Header Ads



மரணத்தின் நண்பன்...!


பாலின வித்தியாசமின்றி புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. பள்ளிப் பருவ மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

"அனைத்துவித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது. 

எத்தனை நச்சு: 

மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியவை. அருகில் இருப்பவரையும் உலகளவில் 6 விநாடிக்கு ஒருவரும்; ஆண்டுக்கு 60 லட்சம் பேரும், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 

2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால், அருகில் இருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"நோ' சொல்லுங்கள்: 

நன்மை அதிகம்புகை பழக்கத்துக்கு அடிமையாகி, உயிரை விடுவதை விட, புகையிலை பழக்கத்தை விடுவதே சிறந்தது. 

* படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். 

* புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும். மூன்று நாட்களுக்கு பிறகு, சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. 

* 4 ஆண்டுகளுக்குப் பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். 

இதைவிட புகையிலை பழக்கத்தை கைவிட வேறு காரணங்கள் வேண்டுமா..?

இலங்கையில் புகைப்பிடித்தல் வருடா வருடம் சுமார் 15 சதவீதப்படி வீழ்ச்சி அடைந்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமணசேகர தெரிவித்தார்.

2013ம் ஆண்டின் முதல் மூன்று மாத காலப்பகுதியை 2012ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார் க்கும் போதும் புகைப்பிடித்தலில் சுமார் 14 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

புகைப்பிடித்தல், பாவனை தற்போதைய வேகத்தில் வீழ்ச்சி அடைந்து செல்லுமாயின் அது 2020ம் ஆண்டாகும் போது 2 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 “புகைப் பிடித்தல் காரணமாக ஏற்படும் நோய்களால் வருடாவருடம் இலங்கையில் மாத்திரம் 22000 - 25000 பேர் உயிரிழக்கின்றனர். இதேவேளை இந்த நூற்றாண்டில் நூறு கோடி மக்கள் புகைப்பிடித்தல் காரணமாக ஏற்பட்ட நோய்களால் உயிரி ழப்பர் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

“இவ்வாறான நிலையில் அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபன மாநாட்டின் போது தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களை 25 சதவீதத்தாலும் புகைத்தல் காரணமாக ஏற்படும் மரணங்களை 30 சதவீதத்தாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகர மேலும் கூறுகையில், 

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அறிக்கைப்படி 1994ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையும் புகைப்பிடித்தல் பாவனை வருடா வருடம் சுமார் 15 சதவீதத்தால் குறைந்து வருகின்றது. இதன் காரணத்தினால் புகை பிடிக்கவென புதிய ஆட்களைக் கவர்ந்திழுக்கவென பலவிதமான உத்திகளைப் புகையிலை கம்பனி மேற்கொள்ளுகின்றது. இதனைப் பொது மக்கள் உணர்ந்து அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இலங்கை புகையிலைக் கம்பனி இந்நாட்டுக்குப் பெருந்தொகைப் பணத்தை வரியாகச் செலுத்துவதாகக் கூறுகின்றது. ஆனால் அதனை விட பல மடங்கு பணத்தை அவர்கள் இந்நாட்டிலிருந்து எடுத்து செல்லுகின்றார்கள். அத்தோடு அவர்கள் செலுத்தும் வரியும் சுமார் 50 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு விழிப்பூட்டலே காரணமாகும்.

இதேநேரம் வெல்லவாய நகரில் சிகரட் விற்பனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேச சபையும், மருத்துவ அதிகாரி அலுவலகமும், நகர கடை உரிமையாளர்களும் இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இது ஏனைய பிரதேசங்களுக்கு நல்ல முன்மாதிரியாகும் என்றார்.

No comments

Powered by Blogger.