Header Ads



முஸ்லிம்களை எதிர்க்க ஒன்றுபடுவது..!


(A.J.M. மக்தூம்)

எமது தோற்றம், நிறம் போன்றவை ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுவது போன்றே எமது பார்வை, சிந்தனைகள் போன்றவையும் ஒருவருக் கொருவர் வித்தியாசமானதாகவே அமைந்திருக்கின்றன. அதனை தொடர்ந்து எமது கருத்துக்களும்  வித்தியாசமைடையவே செய்யும். ஒரு சமூகத்தை சார்ந்த அனைவரும்  ஒரே கருத்தையுடையவர்களாக ஒரு போதும் இருக்க முடியாது என்பதே  நடைமுறை யதார்த்தம். இதே நிலைதானே எம்மை எதிர்ப்பவர்களுக்கும் உள்ளது. அவர்களின் பக்கம் பொய், புரட்டு, ஏமாற்று, மோசடி, அநீதம் இருப்பது அவர்களைச் சார்ந்த சமூகத்தாருக்கு வெட்ட வெளிச்சமான பிறகும் அவர்களின் தொடர் மௌனம் மற்றும்  சிலர் அதற்கு கூறும் நியாயம்  என்பன  அவர்கள் அனைவரும்  முஸ்லிம் எதிர்ப்புக்காக ஒன்று பட்டு விட்டதை தெளிவாகவே உணர்த்துகிறது. 

முஸ்லிம் சமூகத்தை எதிர்த்து இனவாதத்தை தூண்டும் பொதுபலசேனா பகிரங்கமாக முழு சிங்கள சமூகத்தின் ஆதரவை பெறாத போதும், மறைமுகமாக அரசியல் பின்புலத்துடன் அவர்களுக்காக பச்சைக் கொடி காட்டி முன்னேறி செல்ல ஊக்கம் கொடுக்க பல்லாயிரக் கணக்கானோர் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவான உண்மை. 

முஸ்லிம்களைப் பொருத்தவரை அநீதம் எந்தப் பக்கம் இருந்த போதும் அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். அதற்கு ஓர் எடுத்துக் காட்டாக பங்களாதேஷ் பன்சலை உடைப்பு சம்பவத்தைக் குறிப்பிடலாம். அதன் போது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எத்தனை முஸ்லிம் பள்ளிகள் இலங்கையில் தாக்கப்  பட்ட போதும் அதற்கு எதிராக அவர்களில் யாருமே சரியான முறையில் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவில்லை. அதன்போது அநாகரிகமாக நடந்த அவர்களின் நடத்தைகள் வெளிச்சத்துக்கு வந்த பின்பும் அதனை மூடிமறைக்க முற்பட்டனர். இன்னும்  முயற்சிக்கின்றனர். பெரும் பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு சிறு பிரிவினரே முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை வெளிப் படுத்துகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் பௌத்த சமூகத்தை சேர்ந்த பெரும் பான்மையானவர்களின் ஆதரவை இவர்கள் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் இன்னுமொரு பக்க உண்மையாகும். 

தமது மதத்தை பலப் படுத்த அநியாயம், அக்கிரமங்களில் ஈடுபட அவர்களின் மதம் அவர்களுக்கு அனுமதிக்கிறதோ இல்லையோ இஸ்லாம் எமக்கு அதனை அனுமதிக்கவில்லை. எல்லா நிலைகளிலும் நேர்மையாகவும், நீதமாகவுமே நடக்குமாறு எமக்கு கட்டளை இடுகிறது இஸ்லாம். இதனையே பின்வரும் அல் குர்ஆன் வசனமும் எமக்கு போதிக்கிறது.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (5:8)

அகிலத்தின் இரட்சகனான அல்லாஹ்வை அவர்கள் இழிவாக சித்தரிக்கின்றார்கள் என்பதற்காக கூட அவர்களின் தெய்வங்களை ஏசிப் பேசுவதற்கு  இஸ்லாம் எமக்கு அனுமதிக்கவில்லை. அதே போன்று சம்மந்தப் படாத எவரையும் தாக்குவது, சஞ்சலப் படுத்துவது, சட்டத்தை கையில் எடுத்து செயல் படுவது போன்றவட்டையும்  தடை செய்துள்ளது இஸ்லாம். பரம எதிரிகளையும் மன்னித்து, விட்டுக் கொடுத்து, அவர்களுடன் பண்புடன் நடந்து கொண்ட வரலாற்றையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்களே முஸ்லிம்கள். நமது இந்த இஸ்லாமிய பண்புகளை அந்நிய சமூகத்தாருக்கு தெளிவு படுத்துவதும், நடைமுறைப் படுத்தி காட்டுவதும் காலத்தின் தேவையாக உள்ளது. 

