Header Ads



இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான சவால்கள் - கலாநிதி எம். எஸ் எம். அனஸ்

(இக்பால் அலி)

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான சவால்களை எதிர் கொள்வதற்கு கிராமங்களின் வரலாறுகளும், கிராமங்களை வழிநடத்திய தலைவர்களின் வரலாறுகளும் எழுதப்பட வேண்டும்.  கிராமப் பண்பாட்டு வாழ்க்கையில் எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் பங்கேற்றவர்களின் பங்களிப்புக்களை உட்படுத்திய வரலாறுகளும்  கிராமங்களின் பழமையை பிரதிபலிக்கும் கட்டிடங்கள் மற்றும் புராதனப் பொருட்கள் என்பவற்றைக் கூறக்கூடிய விபரத் தொகுப்புக்கள் ஒவ்வொன்றும் இன்று எமது கவனத்திற்கு வந்தாக வேண்டிய ஒரு கட்டாய நிலையில் நாம் இருக்கின்றோம் என்று பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறைப் பேராசிரியர் கலாநிதி எம். எஸ் எம். அனஸ் தெரிவித்தார்.

ஹெம்மாதகம முஸ்லிம் கல்வி கலாசார சங்கம் ஏற்பாட்டில் முன்னாள் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம். ஐ. எம். அமீன் எழுதிய ஹெம்மாத்தகம முஸ்லிம்கள் வரலாறு நூல் வெளியீட்டு விழாவும் பாராட்டு விழாவும் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் ம. வி பிரதான மண்டபத்தில் விழாக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர்  எம். கே. எம் நயீமமுதீன் தலைமையில் இன்று நடைபெற்றது. பிரதம அதிதியாக அஷ்ஷெய்ஹ் யூசுப் ஹனீபா முபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழக மெய்யியல்துறைப் பேராசிரியர் கலாநிதி எம். எஸ் எம். அனஸ் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,,

முஸ்லிம்கள் பெருமைப் படக்கூடிய மகத்தான வரலாறு இலங்கை மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றிருப்பது என்பது இன்று கேள்விக்கு இடமற்ற ஒன்று. ஆனால் முஸ்லிம் வரலாற்றைப் பொறுத்த வரை இது சாதாரண விடயம் அல்ல. அது சாதனையாகும். வரலாற்றை இயல்பாக கட்டியெழுப்பக்கூடிய பல்வேறு வரலாற்று சாதணங்களையும் சாட்சியங்களையும் தொலைத்து நிற்கும் அப்பாவித்தனமான மக்கள் கூட்டம் என்று இலங்கை முஸ்லிம்களை ஆணித்தரமாக கூறமுடியும். துஹ்பதுல் முஜஹ்ஹிதீன் என்ற 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரபு நூல் கேரள முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத பெரும் வரலாற்று ஆவனமாக இன்று கொண்டாடப்படுகின்றது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் உலகை வந்தடைந்துள்ளன. 

வரலாற்றை கட்டியெழுப்புவது சாதாரண வியடம் அல்ல. சரியாகவோ பிழையாகவோ சாதகமாண முறையில் வரலாற்றை நிறுவக்கூடிய அது கதைகளாகக்கூட இருக்காலம். அது ஆவணங்களாக பேணப்பட வேண்டும் அதற்குரிய பதிவுகளை அது கொண்டிருக்க வேண்டும். விஜயனின் வரலாறு  ஒரு பாரம்பரிய நம்பிக்கை ஒன்றில் இருந்து உருவாக்கப்பட்ட கதை என்பது நம்மில் பலருக்குத் தெரியாது.  

இவ்வகையான அடிப்படையான தகவல்கள் இல்லாமல் இருப்பது முஸ்லிம்களின் வரலாற்றை உருவாக்குவதில் எவ்வளவு பெரிய பின்னடைவு என்பது  இலங்கை முஸ்லிம் வரலாற்றைத் தெளிவோடு அனுகக்கூடிய எவரும் எதிர் கொள்ளக்கூடிய ஒரு அடிப்படையான பிரச்சினையாகும். சிங்கள மக்களின் மஹா வம்சம், தமிழ் மக்களின் யாழ்ப்பாண வைபவ மாலை என்று அந்தப் பெரு நூல்கள் பற்றியதாக மட்டுமல்ல. அந்த இரண்டு  சமூகத்திலும் இன்னும் காணப்படக் கூடிய எல்லையற்ற இலக்கிய ஆதாரங்கள் என்ற வகையில் பார்த்தாலும் கூட நாம் முன்வைக்கக்கூடிய தொன்மை ஆதாரங்கள் எவை. இது ஒரு முக்கிய கேள்வியாகும். 

