யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் பயன்கிட்டுமா..?
யாழ் முஸ்லிம் பிரதேச இந்திய வீட்டுத்திட்ட விண்ணப்பங்கள் கையளிக்கும் நிகழ்வில் அஷ்-ஷெய்க் அஸ்மின் அய்யூப் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட விஷேட உரை.
எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே! எம் தலைவர் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவத்தும், ஸலாமும். அனைவருக்கும் மாலை வந்தனங்கள், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்- 2010ம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்ற ஒரு முஸ்லிம் சமூகத்தின் கூட்டமைப்பாகும் 2010 முதல் யாழ் மண்ணில் முஸ்லிம்களை மீளவும் குடியேற்றுகின்ற பொறுப்பினை சம்மேளனம் முன்னின்று செயற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்திய வீட்டுத்திட்டம் துரித விண்ணப்பங்கோரல் என்னும் ஒரு செயற்திட்டத்தை நாம் கடந்த இருமாத காலமாக அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்துகின்றோம். எம்மால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அரச அதிகாரிகளிடம் கையளிக்கின்ற நிகழ்வே இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்க்கின்றது.
எமது கருத்திட்டம் குறித்து ஒரு சிறிய அறிமுகத்தை வழங்குவது பெறுத்தமானதாக இருக்கும் என நம்புகின்றேன். அந்த வகையில் முதன்மையாக எங்களுடைய மக்களின் நிலைகள் குறித்து நாம் ஒரு சில வார்த்தைகளை இந்த இடத்தில் குறிப்பிடுவது மிகவும் பொறுத்தமனாதாக இருக்கும்.
வெளிப்பார்வையில் ஒரு ஆரோக்கியமான சமூகமாக, செல்வ வளங்களை கொண்ட ஒரு சமூகமாக, வளர்ச்சிகண்ட ஒரு சமூகமாக யாழ் முஸ்லிம் சமூகம் தென்பட முடியும். ஆனால் உள்ளே சென்று நோக்குகின்றபோது அதன் நிலைமை வித்தியாசமானது. 1990களில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட எமது சமூகம் இடப்பெயர்வின் மூலமும், நீண்டகால இடப்பெயர்வின் மூலமும் பாரிய எதிர் விளைவுகளை சந்தித்துள்ளது.
குறிப்பாக குடும்பம், சமூகம் என்ற இரு கட்டமைப்புகளும் சீர் குலைந்துபோயிற்று. ஒரு குடும்பம், தனக்கென இருக்கின்ற அடிப்படை ஆவணங்கள் அல்லாத நிலை தோன்றியது. பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், அடையாள அட்டை, விவாகப்பதிவு, இறப்பு அத்தாட்சிப்பத்திரம், விவாகரத்துப் பதிவுகள், பாடசாலைச் சான்றிதழ் என எதுவும் இல்லாத நிலைக்கும் எமது சமூகம் தள்ளப்பட்டது. அது மாத்திரமல்ல, ஒரு சமூகக் கட்டமைப்பு இல்லாத ஒரு சமூகமாக அது மாறியது. சமூகக் கடமைகள் குறித்தும் சமூகப் பொறுப்புகள் குறித்தும் அறியாத நிலை தோன்றியது. இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் வலுப்பெற்றன. எனவே அத்தகைய பாதிப்புகள் காலம் செல்லச்செல்ல எமது சமூகத்தின் மீது நிரந்தமான எதிர்விளைவுகளை உறுவாக்கி இருக்கின்றது. இத்தகைய விளைவுகளின் காரணமாக எமது சமூகம் வாழ்வில் நம்பிக்கையற்றவர்களாக, சமூக, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடு அற்றவர்களாக மாறியிருக்கின்றார்கள். அவர்கள் புத்தளம், நீர்கொழும்பு, மற்றும் ஏனைய பிற மாவட்டங்களில் வாழ்கின்றபோதிலும், குறித்த பிரதேசங்களின் உள்ளூர் சமூகங்களுடன் இரண்டறக்கழந்து வாழவில்லை, அங்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்ற அடையாளத்துடந்தான் வாழ்கின்றார்கள். இத்தகைய மக்கள் தமது மண்ணின் மீது ஆசையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றார்கள், மீள்குடியேற்றத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்
ஆனால் நடைமுறையில் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றார்கள். அத்தகைய சவால்கள் மீளக்குடியேறுகின்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான சவால்களாகவும், ஒரு சில மாறுபட்ட சவால்களாகவும் இருக்கின்றன.
