் கொண்டு - மு.காங்கிரஸ்காரர்களும், அவர்களைச் சார்ந்தோரும், சார நினைப்போரும் இன்னுமொருமுறை 'வியாபாரம்' செய்வதற்குத் தயாராகின்றார்கள் என்பது புரிகின்றது. இந்த வியாபாரத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு அரைச்சதமும் லாபமில்லை. ஆனால், தப்பித் தவறி நஷ்டப்பட நேர்ந்து விட்டால், வழமைபோல் அந்தக் கணக்குகள் மட்டும் நமது தலைகளின் மீதே எழுதப்படும்.

They have list of tactics in stock. They will use those one by one to win the coming election. We people are fools.
ReplyDeleteThey cannot stand because all of them ( if not most of them) are CORRUPTED. If they talk against MARA those will be exposed and they are scared.
நாம் மறக்க மாற்றோம் அடுத்தா தேர்தலில் முஸ்லிம் காங்குரசுக்கு வரல்லாற்றில் இல்லாத படு தோல்வியை சந்திக்கும்
ReplyDeletesafwan athu nijjayam natakkum
ReplyDeleteUN is the mouth of US government. SLMC is the mouth of SL government.
ReplyDeletethese actors will dance for the film what they produce..! nothing more..!!
முஸ்லிம் காங்கிரஸ் எப்பவே மரணித்துவிட்டது, தற்போது உள்ளது. மு காங்கிரஸ். அதாவது முனாபிக் காங்கிரஸ்
ReplyDeleteinsha allah
ReplyDeletethatpoathu ulla anaiththu mp maarum padu thoalvi adaiya venum.
Ranees & Nanum Akkaraiptraan...!!! I agree with you guys..
ReplyDelete