Header Ads



சாதனை படைத்த முஸ்லிம் இளைஞன் சிங்களவராக இருந்திருந்தால்..? (பிரத்தியேக பேட்டி)



(நேரில் கண்டு தொகுத்தவர் எஸ்.எல். மன்சூர்)

அந்தக்கிராமம் அக்கரைப்பற்று – கல்முனை பாதையிலிருந்து கிழக்கே ஒருகிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. ஒருகால கட்டத்தில் இக்கிராமத்தைப் பற்றி பெரியளவில் தெரிய நியாயமில்லை. கடந்த 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் அமைச்சராக வந்த கையுடன் இந்தக் கிராமம் சர்வதேசமெங்கும் பெயர்வீசத் தொடங்கியது. காரணம் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இக்கிராமத்தின் நாமம் உலகமெல்லாம் பேசப்பட்டது. ஆம், கிராமத்தின் பெயர் ஒலுவில் என்பதாகும். அந்தக் கிராமத்தில் பிறந்து அங்கேயே படித்து தன்னிடமிருக்கின்ற சாதனையைப் பற்றிய எண்ணமே இல்லாமலிருந்த அந்த இளைஞனை சாதனைக்குரியவனாக்கிய பெருமை அந்தக் கிராமத்தின் ஒருசில ஆசிரியர்களுக்கும், விளையாட்டு உத்தியேகத்தர்களுக்கும் உரித்து என அண்மையில் 38வது தேசிய விளையாட்டுப்போட்டி கொழும்பில் சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்றபோது 200மீற்றர் ஓட்டப்போட்டியில் 21.27 நிமிடங்களில் ஓடி தேசிய மட்டத்தில் சாதனை படைத்தான் இந்தக் கிராமத்து இளைஞன் அப்துல் றசீட் ரஜாஸ்கான். அவரை அணுகி இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த விடயங்களை நேரில் வினவியபோது வீரர் ரஜாஸ்கான் இவ்வாறு விபரித்தார்.

'தன்னுடைய இந்த வெற்றியானது நான் பிறந்த இந்தக்கிராமத்திற்கு மாத்திரமன்றி முழுநாட்டுக்கும் பெருமை சேர்க்கின்ற விடயாகும். அந்த அடிப்படையில் எனது சாதனைக்கும், எனது இந்த நிலைக்கும் காரணமாக அமைவதற்கு கர்த்தாக்களாக எனது பெற்றோர் முதன்நிலை  பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து நான் உயர்தரம் ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலயத்தில் கற்கும் வரை அவ்வளவாக விளையாட்டில் ஆர்வம் காட்டவில்லை. பாடசாலைக் கல்வியை விட்டதன் பின்னர் எனது வீட்டுக்கு முன்னால் இருக்கின்ற இந்த விளையாட்டு மைதானத்தில் சக நண்பர்களுடன் சேர்ந்து மாலை வேளையில் விளையாடுவோன். அப்போது எனக்குள் இருந்த விளையாட்டு வெறி வெளியாகத் தொடங்கியது. ஆரம்பத்தில் சாதாரணமாக விளையாடிய என்னை பலர் என் திறமையைக் கண்டு வியப்புற்று தொடர்ந்து ஆர்வம் காட்டினர். அந்தவகையில் எனக்கு கல்வி கற்றுத் தந்த ஆசான் முக்தார் மற்றும் விளையாட்டுக்கான அதிகாரி ஆஸாத் போன்றவர்கள் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி பிரதேச மட்டத்தில் இடம்பெற்ற ஒரு ஓட்டப்போட்டியின்போது முதலிடத்தைப் பெற்றுக் கொண்டேன். அதனைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்எல். தாஜூத்தீன் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி இந்த நிலைக்கு உயர்வதற்கு வித்திட்டது.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக பிரதேச மட்டம், வலய மட்டத்தில் நடைபெற்ற திறந்தபோட்டிகள், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் போன்ற அனைத்து 200 மீற்றர் ஓட்டத்தில் அதிக திறமை காட்டி பல பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெறலானேன். இதுதான் எனது சாதனைக்கான அடித்தளமாக அமைந்த செயற்பாடுகளாகும். நான் சிவில் பொறியியல் துறையில் பட்டத்தை கற்றுக் கொண்டு இருக்கின்ற வேளையில் எனக்குரிய பயிற்சிகளை நானே செய்து கொண்டு எனது விளையாட்டிலும் ஈடுபடலானேன். இதனைத் தொடர்ந்து தேசிய மட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் நான் பங்குபற்றி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களையும் பெற்றுக் கொண்டேன்.

