Header Ads



இந்த தேசத்திற்கு ஒவ்வாத மார்க்கமா இஸ்லாம்..?

(அபூ அப்துல்லாஹ்)

நமது தேசம் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இனவாதம், பிரிவினைவாதம் போன்ற கொடிய நோயினால் தொடர்ந்தும் அழிவுகளையும் அமைதியின்மையினையும் முடிவில்லாமல் சந்தித்து வருகின்றது. இந்த நாட்டு மக்களிடம் காணப்படுகின்ற இனத்துவம் சார்ந்த உணர்வலைகளை அதிகாரப்போட்டியாளர்களும், அந்நிய சக்திகளும் தமது நலன்களை அடைந்துகொள்வதற்காக அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றமை மிகவும் தெளிவாகத் தெரிகின்ற உண்மையாகும்

இலங்கை தேசத்தின் முஸ்லிம் சமூகமும் பல்வேறு இக்கட்டான நிலைகளைத்தாண்டி இந்த தேசத்தில் தனக்கான இருப்பை நிலைநிறுத்துவதில் தொடர்ந்தும் முயன்றுகொண்டிருக்கின்றது. இவ்வாறாக ஸ்த்திரமற்ற சமூக அமைப்பைக்கொண்ட முஸ்லிம் சமூகத்தினுள்ளும் அதிகாரத்தை தக்கவைக்கும் எண்ணங்கொண்டோரும், செல்வாக்கினை நிலைநிறுத்த நாடுவோரும் தமது முயற்சிகளை அரங்கேற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.

எனவே இந்த இரண்டு நிலைகளிலும் தேசமும், அங்கு வாழும் சமூகங்களும் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றார்கள். 30 வருடகால யுத்தம் நிறைவுக்கு வந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை சமூகத்தை இந்த தேசத்தின் மூன்றாவது பெரும்பான்மை சமூகமாக அடையாளப்படுத்தப்படும் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புக்கொள்ளும் வகையில் ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தின் அதிகார விரும்பிகள் மற்றும் செல்வாக்கு நிலைநிறுத்த நாடுவோர் தமது நலன்களை முதன்மைப்படுத்தி வழிநடாத்த முயற்சிக்கின்றனர். எனவே இவ்விரு செயற்பாடுகளினாலும் மீண்டுமொரு அழிவினை நோக்கி தேசமும், வரலாற்றுரீதியான பின்னடைவை நோக்கி முஸ்லிம் சமூகமும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அல்லது அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இது ஒரு தீர்க்கமான சந்தர்ப்பமாகும்.

பெரும்பான்மை சமூகம் மிக நேர்மையான ஒரு மீளாய்வினை தமது சமூக மட்டத்தில் மேற்கொள்ளக் கடமைப்பட்டிருப்பதைப்போல இலங்கையின் முஸ்லிம் உம்மத்தும் அவ்வாறான ஒரு மீளாய்வினை மேற்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றது.

இஸ்லாம் ஒரு இயற்கையான மார்க்கம், இஸ்லாம் ஒரு பூகோள மார்க்கம், அது மனித வாழ்விற்கான உன்னத வழிகாட்டி இதுதான் எமது நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை சார்ந்து அதனைப் பின்பற்றுவோரது வாழ்வொழுங்கு அமைதல் வேண்டும். இது மிகவும் இயல்பான எதிர்பார்ப்பாகும். ஆனால் இலங்கையில் அவ்வாறான ஒரு நிலையினை எம்மால் அவதானிக்க முடியாதிருக்கின்றது. இலங்கைத் தேசத்தில் 1000 வருட வரலாற்றைக்கொண்ட முஸ்லிம்கள் இந்த தேசத்தில் ஏற்படுத்திய மாற்றம் எத்தகையது? இங்குதான் நாம் எல்லோரும் மௌனித்துப் போகின்றோம்.

இலங்கை முஸ்லிம்கள் பூகோள மார்க்கமான இஸ்லாத்தை, இயற்கை மார்க்கமான இஸ்லாத்தை, மனிதவாழ்விற்கான வழிகாட்டியாகிய இஸ்லாத்தை தவறான அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கின்றார்கள். தம்மை ஏனைய இனத்துவங்களில் இருந்து பிரித்து அடையாளப் படுத்துவதற்கு இஸ்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. எமது மண்ணில் செயற்பாட்டில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் தமது செல்வாக்கினை நிலைநிறுத்துவதற்காக தமது வழிமுறைகளை இலங்கை முஸ்லிம்களை நோக்கியதாக மட்டும் ஒழுங்குசெய்தார்கள். 

இதன்விளைவாக சிறுபான்மை சமூகமொன்று தன்வசமிருந்த உன்னதமான மார்க்கமொன்றின் சரியான பயன்பாட்டை அடையவில்லை, இங்கே காணப்பட்ட இஸ்லாமிய இயக்கங்களும் இந்த உம்மத்தில் வெற்றிகாணவில்லை. இதன் விளைவாக வெளியில் இருந்து வரும் புறத்தாக்கங்களுக்கு முகம்கொடுக்க முடியாத ஒரு சமூகமாக இலங்கை முஸ்லிம் சமூகம் தன்னை ஆக்கிக்கொண்டது.

இந்த நிலையில் ஒரு மீளாய்வு குறித்து நாம் சிந்திக்கும்போது என்னுள் எழும் சில கேள்விகள் இந்த இடத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகின்றேன்.

      அல்-குர் ஆன் 396 இடங்களில் “மனிதன்” அல்லது “மனிதம்” குறித்துப் பேசுகின்றது. 

