Header Ads



குர்பான் கடமை தொடர்பில் முஸ்லிம்கள் நிதானத்துடன் செயற்பட வேண்டும்


இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. முஸ்லிம்கள் புனித ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஆயத்தமாகிவரும் நிலையில் உல்ஹிய்யா எனப்படும் குர்பான் கடமை குறித்தும் முஸ்லிம்களிடம் நியாயமான கவலைகைள் மேலோங்கியுள்ளன.

 இலங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் முன்னெப்போதும் இல்லாதவகையில் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் மறுபுறம் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ள சூழ்நிலையில் குர்பான் கடமையை நிறைவேற்ற சிங்கள கடும்போக்காளர்களிடமிருந்து நெருக்கடிகள் தோன்றலாமென நமது சமூகம் அச்சப்படுவது புரிந்துகொள்ளப்பட கூடியதே.

சிலாபத்தில் இந்துக்கள் நடாத்தவிருந்த விலங்குகள் பலியெடுக்கும் நிகழ்வு அமைச்சர் மேர்வின் சில்வாவின் தலையீடு மற்றும் அந்த தலையீட்டுக்கு அரசாங்க மேல்மட்டம் வழங்கிய ஆசிர்வாதம், சிங்கள கடும்போக்காளர்களின் நேரடி அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணிகளால் இடைநிறுத்தப்பட்டது.

இதுபோன்று நெருக்கடிகள் தமது குர்பானிய கடமைக்கும் வந்தவிடுமென்ற முஸ்லிம்களின் அச்சம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு சார்பில் இதுபற்றிய சுறறுநிருபம் வெளியிடப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சுற்றுநிருபங்கள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் முஸ்லிம்கள் தரப்பில் சந்தேகங்கள் வெளிக்கிளம்பியுள்ளன.

ஏனென்றால் சிங்கள கடும்போக்காளர்கள் அப்பாவி சிங்கள மக்களிடம் குர்பான் நடவடிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபமானது பொலிஸ் நிலையங்களின் அறிவிப்புப் பலகையை அலங்கரிக்குமேயன்றி குடிமக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாது. இதனால் பாதுகாப்பு அமைச்சின் உபதேசத்தை சிங்கள மக்களோ அல்லது சிங்கள கடும்போக்கு அமைப்புக்களோ அறிந்துகொள்ளும்  வாய்ப்பு கிட்டப்போவதில்லை.

இதனால் குர்பான தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் சுற்றுநிருபம் உரியமுறையில் முஸ்லிம்களின் குர்பானிய கடமைக்கு துணைநிற்குமா என்பதில் சந்தேகங்கள் நிலவுகின்றன.

அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் செயற்பட்ட வழிமுறைகளை நோக்குகையில், அவர்களுக்கு காவற்துறையின் பாதுகாப்பும், ஆசிர்வாதமும் தாராளமாக கிடைக்கப்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தவாரம் பொலிஸ் நிலையமொன்றை முற்றுகையிட்டுள்ள பௌத்த குருமார் அங்கிருந்த ஒரு நபரை விடுவித்துச் சென்றமை, கண்டியில் கடந்தவாரம் நடைபெற்ற பௌத்த அமைப்பொன்றின் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அச்சுறுத்தல் உள்ளிட்ட சம்பவங்களும் நெருடலான விடயங்கள்.

இச்சம்பவங்கள் சட்டத்தின் ஆட்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள். ஆனாலும் இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இதுவரை எத்தகைய சட்டநடவடிக்கைகளும்' முன்னெடுக்கப்படவில்லை.

இப்படிப்பட்டதொரு நிலையில் குர்பானிய கடமைக்கு சிங்கள கடும்போக்காளர்களிடமிருந்து நேரடி அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் வேளைகளில் காவற்துறை தனது கடமையை நீதி,நியாயமான முறையில் மேற்கொள்ளும் என்று முஸ்லிம் சமூகம் நம்புகிற போதிலும், கடந்தகால சம்பவங்கள் காவற்துறை மீதும் முஸ்லிம்கள் முழுமையானன நம்பிக்கை கொள்வதற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நாம் இங்கு சுட்டடிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்வாறானதொரு சங்கடமிக்க நிலையில் முஸ்லிம் சமூகமானது, தனக்குத் தானே பாதுகாப்பை செய்துகொள்ளும் நிலையில் காணப்படுகிறது.

