இனாமலுவ தேரரின் கனவு நனவாகப் போகிறதா..?
ஏ.ஆர்.ஏ.பரீல்
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் இதயத்தில் கறைபடிந்தநாள். தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்கக் கூடாது என்ற பௌத்த கடும்போக்காளர்களின் வெறிக்கு உரமூட்டிய ஆரம்ப நாளது.அன்று தம்புள்ளை ரங்கிரி ரஜமஹா விகாராதிபதி இனாமலுவே சத்தர்மகீர்த்தி ஸ்ரீ ஆனந்த சுங்கல தேரர் தலைமையில் பௌத்த பிக்குகளும் பெரும்பான்மை சமூகத்தினரும் அடங்கிய பேரணியொன்று கோஷமெழுப்பியவாறு பள்ளிவாசலை நோக்கி நகர்கிறது.
பள்ளிவாசலிலே ஜும்ஆத் தொழுகைக்காக சுமார் 50 பேரளவில் ஒன்று கூடியிருக்கிறார்கள். பள்ளிவாசலைச் சுற்றி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.பள்ளிவாசலை நோக்கி பயணித்த பேரணியைத் தடுக்க பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் இயலவில்லை. நிலைமை மோசமடைவது பற்றி பொலிஸார் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உயர்மட்டங்களுக்கு அறிவிக்கிறார்கள்.பொலிஸாரினால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பள்ளிவாசல் கதவு பலவந்தமாகத் திறக்கப்பட்டு இனாமலுவே தேரர் உட்பட பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்நுழைந்து பள்வாசலின் மிம்பர் மற்றும் குர்ஆன் பிரதிகள் உட்பட பல பொருட்கள் சேதமாக்கப்படுகின்றன.இந்தக் கறைபடிந்த நிகழ்வுகள் இடம்பெற்று ஐந்துமாதங்கள் கடந்துவிட்டன.
இந்நிலையில் தற்போது இனாமலுவே தேரரின் கனவை நனவாக்குவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் துவக்கம் பெற்றுள்ளன.தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகாரசபை தம்புள்ளையிலுள்ள 52 வீடுகள் மற்றும் 12 கடைத்தொகுதிகளுக்கு கடந்த வாரம் அறிவித்தலொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறிப்பிட்ட வீட்டு உரிமையாளர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இல. 300/14, 1984.06.08 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கிணங்க அரசாங்கத்தினால் இவை கையேற்கப்பட்டுள்ளன என தனித்தனியே கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பிவைக்கப்பட்டுள்ள 17/டிஎம்/ 931 ஆம் இலக்க 2012.09.24 ஆம் திகதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,‘தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நீங்கள் வதியும் ......... ஆம் இலக்க காணித்துண்டு 300/14 ஆம் இலக்க 1984.06.08 ஆம் திகதியிட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலின்படி அரசாங்கத்தினால் கையேற்கப்பட்டுள்ளது. தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித கதியில் ஆரம்பிப்பதற்காக நீங்கள் வதியும் இடம் / வீடு தேவைப்படுகிறது. இதற்கு மாற்றீடாக தம்புள்ளை கண்டலம வீதியில் பொல்வத்தை எனும் இடத்தில் உள்ள காணியை எதிர்வரும் இருவாரங்களுக்குள் உங்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை மேற்கொள்ளும். அவ்விடத்தில் குடியேறுவதற்கு நீங்கள் தயாராக வேண்டும்.எனவே நீங்கள் வதியும் இல .... காணியை எதிர்வரும் 2012.10.31 ஆம் திகதிக்கு முன்பு இந்த அதிகார சபையிடம் கையளிக்கும்படி அறிவிக்கிறேன்.நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமல் பெரேரா மற்றும் தம்புள்ளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் புனிதபூமி அபிவிருத்தித் திட்டப் பணிப்பாளர் எச்.ஏ. தயானந்த ஆகியோர் கையொப்பமிட்டு இந்தக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தம்புள்ளை, பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகார சயைினால் இதுவரை எவ்வித அறிவித்தலும் அனுப்பப்படவில்லை என்றாலும் பள்ளிவாசலை ஊடறுத்து 65 அடி அகலமான பாதையொன்று அமையும் வகையில் எல்லைக் கல் பள்ளிவாசல் சுவர்களின் இருபுறமும் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசலின் வரலாறு மிகவும் பழைமை வாந்ததாகும். 1902 ஆம் ஆண்டு வர்த்தக நோக்கமாக காத்தான்குடியலிருந்து தம்புள்ளைக்கு வந்து சேர்ந்த உதுமான் சாஹிப் கச்சி முஹம்மத் தலைமையிலான குழுவினரோடு தம்புள்ளையில் முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டு வரலாறு ஆரம்பமாகியது. முஸ்லிம்கள் தொழுவதற்காக உதுமான் பிரதர்ஸ் வர்த்தக நிலையத்தின் ஒரு அறை பயன்படுத்தப்பட்டது.