தமிழ் சகோதரர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், அவர்களும் இடப்பெயர்வையும், அகதிமுகாம் வாழ்வையும் அனுபவித்திருக்கின்றார்கள், அங்கும் சமூகப்பிரச்சினைகள் காணப்படுகின்றன, இருப்பினும் அவர்களுள் பெரும்பாலானவர்கள் யாழ் மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்திருக்கின்றார்கள், எனவே இம்மாவட்டத்தில் அத்தகைய மக்களுக்கான மீள்குடியேற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது அவர்களால் நேரடியாக குறித்த திட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது.ஆனால் முஸ்லிம்கள் இடம்பெயர்வானது வவுனியாவையும் தாண்டி நிகழ்ந்திருக்கின்றது. இப்போது மீளவும் குடியேறுங்கள் என்று நாம் அவர்களை அழைக்கும்போது அவர்கள் தங்குமிடவசதிகள் இன்மை, தொழில் சார்ந்த பிரச்சினைகள், போன்றவற்றின் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள். குறிப்பாக மீள்குடியேறுகின்ற மக்களுக்கான உதவித்திட்டங்கள் ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்ற போது அவற்றைப் பெற்றுக்கொண்டு தமது மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்திக்கொள்வதில் அவர்களுக்கு ஒரு ஆர்வமும் விருப்பமும் இருக்கின்றது. ஆனால் அவர்கள் வவுனியாவுக்கு அப்பால் இருப்பதால் உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு வருவதும், இங்கே தங்கிச்செல்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றார்கள், எனவே இத்தகையவர்களுக்கு வீட்டுத்திட்டமே முதன்மையாகத் தேவைப்ப்படுகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் கொள்கைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் ஒரு சில உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு கட்டுப்பாடுகள் காணப்பட்டன, ஆனால் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கௌரவ அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, கௌரவ அமைச்சர் ரிஷாத் போன்றோரும் ஆளுனர் அவர்களுடைய முயற்சிகளின் பயனாக அத்தகைய கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக புதிய அகதிகள் பழைய அகதிகள் என்னும் பாகுபாடு இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் என நாம் அமைச்சர் மட்டத்திலும், இந்திய உயர்ஸ்தானிகராலய மட்டத்திலும், அரச உயர் அதிகாரிகள் மட்டத்திலும் வேண்டுகோள்களை முன்வைத்தோம். இதன் பயனாக முஸ்லிம்களையும் இணைத்துக்கொள்தல் என்ற தீர்மானம் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
2011ம் ஆண்டின் தரவுகளின்படி 163 குடும்பங்கள் வீட்டுத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை பெற்றவர்களாக யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் அறிவித்திருந்தது. அவர்களுள் 2012 டிசம்பர் வரை 28ற்கும் குறைவானவர்களே உரிய முறைப்படியான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார்கள். ஏனயோர் ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டிருந்தார்கள். எனவே யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ள 2251 குடும்பங்களுள் பெரும்பாலான குடும்பங்களுக்கு வீடில்லாப் பிரச்சினை காணப்படுகின்றது. அதுவே அவர்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்ற காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இந்திய வீட்டுத்திட்டத்தை நோக்கியது. ஆவணங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமே இது சாத்தியப்படும் என்று அது நம்பியது. மிகத்துரிதமான ஒரு முயற்சியை அது மேற்கொண்டது. மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ள மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை வீட்டுத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்தலே எமது முயற்சியாக அமைந்தது. இந்திய வீட்டுத்திட்டத்திற்காக ஒவ்வ்வொரு விண்ணப்பதாரியும் 10 ஆவணங்களை ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. அவற்றுக்கு அவர்கள் 20,000.00 ரூபா வரை கட்டணங்களாக அரச அலுவலகங்களுக்கு வழங்க வேண்டியிருந்தது. எனவே இவற்றுள் இலகுத் தன்மைகளை ஏற்படுத்தி, அவற்றை ஒழுங்குபடுத்துவதில் மக்களுக்கு நாம் ஒத்துழைப்புகளை வழங்கினோம். இதன் பயனாக எம்மிடம் இந்திய வீட்டுத்திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளோர் 337 ஆகும் அதில் 237 விண்ணப்பதாரிகள் முழுமையான ஆவணங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்கள். அவற்றை இன்று நாம் கௌரவ அமைச்சர் முன்னிலையில் அரசாங்க அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும் கையளிக்க இருக்கின்றோம்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல எமது மக்கள் நீண்ட கால இடப்பெயர்வினை எதிர்கொண்டிருக்கின்றார்கள், அதன் காரணமாக அவர்களுடைய ஆவணங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன அவற்றை மனிதாபிமான நோக்கில் அணுகி அவற்றுக்கான அனுமதிகளை வழங்க கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோளாகும்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாதிக்கட்டு புத்தளத்தில் வசித்தபோதும் உதவிகளை மேற்கொண்ட ஒரு நல்ல மனிதாபிமானம் மிக்க மனிதர், அவர் எமது மீள்குடியேற்றத்திலும் சிறப்பான பங்களிப்புகளை வழங்குவார்கள் என மக்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.
ஒரு சிலர் சம்மேளனத்தின் செயற்பாட்டை விமர்சித்தார்கள், வீட்டுத்திட்ட உதவிகளை அரசியல் நோக்கோடு அணுகினார்கள், ஆனால் இன்று அவை யாவும் கட்டுக்கதைகள் என மக்கள் உணர்ந்துவிட்டார்கள், அமைச்சர் அவர்களின் தாராள குணத்தாலும் தயவாலும், ஆளுனர் அவர்களின் ஒத்துழைப்புடனும் இந்திய வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் குறித்த ஆவணங்களை இங்கே கையளிக்கின்றோம்
இந்த முயற்சியில் எம்மோடு ஒத்துழைத்த சம்மேளனத்தின் அனைத்து அங்கத்தவர்களையும் இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்கிறேன், அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் ஆசியும், ஹிதாயத்தும் நஸீபாகட்டும் என அல்லாஹ்வைப் பிரார்த்து விடைபெறுகின்றேன்.
யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் கடந்த இரண்டு மாதங்களாக அமுல் நடாத்தி வந்த “இந்திய வீட்டுத்திட்டத்திற்கான துரித விண்ணப்பங்கோரல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக சேகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை யாழ் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஞாயிறு 28-04-2013 அன்று வெகு விமர்சையாக யாழ் ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

ASMIN IYOOPIN URAI YAAL MUSLIM KALIN THATPOTHAIYA NILAYAI EDUTTHU KAADDIYULLATHU SAGOTHARAR ASMINUKU NALLA TALAMAITTHUVATTHIKKU KAANA ETHIRKAALAM UNDU PAARAADDUKKAL.
ReplyDelete