அது மட்டுமல்ல இது வரலாற்றைப் பொறுத்த வரை இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற நெருக்கடியான கவலைக்குரிய நிலை என்பதை பொதுமக்கள் அறிய வேண்டும். முஸ்லிம்களின் வரலாற்றை கட்டியெழுப்புவது என்பது புதிதாக செயற்கையாக சிலர் கூடி சில பொருட்களைக் கொண்டு உருவாக்கக்கூடிய ஒரு விடயம் அல்ல. பழமையையும் அதை உறுதிப்படுத்தக்கூடிய காலக் கணிப்பபீடு என்று ஒரு தொன்மையை நோக்கி நாங்கள் பயணப்பட வேண்டி உள்ளது. முஸ்லிம்களைப் பொறுத்த வரை கிடைக்கக்கூடிய வரலாற்று சாதாணங்கள் மற்றைய இனங்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும். சுருக்கமாக சொல்வதானால் கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், சியாரங்கள் இன்னும் தெளிவாக சொல்வதானால் மீஸான்கள் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் எமது வரலாற்றின் தொன்மையை பல சந்தர்ப்பங்களில் நிறுவக்கூடிய ஒரு வாய்ப்பை பெற்றிருக்கின்றோம். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு தொன்மையான கல்வெட்டு ஆதாரங்களில் இருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவையை மீஸான்களும் மீஸான்களில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களும் ஆண்டுகள் பற்றிய குறியீடுகளும் எமக்குப் பெரும் ஆதாரங்களாக விளங்குகின்றன. 

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் அரபு இஸ்லாமிய நாகரீகத் துறைத் தலைவர் பேராசிரியர் இமாம் அவர்கள் எனது ஞாபகத்தின்படி இலங்கை  முஸ்லிம்களின் வரலாற்றை எழுதும்போது அது குறைந்தது  கி.பி 8ம் நூற்றாண்டில் இருந்து ஆரம்பிக்கின்றது. என்பதை மீஸான்களில் பொறிக்கபட்டுள்ள அரபு லிபிகளின் காலக் கணக்கீடு மற்றும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள அந்த மனிதர்களின் இறந்த ஆண்டு என்பவற்றைக் கொண்டு அவர் நிறுவியுள்ளார். இவ்விதம் மீஸான்களைக் கல்வெட்டுக்களாக பயன்படுத்தியும் பண்டைய கட்டிடங்களாக பள்ளிவாசல்களையும் தர்ஹாக்களையும் பயன்படுத்தியும் ஒரு திட்டவட்டமான வரலாற்றை உருவாக்குவதற்கு போதுமான அவகாசம் எங்களுக்கு இருந்தும் அவற்றில் நாம் எவ்வளவு தூரம் கவனம் செலுத்துகின்றோம் என்பது கேள்விக் குறியாகி உள்ளது. பலவற்றை நாம் அழித்து வருகின்றோம், அதையும் விட அதிகமானவற்றை காலம் அழித்துள்ளது. இன்னும் சில சக்திகளும் இவற்றை அழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அண்மைக் காலங்களில் இவை எமக்கு அச்சமூட்டும் செயல்களாகவும் மாறியுள்ளன. 