2009ஆம் ஆண்டில் மாகாண மட்டத்தில் பதியப்பட்டிருந்த சாதனையை நான் முறியடித்து மாகாண மட்டத்தில் எனது 200 மீற்றர் சாதனை பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து எனது திறமையின் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் தொடக்கம் 2012ஆண்டு ஐந்தாம் மாதம் வரையிலான ஒருவருட காலத்தில் ஆனந்த அத்துக்கோரல எனும் பயிற்சியாளரின் உதவியுடன் நாட்டிலுள்ள இராணுவத்தினருக்கிடையில் நடைபெறுகின்ற அதிகமாக போட்டிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களைப் பெற்றுக் கொண்டேன். கடந்த ஆண்டிலிருந்து சுனில் குணவர்த்தனா எனும் பயிற்சியாளரிடம் விசேட பயிற்சிகள் பெற்றுக் கொண்டு வருகின்றேன். இக்காலங்களில்தான் தேசிய மட்டத்திலான போட்டிகளிலும், குறிப்பாக கடந்த ஒருசில மாதங்களின் முன்பு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசியான் விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. 

தன்னுடைய இலக்குநோக்கிய பயணத்தில் (2013) எதிர்வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டுப்போட்டியில் சாதனை படைக்கவேண்டும் என்பது என் அடுத்த இலக்காகக் கொண்டு தற்போது பயிற்சிகளை நான் மேற்கொண்டுவருகின்றேன். எனத் தெரிவித்த சாதனையாளர் ஏ.ஆர்.றஜாஸ்கான், நாட்டின் ஒவ்வொரு மாகாண மட்டங்களிலும், தேசிய அணிகளிலும் பல்வேறு மட்டங்களில் தனது முத்திரையைப் பதித்து விருகின்றார். இவரின் சாதனைகளுக்கு கிறீடம் அமைத்தாற்போல் அவரிடமுள்ள தங்கப்பதக்கங்களும், வெள்ளி பதக்கங்களும் கிண்ணங்களும் சாதனைக்கான சான்றாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஒலுவில் கிராமம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குட்பட்ட ஒருகிராமம். இந்தப் பிரதேசத்தில் விளையாட்டு அதிகாரிகள், அம்பாரை மாவட்டத்திற்கான விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலரும் உண்டு. அண்மையக்காலங்களில் பிராந்திய மட்டங்களிலும், தேசிய மட்டங்களிலும் சிறந்த பெறுபேற்றை பெற்றுவரும் இந்த இளம் விளையாட்டு வீரனைக் இவர்கள் யாருமே கண்டுகொள்ளாதமை மிகவும் கவலை தரும் விடயமாகும். குறிப்பாக ஒலுவில் பிரதேசத்தில் பல விளையாட்டுக்கழகங்கள் உள்ளன. அதேநேரம் அட்டாளைச்சேனையில் ஒருசில விளையாட்டுக் கழங்களைத் தவிர எந்தவொரு விளையாட்டுக் கழங்களும் இந்த தேசிய வீரனை கண்டு கொள்ளாதது மிகவும் கவலை அளிப்பதாக விவசாயியான அவரின் தந்தை அப்துல் றசீட் குறிப்பிட்டார். 

தன்னைப்பற்றியோ, தனது திறமையைப் பற்றியோ யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதை வெளிப்படையாகக் கூறும் வீரர் றஜாஸ்கான். உண்மையில் இந்த இளம் விளையாட்டு வீரன் ஒரு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருப்பாரானால் இவருக்கான கொடைகளும், பாராட்டுக்களும், அனுசரனையாளர்களும் வரிசையில் நின்றிருப்பார்கள். இத்தகு வியக்க வைக்கும் அளவுக்கு பதக்கங்களை குவித்துள்ள இந்த வீரன் ஒரு முஸ்லீம் இனத்தவராக இருந்தமையினால் தான் என்னவோ அரச அதிகாரிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சுக்களும் கண்டுகொள்ளாமை கவலை அளிக்கின்றது. இப்பிராந்தியத்தில் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் காணப்பட்ட போதிலும் பிராந்தியம் முழுவதும் பாராட்டும்படியாக செய்யாதுவிட்டாலும் கிராம மட்டதிலாவது இவரது வெற்றியை கொண்டாடும் நிலைக்கு யாருமே கண்டு கொள்ளவில்லை என்பதுதான் இவரின் கருத்தாடல்களிலிருந்து அறியக் கிடைத்தது. 

