பங்களாதேஷ் விபத்தில் 509 பேர் இறப்பு - பெரிய விசயம் இல்லை என்கிறார் அமைச்சர்
வங்கதேச தலைநகர் டாக்காவில் ராணா பிளாசா என்ற 8 மாடிக்கட்டிடம் கடந்த 24-ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சிக்கிக்கொண்டனர். 2443 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 509 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு 14 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்நகர மேயர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பொறியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச அரசு தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்திக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள வங்க தேச நிதி மந்திரி அப்துல் மால் அப்துல் முகித் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த விபத்து வங்க தேசத்தின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை எந்த விதத்திலும் பாதிக்காது. இப்போது இருக்கும் சிக்கலான சூழ்நிலையில் இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இது சாதாரண விபத்து மட்டுமே. இது எல்லா இடங்களிலும் நடக்கிறது.
இது போன்ற விபத்து நடைபெறாமல் தடுக்க நாங்கள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அது அனைவராலும் பாராட்டப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து மாதங்களுக்கு முன் வங்க தேச தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போதும் வங்க தேச அரசு இதே வாக்குறுதிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment