யூசுப் அல் கர்ளாவி முதன்முறையாக காஸா செல்கிறார்
(Tn) முன்னணி இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவி எதிர்வரும் மே மாதம் பலஸ்தீனின் காசாவுக்கு செல்லவுள்ளார். இதனை காசாவை ஆளும் ஹமாஸ் அரசின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு உறுதி செய்தது.
உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களின் மதிப்பை பெற்ற கட்டாரை மையமாகக் கொண்டு செயற்படும் யூசுப் அல் கர்ளாவி காசாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது இதுவே முதல் முறையாகும். இவர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில் ஹமாஸ் அமைப்பு அண்மைக் காலத்தில் தம் மீதான இராஜதந்திர தடங்கல்களை மெல் மெல்ல தகர்த்தி வருகிறது. துர்க்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகனின் எதிர்வரும் மேமாதத்தில் காசாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலின் கடும் தடைகளுக்கு உள்ளாகி இருக்கும் காசாவுக்கு கட்டார் நாட்டு தலைவர் மற்றும் மலேசிய பிரதமர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் காசா செல்லும் யூசுப் அல் கர்ளாவி அங்கு எவ்வளவு காலம் தரித்திருக்கப்போகிறார் என்பது குறித்து காசா இஸ்லாமிய விவகார அமைச்சர் இஸ்மாயில் ரிழ்வான் தகவலளிக்கவில்லை. இதனை இஸ்லாமிய அறிஞர் சார்பில் பேசவல்லோரும் உடனடியாக உறுதி செய்யவில்லை. கர்ளாவியின் விஜயம் காசாவில் ஹமாஸ் அமைப்பின் ஆதரவை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Post a Comment