Header Ads



குரோதத்தை வளர்க்க தொழில்நுட்பத்தை பாவிக்காதீர்கள் - ஜனாதிபதி மஹிந்த உபதேசம்



TN

சமூகத்தில் குரோதத்தை விதைப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கலாசாரம் மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு எதிராக அமைந்து விடாது கலாசாரத்தையும் பண்புகளையும் பாதுகாப்பதற்கு தகவல் தொழில்நுட்பத்தை உரிய வகையில் பயன்படுத்துவதே நோக்கமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தனிப்பட்ட இலாபத்திற்காக தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்ட ஜனாதிபதி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை குற்றங்களைத் தடுப்பதற்கேற்றவாறு உபயோகப்படுத்துமாறும் குறிப்பிட்டார். சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தல்களுக்கான சர்வதேச மாநாட்டினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

வன்முறை, அடிப்படைவாதம் மற்றும் கலாசார சீரழிவுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த இடமளிக்கக் கூடாது எனத் தெரிவித்த ஜனாதிபதி இத்துறையில் பொறுப்புள்ளவர்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றுகையில், தொலைத் தொடர்புத் துறை திட்டங்களை உருவாக்குவோர் குரோதத்தை வளர்ப்பதற்கு தகவல் தொடர்பாடலை உபயோகப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

சர்வதேச சிறுவர் தினத்துக்கு அடுத்த நாள் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் சர்வதேச மாநாடு நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். தொழில்நுட்பமானது சிறுவர் உலகின் கவனத்தை ஈர்ந்ததுறையாகும். அவர்களின் சிந்தனை திறமைகளை வளர்ப்பதற்கு தகவல் தொழில்நுட்பம் உறுதுணையாகிறது. அத்துடன் நவீன உலகம் தொடர்பிலான உணர்வினையும் அவர்களுக்கு வழங்குகிறது.

சிறுவர்களை அடிப்படைவாதிகளாக்குவதற்கும் இது உறுதுணையாவதால் தொழில்நுட்ப உபயோகம் மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே எமது அடுத்த சந்ததியினரை இத்தகைய ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

போட்டித் தன்மை கொண்ட உலகில் தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி முக்கியமானது என்பது இலங்கையின் கருத்தாகும். தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் அத்துடன் துறை சார்ந்தோர் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளவும் சிறந்த தருணமாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளரும் இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருமான லலித் வீரதுங்க கிராமிய மேம்பாட்டுக்காக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் விளக்கினார்.

No comments

Powered by Blogger.