அடுத்து எமது பணி..!
(Rifan Hussain)
ஹலால் விவகாரத்தில் 11.03.2013 ஆம் திகதி ஜம்இய்யதுல் உலமாவின் வெளியிடப்பட்ட முடிவு எமது சமுகத்தின் மத்தியில் பல்வேறு வகைப்பட்ட வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் ஒவ்வொருவரும் அதற்கு சாதகமாகவும் அதை எதிர்த்தும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பவர்கள் மிகவும் காரசாரமாக தமது கவலையை வெளிப்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. உண்மையில் இந்த முடிவினை ஜீரணிப்பது பலருக்கு கஸ்டமான ஒன்றுதான்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா என்பது எமது நாட்டில் முஸ்லிம் சமுகத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. நாம் விரும்பியோ விரும்பாமலோ 90 வீதத்திற்குமதிகமானவர்கள் இன்று அந்த தலைமைத்துவத்தை ஏற்றுள்ளார்கள். இந்த நாட்டு அரசாங்கமும் பெரும்பாண்மை சமுகமும் கூட முஸ்லிம்களின் அதிகாரபூர்வமான தலைமைத்துவமாக இன்று ஜம்இய்யதுல் உலமாவை அங்கீகரித்துள்ளார்கள்.
ஜம்இய்யதுல் உலமாவும் கூட இந்நாட்டில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்புக்களான தப்லீஹ் ஜமாஅத், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஹுப்புல் அவ்லியா போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகவே தனது குழுவை அமைத்துள்ளது. எனவே இதை விட பொருத்தமான ஒரு தலைமைத்துவத்தை பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்குவது கடினமே. ஒரு குறித்த இயக்கத்தினர் அல்லது ஒரு குறித்த கருத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரம் உள்வாங்கப்பட்ட ஒரு அமைப்பாக ஜம்இய்யதுல் உலமா இருந்திருப்பின் முழு இலங்கை முஸ்லிம் சமுகத்திற்கும் தலைமைத்துவத்தை வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும்.
பலரும் சொல்வது போல ஜம்இய்யதுல் உலமாவின் மாற்றங்கள் வர வேண்டும். இன்னும் பொருத்தமானவர்கள் உள்வாங்கப்படல் வேண்டும் என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால் அவர்களும் மனிதர்களே. நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ கடந்த பல வருடங்களாக இச்சமுகத்திற்கு நன்மையிலும் தீமையிலும் ஒரு தலைமைத்துவத்தை அவர்கள் வழங்கி வந்திருக்கின்றார்கள். இன்று இலங்கை வாழ் முஸ்லிம் சமுகம் அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தும் கொண்டிருக்கின்றது.
ஹலால் சம்பந்தமாக அவர்களால் அறிவிக்கப்பட்ட முடிவு ஒரு சூரா முடிவே. தனிப்பட்ட ரீதியில் உலமா சபைத் தலைவரின் முடிவல்ல. சூரா முடிவு என்று வருகின்ற போது தமைத்துவத்தினால் எடுக்கப்பட்ட முடிவிற்கு கட்டுப்படுவதைத் தவிர ஒரு முஸ்லிமால் வேறு எதையும் செய்ய முடியாது. அந்த முடிவு குறுகிய நோக்கங்களுக்காக அல்லது சுயலாபங்களுக்கான எடுக்கப்பட்டதாக இருக்குமானால் அது அல்லாஹ்விற்கும் தலைமைத்துவத்திற்கும் இடைப்பட்ட விடயம். அதற்கு அவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக் கொள்வார்கள். அதற்கு பத்வா கொடுக்கும் அதிகாரமோ அதனை விமர்சிக்கும் அதிகாரமோ எம் யாருக்கும் இல்லை.
ஹலால் சம்பந்தமான முடிவில் நாம் தோற்றுப் போய் விட்டோம். பேரினவாதத்திற்கு அடிபணிந்து விட்டோம் என்ற எண்ணக்கருக்கள் பலரின் மனிதில் இன்று தோன்றியுள்ளமை யதார்த்தமே.
