கொழும்பு மாநகர சபையில் அல்லோல கல்லோலம் - சபைக்குள்ளே பட்டாசு வெடிப்பு
(Tn) கொழும்பு மாநகர சபையில் நேற்று (30) நடைபெற்ற அமர்வு பாரிய அல்லோல கல்லோலத்திற்கு மத்தியில் நடைபெற்றதுடன் சபையில் ஏற்பட்ட அமைதியின்மை காரண மாக மாநகர மேயர் ஏ. ஜே. முஸம்மில் சபை ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடங்களில 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைத்தார். மீண்டும் சபை காலை 10.50 மணியளவில் கூடியதுடன் அதன்போது ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் சுனில் ஆனந்த விதானகே மின்சார பட்டியல் அதிகரிக்கப்பட்டமையால் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். அதன் பின்னர் அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் சபையின் பிரதான நுழைவாயிலுக்குள் பட்டாசு ஒன்று வெடித்தது. அதன் பின்னர் சபையில் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.
கொழும்பு மாநகர சபை வரலாற்றிலே சபையினுள் பட்டாசு ஒற்று வெடிக்க வைத்தமை இதுவே முதல் தடவையாகும். அதன் பின்னர் ஐ. தே. க. உறுப்பினர் எம். ஏ. சரப்தீன் வெடித்த பட்டாசு துண்டுகளை சபைக்கு காண்பித்தார். அதைத் தொடர்ந்து மேற்படி பிரேரணையை உபுல் விக்கிரமசிங்க (ஐ. தே. க.) மறுமொழிந்தார்.
சபையில் பலமுறை அமைதியின்மை நிலவி அல்லோல கல்லோலப் பட்ட நிலையிலும் சபை ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன சபைக்கு வருகை தரவில்லை.
நேற்று (30) மாநகர சபை பொதுக் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலை 10.00 மணிக்கு சபைக்கு முன்னால் அமைந்துள்ள எப். ஆர். சேனாநாயக்க மாவத்தையில் இருந்து மாநகர மேயர் ஏ. ஜே. முஸம்மில், பிரதி மேயர் டைட்டஸ் பெரேரா உள்ளிட்ட ஐ. தே. க. உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கோசம் எழுப்பியவாறு பேரணியாக நகர சபையை வந்தடைந்தனர்.
அதனை எதிர்த்து நகர சபை பிரதான படிக்கட்டிற்கு அருகில் எதிர்க் கட்சித் தலைவர் அஜந்த லியனகே ஊடகப் பேச்சாளர் ரீசா சரூக், எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் எம். எஸ். மன்சில் ஆகியோர் கடந்த கால பயங்கர யுகம், ரயர் சம்பவம் என்பன பற்றி ஞாபகமூட்டும் வகையில் கோஷங்களை எழுப்பினர். மேலும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியவாறு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
Post a Comment