முஸ்லிம் விரோதங்களும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும் (பாகம் - 2)
(கலாநிதி எம். எஸ். அனீஸ், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்)
கடந்த சில தசாப்தங்களில் சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல பொருளாதார காரணிகள் பங்களிப்பு செய்துள்ளன. அவற்றில் பிரதானமான ஒன்றுதான் சிங்கள பெண்களின் உயர்கல்வி மீதான அதீத நாட்டமாகும். 1980 களின் பின்னரான பல்கலைக்கழக கல்வியில் பெண்களின் விகிதாசாரத்தை அவதானிக்கும்போது இது நன்கு புலப்படுகின்றது. ஆரம்பத்தில் பல்கலைக்கழக கல்வியில் அதிக சிரத்தை காட்டாத இவர்கள் இன்று ஆண்களையும் விஞ்சிவிட்ட நிலைமை காணப்படுகின்றது. உதாரணமாக 2011 இல் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர்களில் ஏறத்தாள 59% பெண்களாக காணப்பட்டனர். பொறியியல் பீடத்தை தவிர மற்ற எல்லா பீடங்களிலும் இன்று அதிகமாக பெண் மாணவிகளே காணப்படுகின்றனர். சில பீடங்களில் எறத்தாள 70-80% மானவர்கள் பெண்களேயாவர். கலைத்துறை மற்றும் வர்த்தக முகாமைத்துவ துறைகளில் இவர்களின் எண்ணிக்கை வியப்படையவைக்கும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இவர்கள்தான் வேலை இல்லாத பட்டதாரிகளில் அதிகமாக காணப்படுகின்றனர்.
உயர்கல்வி மீதான இவர்களின் இந்த அதீதமான அதிகரிப்பானது இவர்களது திருமண வயதெல்லையை பலவருடங்களுக்கு பின்னோக்கி தள்ளியுள்ளது. சாதரணமாக 20-25 வயதில் திருமணபந்தத்தில் இணையும் இவர்கள் இன்று சராசரியாக தமது 30 ஆவது வயதுகளில்தான் திருமணம் முடிக்க முடிகின்றது. திருமணம் தமது உயர்கல்விக்கு தடையாக அமையும் என இவர்களில் அதிகமானோர் நினைக்கின்றனர். மேலும் இலங்கையின் பல்கலைக்கழங்களில் தொடர்ச்சியாக காணப்படும் அசாதாரண சூழ்நிலைகளும் இவர்களின் கல்வியை உரியகாலத்தில் முடிப்பதற்கு தடையாக அமைகின்றது. உயர்கல்வியோடு மாத்திரம் இவர்களின் இலட்ச்சியம் முடிவடைவதில்லை. பட்டம்பெற்ற பின்னர் தமக்கேற்ற தொழில்களை தேடியலைவதினாலும் இவர்களின் திருமண வயதெல்லை மேலும் சில ஆண்டுகள் பின்தள்ளப்படுகிறது. இன்று ஏறத்தாள 40,000 க்கும் அதிகமான பட்டதாரிகள் வேலையின்றி வீடுகளிலே முடங்கிக்கிடக்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் பெண்களே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
திருமண வயதெல்லை பின்தள்ளப்படுவதால் இயற்கையாகவே அவர்களின் குழந்தை பெறும் ஆற்றலும் ஆர்வமும் குறைவடைந்து செல்லும் என்பது வெளிப்படையானதே. அதேநேரம் தொழில் வாய்ப்புகளை பெற்றபின்னர் தமக்கு தகுதியான வரன்கள் இல்லாததன் காரணமாக இன்று பல பெண்கள் திருமணம் முடிக்காமலேயே கன்னிகளாகவே வாழ்வதையும் நாம் எம்மைச்சுற்றி காண முடிகிறது. மறுபுறமாக இந்த உயர்கல்வி நாட்டமானது முஸ்லிம் பெண்களை பாதிக்கவில்லையா என்ற கேள்வியொன்று எழுப்பப்படலாம். இது நியாயமான ஒரு கேள்விதான். கடந்த காலங்களில் சிங்கள பெண்களைப்போலவே முஸ்லிம் பெண்களும் உயர்கல்வியில் அதிக நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளனர். எனினும் சிங்கள மாணவர்களோடு ஒப்பிடும்போது இது குறைவானதே. இங்கு பிரதானமாக கருத்தில் கொள்ளவேண்டிய விடயமென்னவெனில் சிங்கள மாணவிகளைப் போன்று முஸ்லிம் பெண் மாணவிகள் தமது