Header Ads



பலகை பெட்டியின்றி ஜனாஸா நல்லடக்கம் செய்ய அயர்லாந்தில் அனுமதி



(Tn) அயர்லாந்து முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி சவப்பெட்டி இன்றி இறந்த உடலை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. 

“முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைய அவர்களின் சம்பிரதாயத்தின்படி உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என அயர்லாந்து சுற்றாடல் திணைக்களத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் ‘தி ஐரிஷ் டைம்ஸ்’ நாளிதழுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து முஸ்லிம்கள் கடந்த பல தசாப்தங்களாக இறந்த தமது உறவினர்களின் உடலை இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. அயர்லாந்து சட்டத்தின்படி இறந்த உடல்கள் பலகை அல்லது வேறு ஏதாவது வலுவான பொருளொன்றினாலான சவப்பெட்டியின்றி அடக்கம் செய்வது சட்டவிரோதமானதாகும். 

ஆனால் இந்த சட்டம் தற்போது மாற்றப்பட்டு சவப்பெட்டியின்றி அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக பிரத்தியேகமான அடக்கஸ்தலங்கள் அமைக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்திற்கு அயர்லாந்து முஸ்லிம்கள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளனர். 

 “அயர்லாந்தில் மதம் தொடர்பான புரிதல் உயர்வாக உள்ளது” என குறிப்பிட்டுள்ள அயர்லாந்து இஸ்லாமிய மத்திய நிலையத்தின் பேச்சாளர் அலிசலி, “தற்போது இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி முழுமையான இறுதிக்கிரியைகளை நடத்த முடியும்” என்றார். 4.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அயர்லாந்தில் 1.1 வீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும் பிறப்பு வீதம் மற்றும் குடியேற்றங்கள் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.