3:4. இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான்

2:168. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;

இதுபோன்று இன்னும்பல இடங்களில் அல்லாஹ் மனிதர்களை விழித்துப் பேசியிருக்கின்றான். இவ்வளவு தூரம் இஸ்லாம் மனிதம் குறித்துப்பேசியிருக்க இலங்கை முஸ்லிம்களின் வாழ்வொழுங்கும் தஃவா ஒழுங்கும் மனிதம் குறித்து கவனம் செலுத்தியிருக்கின்றதா அல்லது முஸ்லிம்கள் குறித்து கவனம் செலுத்தியிருக்கின்றாதா?

      இஸ்லாம் மத சகிப்புத்தன்மை, மற்றைய மதத்தவரை மதித்தல் போன்ற விடயங்களில் வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றது. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மதரீதியான சகிப்புத் தன்மையின் உண்மையான நிலை எதுவாக இருக்கின்றது. அந்நியவர்களுக்கு இடையூறு ஏற்படத்தக்க எத்தனையோ காரியங்களில் எமது சமூக ஈடுபடுகின்றதா? அல்லது தவிர்ந்திருக்கின்றதா? மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுகின்றபோதும், வாழ்வியல் நடத்தைகளின்போதும் எம்மால் அடுத்தவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பது உண்மையானதா?

      இந்த தேசத்தின் முஸ்லிமல்லாதோர்க்கு மத்தியில் இஸ்லாத்தின் தூதை முன்மாதிரிகளின் அடிப்படையில் எடுத்துச்சென்றோமா அல்லது வேறு ஊடகங்கள் முறைமைகளில் எடுத்துச் சென்றோமா?

      இஸ்லாம் ஒரு இயற்கையான மார்க்கம், மனித இயல்புகளோடு கூடிய, இயற்கையோடு இயைந்துசெல்கின்ற கடமைகளை இஸ்லாம் எம்மீது விதியாக்கியிருக்கின்றது அவற்றை சரிவர அமுலாக்குவதிலும் அவற்றினால் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் நன்மைகளை சரிவர அடைந்துகொள்வதிலும் அவற்றை அடிப்படையாகக்கொண்டு சமூக ஒழுங்கை நிலைநாட்டுவதிலும் நாம் கவனம் செலுத்தியிருக்கின்றோமா? உதாரணமாக ஜும் ஆ என்னும் கடமை எம்மால் சரிவரப்பயன்படுத்தப்படுகின்றதா? அல்லது மாற்றுவழிகளை அறிமுகம் செய்வதில் நாம் முன்னிற்கின்றோமா?

      சிறுபான்மை தேசமொன்றில் சகவாழ்வு குறித்த தீர்க்கமான நிலைப்பாடுகளை வரையறுத்து அதனடிப்படையில் வாழும் சமூகமா இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளம் செய்ய முடியுமா? வணக்கஸ்த்தலங்களை அமைப்பது முதல்கொண்டு முஸ்லிம் உம்மத்தின் எல்லாவிதமான செயற்பாடுகளும் சகவாழ்வை உறுதிசெய்வதாக அமைகின்றதா?

இவ்வாறான வினாக்கள் எம்முன்னால் எழுகின்றபோது நாம் நிலைகுலைந்து போகின்றோம். உணர்ச்சிவயப்படுகின்றோம், ஆதங்கப்படுகின்றோம். இதற்குப்பின்னணியில் ஒரு மிக முக்கியமான காரணி காணப்படுகின்றது. இலங்கையில் முஸ்லிம்கள் தருவிக்கப்பட்ட இஸ்லாத்தையே பின்பற்றுகின்றார்கள், அது சவுதியில் இருந்தும், எகிப்தில் இருந்தும் பாகிஸ்த்தானில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் தருவிக்கப்பட்ட இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றார்கள். எமது தேசத்திற்கான இஸ்லாம் குறித்து நாம் இன்றுவரை சிந்திக்கவில்லை. இதன் விளைவாக இந்த தேசத்திற்கு ஒவ்வாத மார்க்கமாக இஸ்லாத்தை நாம் அடையாளம் செய்திருக்கின்றோம்.

“நாம் வாழும் தேசத்தில் எம்மோடு வாழும் ஏனைய இனத்துவங்கள், இங்கே அமுலில் இருக்கும் மதங்கள் என்வற்றை கருத்தில்கொண்டும் இந்த தேசத்தின் இயல்புகளை கருத்தில்கொண்டும் இந்த தேசத்தின் இயற்கை நிலைகளை கருத்தில்கொண்டும், அவற்றுடன் ஒத்துச்செல்கின்ற நடைமுறைகள் குறித்து இலங்கை முஸ்லிம் சமூகம் சிந்திக்கவேண்டும். இஸ்லாத்தின் அடிப்படைகளில் மாற்றம் இல்லாதவாறு  அதன் கிளை அம்சங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் நிலைப்பாடுகளை வகுத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றது. அத்தகைய சிந்தனைகளின் அடிப்படையிலான வாழ்வொழுங்கு குறித்து நாம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். 

இதுவே இந்த தேசத்தில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரசினைகளுக்குமான தீர்வாக அமையும். மாற்றமாக இஸ்லாத்தின் இயற்கைத் தன்மைக்கு மாறுசெய்யும் அமைப்பில் மேற்கொள்ளப்படும் எல்லாத்தீர்வுகளும் நிரந்தரமற்றவையே.



No comments

Powered by Blogger.