குர்பானிய கடமைகைள நிறைவேற்றும்போது மாற்றுமத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவோ அல்லது சட்டத்திற்கு விரேதமான முறையிலோ இல்லையேல் பிரச்சினைகள் உருவாகும் விதத்திலோ எமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்துவிடக்கூடாது.

குர்பான் கடமை தொடர்பில் இஸ்லாம் காட்டித்தரும் அழகிய வழிமுறைகளை பின்பற்றுவதுடன், பெரும்பான்மையாக சிங்கள மக்களே இந்நாட்டில் வாழ்கிறார்கள் என்பதையும், தற்போதைய இலங்கையின் நிலவரத்தையும், நம்மில் சிலர் செய்யும் தவறுகள நமது சமூகத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் இதுதொடர்பில் அறிவுறுத்துவதுடன், பள்ளிவாசல்கள் தமது பிரதேச மக்களை இதுபற்றி விழிப்பூட்டவும் வேண்டும். 

ஹஜ் காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும்  எத்தகைய நிலைமைகளையும் விவேகத்துடன் அணுகுவது, பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வை பெற்றுத்தருமென்பது எமது நம்பிக்கை..!

2 comments:

  1. சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக, குர்பானி கொடுக்கும் பிராணி, குர்பானி கொடுக்கும் நிகழ்வு என பலவற்றை புகைப்படம் எடுக்கின்றனர், பின்னர் அவற்றை Facebook இல் பகிர்ந்துகொள்கின்றனர். இது முற்றாகத் தவிர்க்கப் பட வேண்டும்.


    குர்பானி நிகழ்வை, பிராணியை புகைப்படம் எடுப்பது முற்றாகத் தடை செய்யப் பட வேண்டும். இது தேவயற்ற ஒன்றும், பிரச்சனைகளை வரவழைக்கக் கூடியதுமாகும்.

    ReplyDelete
  2. இந்த மாதிரி புகைப்படம் எடுக்கும் விடயமெல்லாம் உண்மையான முஸ்லீம் செய்வது இல்லை இவைகளெல்லாம் முஸ்லீம் பெயரில் உள்ள பெயர்தாங்கிகள் செய்யும் வேலை இவர்களுக்கு பள்ளிவயில்களின் முலமாக அறிவுரை செய்தாலும் எந்தபிரயோசனமும் இல்லை காரணம் மழைக்கு கூட பள்ளிபக்கம் ஒதுங்காத பெயர்தாங்கிகள் இவர்கள் சுயமாக திருந்தாத வரையில் இலங்கை முஸ்லிம்களுக்கு எப்போதும் அன்னிய மதத்தவர்களின் இடய்யுர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டியதுதான்.
    எனது ஊர் முஸ்லீம் கிராமங்களால் சூழப்பட பெரிய முஸ்லீம் பகுதி ஆனாலும் இங்கே நடக்கும் கொடுமைகளை பார்க்கும போது அந்நிய மதத்தவர்கள்களின் இடங்களில் வாழுவது எமக்கு கூடிய பாதுகாப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். உதாரணமாக பாடசாலைக்கு மற்றும் அந்திநேர வகுப்புக்கு போகும் பெண் மாணவர்கள் படும் துன்புறுத்தல்கள் சொல்லில் அடங்காதவை அவ்வளவு படுமோசமான வார்த்தைகளை பாதை நடுவில் உள்ள இன்றைய வாலிபர்கள் சொல்கின்றனர் (இவற்றை தட்டி கேட்கப்போனால் அவரின் பாடு அதேகதிதன் ) 100% முஸ்லிம்கள் வாழக்கூடிய எமது பகுதியே இப்படி என்றால் அடுத்த இடங்களில் எப்படி இருக்கும் என்று வாசகர்கள் ஆகிய உங்களால் ஊகித்துக்கொள்ள முடியும்.

    முஸ்லிம்களால் முஸ்லிம்களே இப்படி வேதனை படும்போது அன்னியவர்களால் வரும்பிரசினை சொல்லவா வேண்டும்... முடிவு அல்லாஹ்வின் கையில்தான்

    ReplyDelete

Powered by Blogger.