1960 களில் இந்தப் பள்ளிவாசல் ஹைரியா என்ற பெயரில் பள்ளிவாசலுக்கான அடையாளங்கள் எதுவுமில்லாமல் ஒரு சிறிய அறைக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பின்பு கடையின் பின்புறமிருந்த 18100 அடி காணி பசறையைச் சேர்ந்த கமலாவதி என்பவரிடமிருந்து கொள்வனவு செயப்பட்டது. இதனையடுத்து 1992 ஆம் ஆண்டு சிலர் தமது காணிகளையும் பள்ளிவாசலுக்கு அன்பளிப்புச் செதார்கள்.இவ்வாறு நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஹைரியா பள்ளிவாசல் 2009 ஆம் ஆண்டு வக்பு சபையிலும் பதிவு செயப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தல் மேடைகளில் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக காரசாரமாக பேசப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையே முதன்மைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்தது.இறுதி நேர தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்ட ஜனாதிபதி ‘பள்ளிவாசல்’கள் பாதுகாக்கப்படும். தம்புள்ளை பள்ளிவாசல் அப்புறப்படுத்தப்படமாட்டாது’ என உறுதிமொழி வழங்கியிருந்தார்.
தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான பைசர் முஸ்தபாவுடன் அண்மையில் ‘விடிவெள்ளி’ மேற்கொண்ட நேர்காணலின் போது தம்புள்ளை பள்ளிவாசல் எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்தப்படமாட்டாது. ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியிருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பல பொதுக் கூட்டங்களிலும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்புகளிலும் தேர்தல் மேடைகளிலும் யார் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது என்று தெரிவிப்பது?
நாட்டில் எந்தவொரு பள்ளிவாசலும் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை. இது அரசியல் இலாபம் தேடுவோரின் பொப் பிரசாரம்" என்று தெரிவித்திருந்தார்.தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட மறுதினம் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைமையகத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலமாக்கள், முஸ்லிம் அமைப்புக்கள், புத்திஜீவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
*அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பவத்தைக் கண்டித்து கையொப்பமிட்ட கடிதமொன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தல்.
*பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோருதல் அல்லது அவர்களுக்கு எதிராக நீதிமன்றினை நாடல்.
*தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் தனித்து செயற்படாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையில் கூட்டாக இயங்குதல்.
*பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கோ அல்லது வேறு இடத்தில் நிர்மாணிக்கவோ அனுமதிக்கக் கூடாது என்பனவாகும்.
இக்குறிப்பிட்ட தீர்மானங்களை வெற்றி கொள்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றே தெரிகிறது. சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் கொதித்தெழுந்தவர்கள் விமர்சித்தவர்கள் அதன் பின் ஊமைகளாக வாப்பேசாது இருந்து விட்டனர். இப்போது மீண்டும் உணர்வு பெற்றுள்ளனர். அதுபற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். புனித பூமி திட்டத்தின் கீழ் தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்படுமானால் அது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மீண்டும் பாரியதொரு அதிருப்திக்கும் அமைதியின்மைக்குமே வழிவகுக்கும் என்பதை சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் மறந்துவிடக் கூடாது.
தேர்தல் பிரசாரத்துக்காக தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் வாக்குகளை அள்ளிச் சுருட்டிக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் குறிப்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அதிகம் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள். இது தொடர்பில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

Post a Comment