Header Ads



பரிசோதனைக் கூடத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட சிறுநீரகம், சிறுநீரை உற்பத்திசெய்கிறது (படம்)



பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீரை உற்பத்திசெய்யத் தொடங்கியுள்ளது.

இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது.

இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது.

ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறுகிறது.

உடலில் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்களையும் மேலதிக நீரையும் வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்களே செய்கின்றன.

அத்துடன், மாற்று-அறுவை சிகிச்சைகளிலும் மிக அதிகளவில் தேவைப்படுகின்ற உடல் உறுப்பும் சிறுநீரகம்தான். மாற்று- அறுவைச் சிகிச்சை செய்துகொள்வதற்காக பொருத்தமான சிறுநீரகத்துக்காக காத்திருப்போரின் பட்டியலும் நீண்டே காணப்படுகின்றது.

இப்போது நம்பிக்கையளிக்கத் தொடங்கியுள்ள இந்தத் தொழிநுட்பத்தில், பழுதடைந்த சிறுநீரகமொன்றை எடுத்து, அதிலுள்ள பழைய செல்களை அகற்றிவிட்டு, தேன்-அடை போன்ற அதன் தோற்றத்திலிருந்து புதிய செல்களை உருவாகச் செய்வது தான் மருத்துவ விஞ்ஞானிகள் நோக்கம்.

இப்படியாக வளர்த்தெடுக்கப்படும் சிறுநீரகங்கள் நோயாளிகளோடு பொருந்திப் போவதுடன், நோயாளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மாற்று-அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவும் தேவையான அளவில் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே மருத்துவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முதற்கட்டமாக எலிகளிடத்தில் இந்தப் பரிசோதனையை செய்து பார்த்திருக்கிறார்கள். bbc

No comments

Powered by Blogger.