அல்லாஹ்வுடன் நேரடித் தொடர்புடனிருந்த அல்லாஹ்வின் ஹஸுல் அவர்கள்; தாங்கள் பலமாக இருந்த நிலையிலும் ஹுதைபியா உடன்படிக்கையை காபிர்களுடன் மேற்கொண்டு சில விட்டுக் கொடுப்புக்களை செய்தார்கள். அன்று எம்மைப் போல ஒரு சில சஹாபாக்கள் சஞ்சலப்பட்டார்கள். ஆனால் அல்லாஹ் அந்த உடன்படிக்கையை அங்கீகரித்தான். அதில் வெற்றி இருப்பதாகவும் உணர்த்தினான்.
இந்த இடத்தில் ஹுதைபியா உடன்படிக்கையுடன் ஹலால் முடிவை நான் ஒப்பிடவில்லை. ஆனால் ஹுதைபியா உடன்படிக்கை முலமும் அல்லாஹ்வின் றஸுல் எமக்கோர் முன்மாதரியைக் காட்டித்தந்துள்ளார்கள்.
எனவே இந்த நேரத்தில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவது தான் முஸ்லிம்கள் என்ற வகையில் நாங்கள் செய்யக் கூடிய பணி. மாறாக அந்த முடிவை விமர்சிப்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகவே கருதப்படும்.
எமது சமுகத்திற்கெதிரான பிரச்சினைகள் இந்த ஹலால் உடன் முற்றுப் பெறப்போவதில்லை. அடுத்து ஹிஜாப், முஸ்லிம் தனியார் சட்டம், இஸ்லாமிய வங்கி, பாடசாலைகள் என தொடரப் போகின்றன. எனவே அதனை எதிர்நோக்குவதற்காக எம்மை தயார் படுத்த வேண்டிய நிலையில் தற்போது நாங்கள் உள்ளோம். மாறாக ஹலால் முடிவை விமர்சிப்பதிலேயே காலம் கடத்தினால் பல பிரிவுகளாக நாங்கள் பிரிந்து மேலும் பலவீPனமான ஒரு சமுகமாக மாறக் கூடிய ஆபத்து காணப்படுகின்றது. இன்று பொது பல சேனாவின் நடவடிக்கைகள் பிரிந்து கிடந்து முஸ்லிம் சமுகத்தை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைத்துள்ளது. ஹலால் விரச்சினை மூலம் ஜம்இய்யதுல் உலமாவையும் முஸ்லிம் உம்மாவையும் பிரிப்பதற்கு அவர்கள் போட்ட திட்டம் தோல்வியடைந்து விட்டது.
ஹலால் முடிவு வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து முஸ்லிம் சமுகம் ஒரு சில விமர்சனங்களை வெளியிட்டதோடு அமைதி காத்தது. ஏற்கனவே குறிப்பிட்டது போல பலருக்கு இம்முடிவை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாக இருந்தாலும் கூட தலைமைத்துவத்திற்கு கட்டுப் பட்டு பொறுமை காக்கும் ஒரு சூழ்நிலையை காணக்கூடியதாகவுள்ளமை அல்லாஹ்வின் அருளே.
ஆனால் இவ்வாறானதோர் முடிவு அந்நிய பெரும்பான்மை சமுகம் மத்தியில் ஏற்பட்டிருந்தால் எத்தனை ஆலயங்கள் நெருப்பில் பொசிங்கியிருக்கும்? அந்த சமுகம் அவர்களது மதகுருமார்களுக்கு எதிராக கிளம்பி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். இதைத்தான பொது பல சேனா முஸ்லிம்கள் மத்தியில் எதிர்பார்த்ததும். ஹலால் முலமாகவே ஜம்இய்யதுல் உலமாவையும் முஸ்லிம் சமுகத்தையும் பிரித்து விடலாம் எனக் கனவு கண்டார்கள்.
எனவே, நாம் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைவோம். பிரிந்து கிடக்கும் சமுகத்திற்கு அல்லாஹ்வின் உதவி கிட்டாது. பேரினவாதிகளை சதிகளை முறியடிக்க எமது வளங்களை ஒன்று திரட்டுவோம். தூய்மையுடன் செயற்படுவோம். அல்லாஹ்வே எமக்கு போதுமானவன்

yes.verry good.
ReplyDeleteWallahi this true, May allah bless us
ReplyDelete