பாகிஸ்தானில் தேர்தல் பரபரப்பு - முஷரப் வேட்பு மனு தள்ளுபடி
(SAFRAN BIN SALEEM)
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் போட்டியிடும் நோக்கத்தில் கடந்த மாதம் 24ம் தேதி முஷரப் தாயகம் திரும்பினார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலையின் போது உரிய பாதுகாப்பு வழங்காததால், பெனாசிர் கொலை வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இது தவிர, நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது உள்ளிட்ட சில வழக்குகளும் முஷரப் மீது தொடரப்பட்டது. வழக்குகளை சந்திக்க பயந்த முஷரப், பாகிஸ்தானை விட்டு வெளியேறி சவூதியில் தங்கி இருந்தார்.
கராச்சி, இஸ்லாமாபாத், சித்ரல், கசுர் ஆகிய 4 தொகுதிகளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 62 மற்றும் 63ன் படி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதி முஷரப்புக்கு கிடையாது என்று கசுர் கோர்ட்டில் வக்கீல் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில், கசுர் தொகுதி தேர்தல் அதிகாரி முகம்மது சலீம் முஷரப்பின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார். இதர 3 தொகுதிகளிலும் முஷரப்பின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது தள்ளுபடி ஆகிவிடுமா? என்ற கேள்வி பாகிஸ்தான் மக்களிடையே எழுந்துள்ளது.

Post a Comment