இந்தப் பின்னணியில் இருந்து எமது வரலாற்றை அதன் உறுதித்தன்மையை நாம் நோக்க வேண்டும். வரலாறு ஏதாவது ஒரு மொழியில் எழுதப்படலாம். அது தமிழ் அல்லது ஆங்கிலாமாக இருக்கலாம். ஆனால் வரலாற்றின் மொழி வேறு. அதற்கு ஒரு பொது மொழி உண்டு. வரலாற்று சான்றுகள் - கல்வெட்டுக்கள், நாணயங்கள், தொன்மைப் பொருட்கள், பண்டைய கட்டிடங்கள், இரும்பு செம்பு வெண்கலம் வெள்ளிகளாளான தடையங்கள், சன்னச மற்றும் சாசணங்கள் இவைதான் வரலாற்று மொழி. மற்றது நம்பகத் தன்மைக்குரிய இலக்கிய, ஆவண ஆதாரங்கள். முன்னர் கூறியது போல இந்த விடயங்களில் இலங்கை முஸ்லிம் வரலாறு எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றது என்பது நாம் ஆழமாக நோக்க வேண்டிய ஒரு விடயம். வரலாற்றின் மீதான எமது பார்வையும் அதை விளங்கிக் கொள்வதில் எமக்கிருக்கின்ற தடையும் எமது வரலாற்றை பாதுகாப்பதில் இருந்தும் அதை சரியாக சொல்வதற்குரிய வழிமுறைகளை பயன்படுத்துவதில் இருந்தும் எம்மை நாமே தூரப்படுத்தியுள்ளோம். 

இதனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எமது முயற்சி முன்னரிலும் வேகமாகவும் ஆழமாகவும் செயல்பட வேண்டி உள்ளது. எம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு வரலாற்று ரீதியான சவால்களுக்கு நாம் பதில் சொல்லத் தகுந்த ஆயுதங்களாக அவற்றைப் பயன்படுத்த அவற்றின் வரலாற்றுப் பெறுமானங்கள் பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும். 

இந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நவீன காலத்தில் நமக்கு அறிமுகம் செய்த ஏ.எம்.ஏ அஸீஸ் அவர்கள் முஸ்லிம்களின் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் கிராம வரலாறுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். 1962ம் ஆண்டு 'நெஞ்சில் நிறைந்தவர்' என்ற நூலுக்கு அணிந்துரை எழுதும்போது அவர் இதை மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களின் வரலாறும் அங்கு சேவை புரிந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் எழுதப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை வரலாற்றைக் கட்டியெழுப்பும் எமது ஒரு முக்கிய தேவையை நிறைவு செய்யலாம் என்ற கருத்தில் யோனகபுர ஹம்சா எழுதியுள்ள அந்த நூலில் அஸீஸ் குறிப்பிட்டுள்ளார். 

இன்று ஹெம்மாத்தக்கமையில் வெளியிடப்படும் எம்.ஐ.எம் அமீன் அவர்களின் 'ஹெம்மாத்தக்கம முஸ்லிம்கள்' என்ற நூல் மத்திய மலைநாட்டின் உட்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய முஸ்லிம் கிராமத்தின் தொன்மையையும் வரலாற்றையும் எமக்கு வழங்குகின்றது. இந்த நூலை நுட்பமாக ஆராயும் போது மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றிய இன்னும் விவாதிக்கப்படுகின்ற ஒரு விடயத்திற்கு எம்மை எம்.ஐ.எம் அமீன் தந்துள்ள சில வரலாற்றுத் தகவல்கள் மிக மிக சாதகமான ஆதாரங்களுக்கு  வழிநடத்துகின்றன. 

ஹெம்மாத்துகம பிரதேசத்தில் நிலவும் பரம்பரைக் கதை ஒன்றை ஆனால் குறிப்பிடத்தக்க ஆதாரங்களுடன் அவர் இந்த நூலில் முன்வைப்பது மத்திய மலை நாட்டில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அல்லது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் 14ம் 15ம் நூற்றாண்டிற்கு உரியதென்று வரையறுக்கம் மத்திய மாகாண முஸ்லிம்  குடியேற்றம் பற்றிய செய்தியை மாற்றியமைக்க ஒரு சந்தர்ப்பத்தை தந்துள்ளது. முஸ்லிம்களின் ஆதிக் குடியேற்றம் கி.பி. 11ம் நூற்றாண்டிற்குரியதென கருதுவதற்குரிய வரலாற்றுத் தகவலாக அது அமைந்துள்ளது. ஹிஜ்ரி 366ம் ஆண்டில் சேகு இப்றாஹிம் பின் உமர் அல் மதனி என்பவர் இலங்கை வந்து மடுல்போவையில் தங்கி அங்கு அவர் குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொண்ட ஒரு சரித்திரத்துடன் இது இணைக்கப்படுகின்றது. 