சாதனைகளின் முத்தாகக் கருதப்படும் ஒலுவில் ஏ.ஆர். றஜாஸ்கான் மிகவும் அமைதியான சுபாவம் உடையவர். 26வயதும், இளமைத்துடிப்புடன் விளையாட்டுக்கேற்ற உடல்வாகுடன் தனக்கே உரித்தான இந்த இளம் தேசிய வீரனின் சிறப்பான ஓட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் அளவுக்கு குடும்பத்தினர், நண்பர்களைத் தவிர யாருமே தட்டிக் கொடுக்கவில்லை. இவர் ஒழுங்கான பயிற்சிகளை பெறவும், அதற்கான உபகரணங்களைப் பெற்றுக் கொள்ளவும் அனுசரையாளர்கள் யாருமே முன்வராத காரணத்தினால் விசேடமாக கொழும்புக்குச் சென்றே தன்னுடைய பயிற்சிகளைப் பெறமுடிகிறது எனத் தெரிவிக்கும் ரஜாஸ்கான் அவர்கள், தன்னுடைய பயிற்சிகளை வீட்டிலும் தொடர்வதற்குரிய வசதிகள் போதாது என்றும், அவரைப்போன்ற பல வீரர்கள் இலைமறை காய்களாக அக்கிராமத்தில் வாழ்கின்றார்கள். அவர்களையும் இதனுள் உள்வாங்கி தேசிய மட்டத்தில் மாத்திரமன்றி உலக மட்டத்திலும் சாதனை படைக்கின்றவர்கள் இருக்கும் நிலையில் இதற்கான பயிற்சிகள் மற்றும் உதவிகள் தொடருமாக இருந்தால்; எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உண்மையிலேயே விளையாட்டு உடலாரோக்கியத்தின் உந்துசக்தியாக காணப்படுகின்றது. விளையாட்டுக்கான களம் அமைத்துக் கொடுக்கப்படவேண்டிய இடம் ஆரம்பத்தில் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், பிரதேச செயலகத்தில் காணப்படும் விiயாட்டு அதிகாரிகள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சாக இயங்குவதற்குரிய விளையாட்டு மைதானங்கள், பயிற்சிகான கால்சப்பாத்துக்கள், ஏனைய உபகரணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற மையங்கள் இப்பிராந்தியத்தில் போதுமானதாக இல்லை. இன்றைய அரசு விளையாட்டுத்துறையை நன்கு ஊக்குவிக்கின்ற செயற்றிட்டங்களை மேற்கொண்டு வரும் இக்கால கட்டங்களில் றஜாஸ்கான் போன்ற வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டியது இவர்களுடைய கடமையல்லவா. 

தேசிய மட்டத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தவர்களை பாராட்டுவதும் துறைசார்ந்தவர்களது கடமை. ஏனென்றால் இவர்களை இன்று ஊக்குவிக்கும்போதுதான் நாளை வருகின்றவர்களும் தனக்கு ஊக்கம் கிடைக்கும் என்றாவது எண்ணுவார்கள் அல்லவா? எதற்காகவோ எல்லாம் பணத்தை வாரிவழங்கும் வள்ளல்கள் பலர் நமது சமூகத்தில் இருந்தபோதிலும் றஜாஸ்கானைப் போன்ற தேசிய வீர்களை இவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது கவலை தருவதாகவே பார்க்கப்படுகின்றது. இத்துயரைத் துடைக்க இச்சமூகம் விழித்துக் கொள்ளும் நாளை எண்ணுவதைத் தவிர வேறொன்றுமே இல்லை.



4 comments:

  1. unmayil nalla veeran en nanban. kaasu koduththu paaraatta sonnalo allathu thanathu suya laapaththukku paaraatta sonnaalo paaraattume thavira vera onrum kilikkathu intha samuthaayam.nee kavalaipadaathae nanba... iraivan irukkiraan un peyarai vilambaram seyya.

    ReplyDelete
  2. Wish you all the best my dear friend Rajasthan. Nee ennum pala pottikalil vetti pera naan eraivanaip pirathikkinren. Ennum allh unau thanthiruum shakthikalai vaithu nanraka munnera enathu nalvalthukkal...........

    ReplyDelete
  3. Wish you all the best. Insha Allah, Allah will give you very good reward wait.

    ReplyDelete
  4. Alhamthu lillah.... Allah will grass u wish u all the best...... dont worry about any assistance allah is the best assistance for you.... go ahead

    ReplyDelete

Powered by Blogger.