Header Ads



இலங்கையில் பாகிஸ்தான் உளவுத்துறை - விசாரிக்க வருகிறது இந்திய றோ


இந்தியாவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப்பிரிவு தளமாகப் பயன்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவல்களை அடுத்து, இதுகுறித்து இலங்கை அரசுடன் இந்தியா பேச்சுக்களை நடத்தவுள்ளது. 

கொழும்புக்கு செல்ல முயன்றபோது தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டது மற்றும், இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின் தொடர்பாடலை இடைமறிக்கும் அவதானிப்பு நிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ஐஎஸ்ஐ நிறுவியுள்ளதாக இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு கொடுத்த தகவல் ஆகியவற்றை அடுத்தே, இதுபற்றி கொழும்புடன் புதுடெல்லி பேசவுள்ளது. 

கைதான ஐஎஸ்ஐ உளவாளி குறித்து விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டின் கியூ பிரிவு காவல்துறையும், இந்தியாவின் உள்ளக புலனாய்வு அமைப்பான ஐ.பியும் இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளன. 

இது தொடர்பாக இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் இந்த இரு அமைப்புகளும் இந்திய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. 

அதேவேளை, அண்மைய புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக தாம் இலங்கை அரசுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும், அந்த அறிக்கைகளை அவர்களுக்கு அனுப்பி விசாரணைகளுக்கு விரிவான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் கூறியுள்ளன. 

“அண்மையில் கிடைத்துள்ள புலனாய்வு அறிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவால். 

இதுகுறித்து இலங்கை அரசின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்வோம். 

இந்தியாவுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகள் இலங்கையில் இடம்பெறுகின்றன என்று நாம் நம்ப வேண்டியுள்ளது.” என்று இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.