Header Ads



பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக 2 பழங்குடியின பெண்கள் தேர்தலில் போட்டி

பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக 2 பழங்குடியின பெண்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பல மாநிலங்களில் பழங்குடியினர் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதிகளில் இப்பொழுதும் பழமைவாத போக்கு நிலவுகிறது. பெண்கள் கல்வி கற்கக் கூடாது, முகத்தை மறைக்காமல் எங்கும் வெளியே செல்லக் கூடாது, ஆண்களுடன் பேசக் கூடாது, ஓட்டு போடுவதற்கு தடை என்று அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இந்த விதிமுறைகள் இன்னும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. 

இந்த சூழ்நிலையிலும் 2 பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். பாகிஸ்தானில் மே 11ம் தேதி 342 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்கவா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இத்தேர்தலில் பழங்குடியினர் அதிகம் வாழும் பஜாவுர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பதம் ஜாரி என்ற 40 வயது பெண் நேற்றுமுன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கைபர் பக்துன்கவா மாநிலத்தில் லோயர் திர் நாடாளுமன்ற தொகுதிக்கு நுஸ்ரத் பேகம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக கூறியுள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் பரவலாக அரசியலில் ஈடுபட்டு வந்தபோதிலும், தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

பதம் ஜாரி கூறுகையில், ''எந்த உறுப்பினரும் பெண்களின் பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவது இல்லை. பழங்குடியினர் பகுதிகளில் வாழும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். நான் தேர்தலில் போட்டியிட யாருக்கும் பயப்படத் தேவையில்லை. விரைவில் பிரசாரத்தை தொடங்கவுள்ளேன்'' என்றார்.

லோயர் திர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ள நுஸ்ரத் பேகம் கூறுகையில், ''இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக்,இ,இன்சாப் கட்சியில் மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறேன். எனக்கு கட்சியில் சீட் கொடுக்கவில்லை. எனவே சுயேச்சையாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்'' என்றார்.

No comments

Powered by Blogger.