Header Ads



அக்கரைப்பற்று முனவ்வறா ஜூனியர் வித்தியாலய மாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகள்



(எஸ்.எல். மன்சூர்) 

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் காணப்படும், அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள ஒரு பாடசாலை முனவ்வறா ஜூனியர் வித்தியாலயமாகும். இவ்வித்தியாலயத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள், மாணவரின் அடைவு மட்ட அதிகரிப்பு, அதிபர் ஆசிரியர்களின் அயராத அர்ப்பணிப்பு, புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவு மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தெரிவாவது, க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் அதிகளவு மாணவர்கள் உயர்தரக் கற்கைக்காக தெரிவாவது போன்ற பல காரணங்களினால் இப்பாடசாலைக்கு வருடந்தோறும் அதிகளவான மாணவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இணைவதற்கான முயற்சிகளை பெற்றோர்கள் மேற்கொள்வார்கள். கடுமையான போட்டிக்கு மத்தியில்; குறிப்பிட்டளவு மாணவர்கள் மாத்திரமே இப்பாடசாலையில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இதற்கான காரணங்களை பார்க்குமிடத்து ஆசிரியர்களின் சிறப்பான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும், அதிபர் மற்றும் பிரதியதிபர்களின் விடாமுயற்சியும், தியாக சிந்தனையும், இப்பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களது ஊக்குவிக்கும் தன்மையும் நவீன முறையிலமைந்த பௌதீக வளப்பேறுகளும்தான் இந்நிலைமைக்கு காரணமாக அமைந்துள்ளதாக பலரும் கூறுவர். இப்பாடசாலையின் வெளிவாரி மதிப்பீட்டுக்காக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து பார்வையிட வருகை தந்திருந்த ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். எம்.ஏ. அபுதாஹிர் ஆரம்பக் கல்வி வகுப்பறைகளைப் பார்வையிடுவதையும், ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றல்பேறுகளை விருத்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவதையும், மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கும், கற்றலை மேம்படுத்துவதற்குமாக ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வித்தியாசமான முறைகளில் அமைந்துள்ள உபகரண மாதிரிகளை கற்றலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், மாணவர்கள் சுயமாகவும், மகிழ்ச்சிகரமான முறைகளில் கற்றலில் ஈடுபடுவதையும் ஆரம்பகல்வி வகுப்பறைகளில் காணப்படும் உபகரணங்களையும், மாணவர்களின் ஆக்கங்களையும் சிறப்பானமுறையில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளதையும் அத்துடன் அப்பாடசாலையின் வெளிச்சுவர் ஒன்றில்; மனிதர் ஒருவர் ஏணிகளை கிடத்திவிட்டு மதிலில் ஏறுவதற்கு முயற்சிக்கின்றார் என்பதைக் காட்டும் தத்ருபமான படத்தையும் இங்கு காணலாம்.

இவை போன்ற காரணங்களினால்தான் இப்பாடசாலையில் வருடந்தோறும் அதிகளவான மாணவர்கள் சேர்வதற்கு போட்டி போட்டுகின்றனர். இவ்வாறான ஒருநிலைமை அனைத்துப் பாடசாலைகளிலும் ஏற்படுமாக இருந்தால் எல்லாப்பாடசாலைகளும் அங்கு கற்கும் மாணவர்கள் அனைவரும் சிறப்பான இடத்தை வகிப்பதுடன், மாணவர்களின் கற்றலும், கற்றல் விருத்திகளும் மேம்படுவதற்கும், வழிவகுக்குமல்லவா?




No comments

Powered by Blogger.