மஹிந்த அரசியலுக்கு வந்து 43 வருடங்கள் பூர்த்தி..!
24 வயது இளைஞனாக மஹிந்த ராஜபக்ஷ பெலியத்த தொகுதியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
இளைஞர் மஹிந்தவுக்கு 23 ஆயிரத்து 103 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளரும் தென்னிலங்கையின் அரசியல் ஜாம்பவானுமாக விளங்கிய டாக்டர் ரஞ்சித் அத்தபத்து 16ஆயிரத்து 499 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 6ஆயிரத்து 500 வாக்குகளினால் வெற்றிவாகை சூடினார். அந்தத் தடவை பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிப்பதற்கான மகாதேசாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையை முன்மொழி செய்யும் சந்தர்ப்பம் இளம் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கிடைத்தது.
இளம் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமைதியாக அமர்ந்து செவிமடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, தமது உரையில் இளைஞர் மஹிந்தவுக்கு அரசியலில் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் ஒரு நாள் இலங்கையில் மக்கள் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி ஒரு சிறந்த தலைவராக மாறுவார் என்று பாராட்டினார்.
ஜே.ஆர். ஜயவர்தன, அன்று கட்டியம் கூறியது இன்று உண்மையாகிவிட்டது. சாதாரணமாக அரசியலில் தேசத்தலைவராக மாறுவதற்கு பணவலுவும், குடும்ப செல்வாக்கும் இருக்க வேண்டும். அதனால்தான் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர். ஜயவர்தன போன்ற தலைவர்கள் உருவாக்கப்படுவதற்கு சாதகமான சூழ்நிலை அன்று நிலவியது.
டி.ஏ. ராஜபக்ஷ தம்பதிகளின் இரண்டாவது புதல்வராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தில் 6சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தார்கள். இவர் தென்னிலங்கையில் உள்ள மண்வாசனை மிக்க வீரகெட்டிய பிரதேசத்தில் 1945ம் ஆண்டு நவம்பர் 18ம் திகதியன்று பிறந்தார். இவரது பெற்றோர் இவரையும் மற்ற சகோதர, சகோதரியையும் சிங்கள பெளத்த சம்பிரதாயத்தின்படி வளர்த்தார்கள். இவர் முதலில் காலியில் உள்ள றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் நாளந்தா கல்லூரியிலும் இறுதியில் தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.
அதையடுத்து கொழும்பு சட்டக்கல்லூரியில் மாணவராக சேர்ந்து கொண்ட இவர் சட்டத்தரணியாக தேர்ச்சியடைந்தார். 1977ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்ட இவர் சட்டத்தின் மனித உரிமைகள் பிரிவை மிகவும் ஆர்வத்துடன் கடைப்பிடித்தார்.
மஹிந்த மனைவி ஷிரந்திக்கு ஒரு அன்பான கணவனாகவும், தனது மூன்று மகன்மாருக்கு பாசமிகு தந்தையாகவும், தன்னுடைய சகோதர, சகோதரிகளுக்கு நல்ல சகோதரராகவும் இருக்கிறார். இவர் டீ.ஏ. ராஜபக்ஷ தம்பதியினரின் 9 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக பிறந்தார். இவரது அண்ணன் சமல் ராஜபக்ஷ இன்று இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகராக இருக்கின்றார்.
இவர்களது குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை அக்கா ஜயந்தி, தம்பிமாருக்கும், அண்ணாவுக்கும் தாயைப் போல் கண்காணிப்பையும் அரவணைப்பையும் கொடுத்துவந்தார். ஜயந்தி இப்போது உயிருடன் இல்லை. மூன்றாவது இவருக்கு பின்னர் பிறந்த சகோதர, சகோதரிகள் வருமாறு: சந்திரா, கோத்தாபய, பஷில், ப்ரீத்தி, காந்தினி மற்றும் டட்லி ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் ஒற்றுமையாக சிறு வயது முதல் இன்று வரை இருந்து வருகிறார்கள்.

Post a Comment