பகடைக் காய்கள்...!
சாதிகீன் அப்துல் கபூர்
அல் பலாஹீ தஃவா பீடம்
இஸ்லாமிய பல்கலைக் கழகம்
மதீனா முனவ்வரா.
சேற்றினில் செந்தாமறையாய்
வரலாற்று வரிகளில்
வடிவாய் ஒரு சமூகம்...
விடியும் பொழுதும்
அஸ்தமிக்கும் அழகும்
கடலின் இசையும்
காற்றின் அலையும்
கனிவாய்ப் போனது...
தூரத்து நிலவு கூட
துயர் மறந்து புன்னகைத்தது
புனித சமூகத்தின்
வாழ்வு கண்டு...
யார் கண் பட்டதோ...???
எங்கோ ஒரு மூலையில்
எதிர் பாராத சரிவு...
அதனால்
மாறிப் போனது
பகடைக் காய்களாய்...
உரிமை என்று
உரத்துப் பேசினான் ஒருவன்
ஓடிப் போனது
அவன் பின்னே...
அபிவிருத்தி என்று
அள்ளி வீசினான்
நாயாய் அலைந்தது
மற்றொருவன் பின்னே...
தினசரிகளில்
அறிக்கைகள் திணறின
திகைத்து நின்றது
அதன் முன்னே...
பதவி என்றவன்
பாதை மாறினான்
பாவம் பார்த்தது
பயன் இன்றி...
சில்லரை சிலதை
காணிக்கையாக்கினான்
இழப்பை மறந்தது
மனம் இன்றி...
மொத்தத்தில் எல்லாம்
அரசியல் என்றான்
ஏமாந்து நின்றது
கண் முன்னே...
இன்னுமொருவன்
அதிகாரம் வேண்டும்
விமர்சனம் செய்தான்
அடுத்தவன்
அடைக்களம் வேண்டும்
அறிக்கை விட்டான்...
ஹலால்
கண்டனக் கூட்டம்
மறுபுறம்
ஆதரவுப் போராட்டம்...
அரசு கொடுக்கிறது துடுப்பு
மறுபுறம்
கண்துடைப்பு...
குப்பைக்குள் இருந்து
குளிக்கிறான்
குழிக்குள் இருந்து
குதிக்கிறான்
கேட்டால் அமைச்சராம்
உரிமைக் கோஷம்
என்கிறான்...
அசுத்தத்தை வாயில் வைத்து
கையை கழுவுகிறான்
கேட்டால்
விடுதலைப் போராட்டமாம்...
ஒன்று மட்டும்
தெளிவாய்த் தெரிகிறது
ஒரு சமூகத்தை வைத்து
சேர்ந்து ஆடும் சதுரங்கத்தில்
எல்லோரும் ஜெயிக்க
நாம் மட்டும் தோற்கிறோம்
அடிபட்டு விழும்
பகடைக் காய்களாய்...

Post a Comment