14ம் நூற்றாண்டுக்கு முன்னர் மத்திய மாகாணத்தில் முஸ்லிம்கள் வௌவேறு வகைகளில் யாத்திரிகர்களாக, வர்த்தகர்களாக வந்து சென்ற அல்லது குடியேறிய அல்லது பாதி வழியில் மரணித்த அல்லது சியாரங்களாக மாறிப்போன சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகி உள்ளன. எமது இந்தத் தேடலுக்கு எம்.ஐ.எம் அமீனின் இத்தகவல் உண்மையில் ஒரு சாதகமான முக்கிய சான்று என்பதில் ஐயமில்லை.  இப்னு பதூதாவின் பாவா ஆதம் மலையை நோக்கிய பயணத்தின் போது சிலாபம் முதல் பாவா ஆதம் மலை வரை அவர் சந்தித்ததாக, பார்த்ததாக கூறும் முஸ்லிம் நபர்கள், அவ்லியாக்களின் தலங்கள் என்பவை வரலாற்றுத் தேவை கருதி சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய முக்கிய ஆதாரங்களாகும். 

அல் மதனி என்று அமீன் குறிப்பிடுகின்ற அந்த நபரும் பாவா ஆதம் மலைக்கு யாத்திரை செய்வதற்காக வந்தவர்தான் என்பதை நாம் மறக்கக்கூடாது. உண்மையில் முஸ்லிம்களின் வரலாறு என்பது கட்டியெழுப்பக் கூடிய வரலாற்று வழிமுறைகளாக கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் நன்கு இனங்காணப்பட்டு அவை அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது மக்களுக்கான செய்தியாக மாற்றப்பட வேண்டும்.  வரலாறு என்பது கற்பனையில் இருந்து எழுதும் கதையல்ல. அது உண்மைச் சான்றுகளில் இருந்து உருவாகும் விஞ்ஞானத் தரம்வாய்ந்த ஆதாரங்கள். அதற்கு எமது சமூகம் தயாராக வேண்டிய ஒரு காலகட்டம் இன்று உருவாகி உள்ளது. அந்தப் பொறுப்பை இளைஞர்கள், சமூகத் தலைவர்கள், கல்விமான்கள், உலமாக்கள் அனைவரும் முன்வந்து செயற்படுத்த வேண்டும் என்ற செய்தியையும் அமீன் அவர்களின் நூல் எமக்கு சொல்கின்றது என்று எனக்குத் தோன்றுகின்றது. 

இந்நிகழ்வில் விசேட அம்சமாக கல்வித்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற ஆறுபேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கலாநிதி எம். இஸட். எம் நபீழ் பேராதனை பல்லைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத்துறைத் தலைவர், கலாநிதி ஏ. எல். எம். அப்துல் பாரி ஜப்பான் நாட்டில் முதுமானிப்பட்டதையும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர் கலாநிதி எஸ். எல் ரிபாய் கிழக்குப் பல்லைக்கழக விரிவுரையாளர், கலாநிதி எம். ஐ. ஏ. எம். நவாஸ், அமெரிக்காவில் பணிபரியும் சிரேஷ;ட விஞ்ஞானியாவர். கலாநிதி எம். ஏ. எம். ரிபாய். அவர் கடார் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிகின்றார். கலாநிதி இஸ்ஸத் ரம்ஸி இவர் மலேசியா நாட்டில் கலாநிதிப் பட்டம் படடிப்பை முடித்தவர்.  கலாபூசணம் எம். வை. எம். மீஆத், எங்கள் தேசம் பத்தரிகையின் பிரதம ஆசிரியர் எம். எச். எம். ஹஸன், எம். எஸ். எம். நவாஸ் இவர்  அவுஸ்ரேலியாவில் குடும்ப நல ஆலோசகராகக் கடமையாற்றுகின்றார் வைத்திய நிபுணர் எம். ஆர். எம். ரிசாத் இவர் கண்டி போதனா வைத்தியசாலையின் மக்பேற்று வைத்தியராகக் கடமை புரிகின்றார். வைத்திய நிபுணர் எச. எம். ஸகி மொஹமட் ஆகிய கல்விப் பெருந்தகைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் விடேச அதிதிகளாக ஸ்ரீ முஸ்லிம் மீடிய போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன், அல்ஹாஜ் எம். எஸ். எம். அஸ்அத் ஆகிய பிரமுகர்களுடன் அகல இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவர் அஷ்ஷெய்ஹ் தாசீம், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நௌபர். கொழும்பு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சாபீர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.










No comments

Powered by Blogger.