Header Ads



காணி சட்டமூலம் சீர்திருத்தப்படாததால் பல்வேறு பிரச்சனைகள் - ஜனாதிபதி மஹிந்த


(Sfm) காணி துறைக்கு உரித்தான சட்ட மூலம் இன்றைய சூழ்நிலைக்கு அமைய சீர்திருத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் மீளாய்வு தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணி சட்டமூலம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவகையில் சீர்திருத்தப்படாததன் காரணமாக பல்வேறுபட்ட பிரச்சனைகள் தோன்றியுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸ் சுட்டிக்காட்டியதனை அடுத்தே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

காணி பிரச்சனை தொடர்பாக செய்தித் தாள்களில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது, காணி மற்றும் காணி அபிவிருத்தித்துறை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதனிடையே, அரசாங்கத்தின் காணிகள் பல்வேறுபட்ட தரப்பினரால், சட்டவிரோதமாக கையாளப்படுகின்றமை தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த காலங்களில் சட்ட விரோதமான முறையில், கையேற்கப்பட்ட, அரசாங்கத்தின் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படாத காணிகள் மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட காணி மற்றும் காணி அபிவிருத்தித் துறை அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸ், பலாலி போன்ற அதி உயர் பாதுகாப்பு வலயம் அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், அந்த காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கப்படும் வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.