உயர்கல்வியின் நிமித்தம் தமது திருமண வயதெல்லையை பின்போடுவது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். தேவைப்பட்டால் திருமணம் முடித்துக்கொண்டும் தமது கல்வியை அவர்கள் தொடரும் நிலையை நாம் காணலாம். குழந்தை பெற்றுக்கொள்ளும் விடயமும் அவ்வாறானதே. சிலவேளைகளில் தமது உயர்கல்வியானது தமது குடும்பவாழ்விற்கு இடயூறானது என எண்ணும்போது உயர்கல்வியை அவர்கள் இடைநிறுத்தவும் தயங்குவதில்லை. அவர்கள் பின்பற்றும் கலாச்சாரம் சமூக நியதிகள் என்பன அவ்வாறான முடிவுகளுக்கு காரணமாய் அமைகின்றன.
இன்று இலங்கை பல்கலைக்கழங்கங்களின் அனுமதியில் பெண்களின் அதிகரிப்பானது எதுவிதத்தில் இந்நாட்டின் சிங்கள சமூகத்தின் இயற்கையான சனத்தொகை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதென்பதை நாம் மேற்கூறிய விடயங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
அடுத்த மிக முக்கியமான பொருளாதார காரணியாக பார்க்கப்பட வேண்டியதுதான் பெண்களின் தொழில்சார் நாட்டமாகும். கடந்த சில தசாப்தங்களில் வீட்டுக்கு வெளியே தொழில் புரியும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்குகளினால் அதிகரித்துள்ளது. அவர்களது உயர்கல்வி மீதான நாட்டமும் குடும்ப பொருளாதார சூழ்நிலைகளும் அவர்களை கட்டாய தொழிலை நோக்கி தள்ளுகின்றன. விசேடமாக 1977 களின் பின்னரான திறந்த பொருளாதரக் கொள்கைகள் இதில் பாரிய பங்களிப்பு செய்துள்ளன. உதாரணமாக 2007 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி இந்நாட்டின் சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரிந்த 114,000 பேரில் ஏறத்தாள 75,000 பேர் பெண்களாவர். இவ்வாறான இடங்களில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் தொகை ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2009 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின்படி இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நபர்களில் ஏறத்தாள 27.1% மானவர்கள் பெண்களாக இருந்தனர். மேலும் கிராமப்புறங்களில் இருந்து வந்து நகர்ப்புறங்களில் தொழில் புரியும் பெண்களின் தொகை இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது. நகர்ப்புற வாழ்க்கைச்செலவு, இருப்பிடவசதிப் பிரச்சனை, குழந்தைகளுக்கான பாடசாலை அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்களும் இன்று நகர்ப்புறங்களில் தொழில் புரியும் சிங்கள மக்களின் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் ஆசையையும் வெகுவாகவே குறைத்துள்ளது. பொதுவாக தொழில் புரியும் முஸ்லிம் பெண்கள் மிக குறைந்த அளவிலேயே தமது சொந்த ஊரைவிட்டு வெளியே செல்கிறார்கள். அவ்வாறான கட்டாய சூழல் ஏற்படும்போது பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்துவது போலவே தமது தொழிலையும் நிறுத்திக்கொள்ள தயங்குவதில்லை. காரணம் உயர்கல்வி மற்றும் தொழில் என்பவற்றைவிட அவர்கள் ஒப்பீட்டளவில் தமது குடும்ப வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதேயாகும். மேலும் பொருளாதார காரணிகளுக்காக முஸ்லிம்கள் தமது குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளும் விடயம் என்பது சிங்கள சமூகத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதே.
