Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமும், இலக்கு வைக்கப்படும் மாணவர்களும்...!


(சுவைர் மீரான்)

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வானது, பெளத்த மதத்தினதும், சிங்கள இனத்தினதும் பெயரால் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு தூண்டப்பட்டு வருகின்றது.

தற்பொழுது மேற்கொள்ளப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள், செயற்பாடுகளை, சிறுபான்மையினருக்கு எதிரான கடந்த கால இனவாத செயற்பாடுகளுடன்  ஒப்பிட்டு நோக்கும் பொழுது, கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகளை விட தற்போதைய நடவடிக்கைகள் பாரிய அளவில் வேறுபட்டதாகவும், புதிய பரிணாமங்களுடன் முன்னெடுக்கப் படுபவையாகவும் அமைந்துள்ளன.

இன்று முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயல் மற்றும் கருத்து ரீதியான வெளிப்பாடுகள், சாதாரண இனவாதிகள், மத வெறியர்களின் வெறியின் இயல்பான வெளிப்பாடுகளாக அல்லாமல், இராஜதந்திர ரீதியாக, கல்வியறிவு உள்ளவர்களால் நன்கு  திட்டமிடப்பட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் வெளிப்பாடுகளாக காணப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் வாசகங்கள், இலக்குகள் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்காக வெள்ளிக்கிழமை ஜும்மாவுடைய நேரம் தெரிவு தெரிவு செய்யப்படுதல் போன்றவற்றை மட்டும் நோக்கினாலே கூட மேற்படி உண்மையை இலகுவாக உணர்ந்து கொள்ளலாம். 

2011 ஆண்டு ரமழான் மாதத்தில் முஸ்லிம் பிரதேசங்களில் கிரீஸ் மனிதர்கள் என்ற மர்ம மனிதர்கள் பரவலான பீதியை ஏற்படுத்தியிருந்தனர். "மர்ம மனிதர்கள்" என்ற வாசகம் பயன்படுத்தப் பட்டாலும் கூட, இந்த மர்ம மனிதர்களின் பின்னணி உண்மையிலேயே மர்மம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. 2012 ரமழான் மாதம், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெறும் காலமாக அமைந்து விட்ட காரணத்தால் "மர்ம மனிதர்கள்" ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

சடுதியாக உத்வேகம் பெற்றுள்ள இனவாத செயல்பாடுகளின் பின்னணியில் இஸ்ரவேலிய உளவுத்துறை உள்ளதாக பரவலாகவே நம்பப்படுகின்றது. இஸ்ரவேலுடன் நெருங்கிச் செயல்படுவதில் ஆர்வமாக உள்ள இலங்கை அரசு, இவற்றை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

மேற்படி இனவாத நடவடிக்கைகள், சாதாரண இனவாதிகளால அல்லாமல், இஸ்ரவேலிய உளவுப் பிரிவின் வழிநடாத்தலில் உயர் மட்ட அறிவாளிகளால் முன்னெடுக்கப் படுவதனால், 'இந்நாட்டில் உள்ள முஸ்லிம்கள் முற்றாகக் கொன்று ஒழிக்கப் பட்டாலும்கூட எந்த முஸ்லிம்/ அரபு நாடுகளும் அதில் தலையிடப் போவதில்லை, குறைந்த பட்சம் தமது நாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களைக் கூட திருப்பி அனுப்பப் போவதில்லை' என்கின்ற யதார்த்தத்தை அவர்கள் நன்கு உணர்ந்தே இருப்பார்கள்.

ஆகவே, முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதில் சாதாரண இனவாதிகளிடம் இருக்கும் தயக்கம் இவர்களிடம் இருக்கப் போவதில்லை என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள், 1983 ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டது போன்று, முழு நாட்டிலும் ஒரேயடியாக திடீரென தாக்குவது என்ற வடிவில் அமையாமல், ஆரம்பமாக முஸ்லிம்களை படிப்படியாக பலவீனப்படுத்துவது, மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குவது, தனிமைப்படுத்துவது, பொருளாதார ரீதியான வறட்சி நிலைக்குள் தள்ளுவது, பதுளை சம்பவம் போன்ற சிறு சிறு சம்பவங்கள் மூலம் அச்ச உணர்வுக்குள் இட்டுச் செல்வது என்பதாகவே அமைந்துள்ளது.

இதனை அமெரிக்காவின் ஈராக் தாக்குதல் யுத்தியுடன், அதாவது முதலில் தனிமைப்படுத்தி, பலவீனப் படுத்திவிட்டு பின்னர் தாக்குவது என்பதுடன் ஒப்பிடலாம். "ஈராக் விரைவில் தாக்கப்படும்" என்ற கருத்து, ஈராக் தாக்குதலுக்கு பல வருடங்களுக்கு முன்னர் இருந்தே தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பரப்ப பட்டு வந்தது. இந்நிலையில் ஈராக் தாக்கப் பட்ட பொழுது, அது ஒரு ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப் படாமல், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டது. 