ஜம்மியத்துல் உலமாவின் தீர்மானத்தில் முழுமையான உடன்பாடு எனக்கு இல்லை. அவர்களும் பல தரப்புகளுடன் ஆய்வு செய்த பின்பே இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.  அவர்களின் இந்த தீர்மானத்துக்கான சரியான தெளிவை முடியுமான வழிகளில் மக்களுக்கு வழங்குவது அவர்களின் பொறுப்பாகும்.  ஒரு இறை விசுவாசியைப் பொறுத்த வரையில் அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி செய்திருக்க வேண்டும் என்று பேசாது அதனை இறைவனின் நாட்டம் என ஏற்றுக் கொண்டு தற்போதைய நிகழ்வின் மூலம் பாடம் கற்றுக் கொண்டு எதிர் காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ளலாம் என திட்டமிடுவதே அவசியம். 

அந்த வகையில் முதலில் எதிரிகள் ஹலால் விவகாரத்தின் மூலம் எதனை திட்டமிட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்வது அவசியமாகும். சிங்கள சமூகத்தைப் பொறுத்த வரையில் ஹராமானதையே எந்த கட்டுப் பாடும் இன்றி உன்ன முடியுமாக இருந்தால் ஹலாலானதை உண்ணுவதில் எந்த தடையும் இருக்க முடியாது. அப்படி இருந்தும் ஏன் இதனை இவ்வளவு தூரத்துக்கு எதிர்க்க வேண்டும் என்று யோசித்தால் முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைத்து அவர்கள் மத்தியில் விரோதத்தை வளர்த்து பலமிழக்கச் செய்வதே அவர்களின் திட்டம் என்பதை நான் கூறாமலேயே உங்களில் அநேகமானவர்கள் புரிந்தே வைத்திருப்பீர்கள். அதன்  பின்பு அவர்களின் ஏனைய திட்டங்களை கட்டவிழ்த்து முஸ்லிம் சமூகத்தை வீழ்த்துவது அவர்களுக்கு இலகுவாகி விடும். இதற்கு நம்மில் உள்ள முரண்பாடுகள் அவர்களுக்கு துணையாகி விடாமல் தற்காத்துக் கொள்வது அவசியமாகும். 

எனவே தற்காலிகமாகவேனும் நாம் நமக்குள் விமர்சித்துக் கொள்வதையும், கண்டித்துக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்வோம். எதிரிகளின் திட்டங்களை முறியடிக்க திடசங்கற்பம் பூணுவோம். எமது மத சுதந்திரத்தையும், உரிமையையும் உலகிலுள்ள எவராலும் பறிக்க முடியாது. அதனை எம்மால் விட்டுக் கொடுக்கவும் முடியாது. அதனை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம். எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருந்த போதும் எமது எதிரியை தோற்கடிக்க ஒரே குரலில் பேசுவோம். நமது உரிமைகளை வென்றெடுக்கவென பல்துறை சார்ந்த நிபுணர்கள் குழுவொன்றை தெரிவு செய்வோம் அவர்களின் தீர்வு யோசனைகளை அனைவருமாக ஏற்றுக் கொள்வோம். எதிரிகளின் பக்கம் நியாயம் இல்லாத போதும் முஸ்லிம் எதிர்ப்புக்காக அவர்களால் ஒன்று சேர முடியுமாக இருக்கும் நிலையில் அநியாயம், அக்கிரமங்களைக் கூட அவர்களால் அங்கீகரிக்க முடியுமாக இருந்தால்  எமது பக்கம் நியாயம் இருந்தும் ஏன் எம்மால் ஒன்று  பட முடியாமல் இருக்கிறது? அவர்களுக்கு ஹலாலாகி விட்ட ஒற்றுமை எமக்கு ஹராமாகி விட்டதா?!

2 comments:

  1. ஆக்கபூர்வமான கருத்துக்கள்.

    ReplyDelete
  2. காலத்துக்கேற்ற கருத்துரை.நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.