சிங்கள சமூகத்தில் அவர்களது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தை குறைக்கும் அடுத்த பிரதானமான காரணியாக நாளாந்தம் அதிகரித்து செல்லும் வாழ்க்கைச் செலவானது காணப்படுகிறது. இதனால் இந்த நாட்டில் இன்று மிக உயர்ந்த அளவிலான கருக்கலைப்பு இடம்பெற்று வருகின்றது. சுகாதார திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி ஏறத்தாள 800-1000 வரையிலான கருக்கலைப்புகள் நாளொன்றிற்கு இடம்பெறுகிறது. சராசரியாக வருடமொன்றிற்கு 290,000- 310,000 கருக்கலைப்புகள் நடைபெறுவதாக மேலும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவை உத்தியோகபூர்வமான புள்ளிவிபரங்களாகும். இதுதவிர மறைமுகமாக செய்யப்படுகின்ற கருக்கலைப்புகள் தொடர்பான விபரங்கள் எமக்கு தெரியாது. சிலவேளை அவற்றையும் சேர்த்து பார்ப்போமானால் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். அதேநேரம் வருடமொன்றிற்கு 380,000 குழந்தைகள்தான் இலங்கையில் தாய்மார்களினால் பிரசவிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலை காணப்படும்போது எவ்வாறு நாம் சனத்தொகை இயற்கை அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என்பது வெளிப்படையானதே. முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் கருக்கலைப்பு என்பது மார்க்கரீதியாக தடுக்கப்பட்டதொன்றாகும். சிலவேளைகளில் தமது அறியாமை காரணமாகவும் பொருளாதார சூழ்நிலைகளினாலும் கருக்கலைப்பு செய்கின்ற முஸ்லிம்கள் இருக்கின்ற போதிலும் அந்த எண்ணிக்கையானது மிகவும் சொற்பமானதே.
இதுதவிர கடந்த காலங்களில் பகிரங்கமாகவே குடும்பக்கட்டுப்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டன. “நாமிருவர் நமக்கிருவர்” என்றும் “சிறிய குடும்பம் தங்கமான குடும்பம்” என்றும் அரசாங்கமே பிள்ளைகளை அளவோடு பெற்றுக்கொள்ள மக்களை உற்சாகப்படுத்தியது. இதற்கான விளம்பரங்களும் ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டன. நிரந்த குடும்ப கட்டுப்பாடுகளை செய்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் வழங்கப்பட்டன. நிரந்தர குடும்பக்கட்டுப்பாடு என்பது முஸ்லிம்களால் வரவேற்கப்பட்ட ஒன்றல்ல. இந்த நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு முறையானது கிராமப்புற மக்களுக்கு அவர்களின் பொருளாதார சுமைகளில் இருந்து விடுபடுவதற்கான ஒரு மாற்று வழியாக தென்பட்டதை நாம் மறுக்க முடியாது. இந்த நிலைமையானது சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகை அதிகரிப்பை வெகுவாக குறைத்துள்ளதாகவே தென்படுகிறது.
மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கை அமுலுக்கு வந்த பின்னர் அதிகளவிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெண்கள் பெற்றனர். வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அதிகளவிலான பெண்கள் உயர்கல்வியின் நிமித்தமும் வேலை வாய்ப்புகளுக்காகவும் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மாத்திரம் 800,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்களில் அதிகமானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாவர். மலேசியா, சிங்கப்பூர், போன்ற வேறு நாடுகளுக்கும் கூட அதிகளவிலான பெண்கள் இன்று பணிபுரிய செல்கின்றனர். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் தமது கலாச்சார காரணிகளினால் அவர்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பது பெருமளவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
(தொடரும்)

Post a Comment