இன்று இலங்கையில் கூட "முஸ்லிம்கள் தாக்கப்படுவார்கள்" என்ற கருத்து மக்கள் மத்தியில் பல்வேறு வகையிலும் பரப்பப்பட்டே வருகின்றது. ஆகவே சர்வதேச ரீதியாக பயன்படுத்தப்பட்ட யுக்திகள், எவ்வித பின்புலங்களும் இல்லாமல் சாதாரண இனவாதிகளால், அதுவும் ஒரு 2ஆம் நிலை சிறுபான்மையினருக்கு எதிராக சுயமாக கைக்கொள்ளப்படுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றே.

நமக்கெதிரான நடவடிக்கைகள் நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்ளப்படும் நிலையில், முஸ்லிம்கள், சமூகம் என்ற வகையில் அவற்றை முறியடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளை, தனிப்பட்ட நபர்கள் தங்களின் பேச்சுக்கள் செயல்பாடுகளின் மூலம் தாம் சார்ந்த சமூகத்திற்கு சிக்கல்களைத் தேடித் தராமல் நடந்துகொள்வதும் முக்கியமான ஒன்றாகும்.

க.பொ.த சாதரான மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்கள், பரீட்சை முடிந்ததும் சுற்றுலா செல்வது வழமையான ஒரு நிகழ்வாகும். இவ்வாறான சுற்றுலாக்கள் பெரும்பாலும் பாடசாலை மூலமாக அல்லாமல் மாணவர்கள் சுயமாக ஏற்பாடு செய்பவையாக அமைகின்றன. வீட்டில் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப் பட்டாலும், அதிகமான மாணவர்கள் முதல் தடவை மதுவை, அல்லது பியர் பானத்தை வாயில் வைத்துச் சுவை பார்ப்பதும் இப்படியான சுற்றுலாக்களின் போது தான் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். மதுவை, பியர் பானத்தை முதன் முதலில் வாயில் வைத்த பொழுது நடந்த நிகழ்வுகளைப் பற்றிப் பின்னாட்களில் மாணவர்கள் தமக்கிடையே பேசி மகிழ்வதையும் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்வதையும் அவர்களின் பேச்சுக்களை சற்றுக் காது கொடுத்துக் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

இனவாதிகளின் புதிய இலக்கு, தற்பொழுது நடைபெற்று வரும் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையின் பின் சுற்றுலா செல்ல இருக்கும் முஸ்லிம் மாணவர்கள் பக்கம் திரும்பி இருப்பதாக அறிய முடிகின்றது.

போதிய உலக அனுபவமற்ற இளம் மாணவர்கள் சுற்றுலா செல்லும் பொழுது, மலையகத்தின் பகுதிகளிலும், தென் பகுதியின் ஒரு சில கரையோரப் பிரதேசங்களிலும் மேற்படி மாணவர்களுடன் சச்சரவுகளை ஏற்படுத்தி, அதன் மூலம் மாணவர்களுக்கு எதிரான மோசமான வன்முறைகளை மேற்கொள்வதற்காக காடையர் குழுக்கள் தயார் செய்யப்பட்டு வருவதாக மேலும் அறியக் கிடைத்துள்ளது. சச்சரவுகளை உருவாக்குவதற்கான ஒரு பொறியாக அழகிய யுவதிகளை பயன்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பரீட்சைக்காக கஷ்டப்பட்டு படித்து களைத்துப் போயிருக்கும் மாணவர்கள், உள அமைதிக்காகவும், புத்துணர்ச்சிக்காகவும்  சுற்றுலாக்கள் செல்ல முற்படுவதை தடுப்பது என்பது சரியான ஒரு தீர்வாக அமையப் போவதில்லை. அதே நேரத்தில் பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ தங்களுடன் கூட வருவதையும் மாணவர்கள் விரும்பப் போவதில்லை. இந்நிலையில் காத்திருக்கும் ஆபத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் முகமாக பெற்றோர்கள் சில மாற்றீடுகளை செய்வது அவசியமாகும்.

தூரப் பிரதேசத்தில் இருக்கும் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் ஒரு சில தினங்கள் நண்பர்கள் சகிதம் ஓய்வாக தங்கி வர ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் ஒரு மாற்றீடாக அமைய முடியும். மாணவர்கள் சுற்றுலா சென்றுதான் ஆக வேண்டும் என்று விரும்பினால் சுற்றுலாவுக்கான இடங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தெரிவு செய்து கொடுப்பது இன்னொரு சாத்தியமான மாற்றீடாக அமையும்.

மத்திய மலை நாட்டுக்கும், தென்பகுதிக் கரையோரப் பிரதேசங்களுக்கும் சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள், பரீட்சை முடிந்த உடனேயே அப்பகுதிகளை நோக்கிச் செல்லாமல், ஒரு சில மாதங்கள் கழிந்த பின்னர் செல்வது சிக்கல்களைத் தவிர்த்துக் கொள்ள உதவும். இவ்விடயத்தில் பெற்றோர்களின் கரிசனையும் வழிகாட்டலும் அவசியமாகின்றன.

No comments

Powered by Blogger.