Header Ads



மலேசியாவில் மாற்று மதத்தவர்கள் 'அல்லாஹ்' என்ற சொல்லை பயன்படுத்த தடை


(தமிழ் முரசு - இந்தியா)

மலேசியாவில் முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்த திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் செலாங்கர் மாநில இஸ்லாமிய விவகாரங்கள் கவுன்சில் செயலர் முகமது மிஸ்ரி இத்ரிஸ் கூறியிருப்பதாவது..

 முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அந்த சொல் புனிதமானது. முஸ்லிம்களுக்கு மட்டுமே ஆன சொல். அதை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது என்று கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி கெசட்டில் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் முஸ்லிம் அல்லாதவர்கள் யாரும் அல்லாஹ் என்ற சொல்லை சலாங்கரில் பயன்படுத்த கூடாது என்று சுல்தான் (ஷராபுதீன் இத்ரிஸ் ஷா) அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுல்தான் எச்சரித்துள்ளார். இவ்வாறு முகமது மிஸ்ரி கூறினார். 

மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) உள்ளது. இக்கட்சியின் பொதுச் செயலாளர் புத்தாண்டு நிகழ்ச்சியின் போது பேசுகையில், அல்லாஹ் என்று பைபிளில் கூறியுள்ளபடி மலேசிய மொழியில் பயன்படுத்த மலேசிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். 

இதேபோல் மற்றொரு எதிர்க்கட்சியான பிஏஎஸ்சும், முஸ்லிம்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தாத வரை, அல்லா என்ற சொல்லை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும் மலேசியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் கூறுகையில், பல நூற்றாண்டுகளாக மலேயா மொழி பைபிளில் இடம்பெற்றுள்ள அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறோம். இப்போது தடை விதிப்பது சரியல்ல. இந்த அடிப்படை உரிமைக்கு எல்லா அரசியல் கட்சியினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.