Header Ads



வடக்கு முஸ்லிம்களின் இருப்பை பாதுகாப்பது அவசியத் தேவை



(இந்தவாரம் வெளியாகியிருந்த நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு முஸ்லிம்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமென நிலவிய நம்பிக்கை தற்போது தகர்ந்து போயுள்ளது. யுத்தம் நிறைவடைந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வடக்கு முஸ்லிம்களை துயரங்கள் தொடர்ந்தும் துரத்துகின்றன.

ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமை, தமிழ் அதிகாரிகளின் திட்டமிட்ட பாரபட்சம், சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் ஆர்வமின்மை, மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் புறக்கணிப்பு என வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாம் பட்டியல்படுத்தலாம்.

வடக்கு முஸ்லிம்கள் பழைய அகதிகள் என்று நோக்கப்படுவதே வடக்கு முஸ்லிம்கள் அவலங்களை சுமப்பதற்கான அடிப்படை காரணியாக அமைகிறது. 

இராணுவம் - புலிகள் யுத்த நடவடிக்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் புதிய அகதிகள் என்ற வட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் வடக்கிலிருந்து புலிகளினால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட வெளியேற்றப்பட்ட மற்றும் வடக்கில் தற்போது மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்குரிய தேவைகள் நிறைவு செய்யப்படுவதோ அல்லது கவனிக்கப்படுவதோ இல்லை.

அந்தவகையில் வடக்கு முஸ்லிம்கள் பழைய அகதிகள் என்று நோக்கப்படுவதால் அவர்கள் நிகழ்காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் பலவேளைகளில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இருந்தபோதும் அவையாவும் செவிடன் காதில் ஊதிய சங்குக்கு ஒப்பானதாகவே அமைந்துள்ளது.

வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின் வீடமைப்புத் திட்டம் என்ற பிரச்சாரம் மிகப்பெரும் முன்னெடுப்பில் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் வீடமைப்புத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு முஸ்லிம்களும் உள்ளீர்ப்புச் செய்யப்பட வேண்டுமென பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும்கூட குரல் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை வந்திருந்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது.

இருந்தபோதும் இந்திய அரசாங்கத்தின் வீட்டை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்களாகும் பட்டியலில் கிட்டே நெருங்குவதற்குக்கூட வடக்கு முஸ்லிம்களுக்கு முடியவில்லை.

காரணம் இந்திய வீடமைப்பு திட்டத்தை பெற்றுக்கொள்ள எவருக்கு தகுதியுள்ளது என வடக்கு பிரதேச செயலகங்கள் வெளியிட்ட அறிக்கையில் 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் சேர்க்கப்பட்டிருந்தன. இந்த நிபந்தனைகளில் பல வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எவ்வகையிலும் ஏற்புடையதாக இல்லை. 

இவ்வாறானதொரு நிலையில் வடக்கு முஸ்லிம்களை அதிகாரம் படைத்த சகல தரப்புகளும் கைவிட்டுள்ளன என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. இருந்தபோதும் வடக்கு முஸ்லிம்களிடம் சிறு நம்பிக்கை மாத்திரம் எஞ்சியுள்ளது. அவர்களின் அந்த நம்பிக்கையை சிதைக்காது காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு வடமாகாணத்திற்கு வெளியே வாழும் முஸ்லிம்களை சார்ந்துள்ளது.

வடமாகாணமான தமது தாயகத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதற்கு தடையாகவுள்ள பிரதான காரணி குடியிருப்புகளாகும்.  மனிதனின் அடிப்படைத் தேவைகளின் பிரதானமான இத்தேவையை வடக்கு முஸ்லிம்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் பட்சத்தில் அது தமது தாயகத்தில் மீளக்குடியேற காத்திருக்கும் வடக்கு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் உதவியாக அமையும். 

அந்தவகையில் இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உடனடிக் கவனத்தை செலுத்தமுடிவதுடன் வடக்கில் மீளக்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களின் குடியிருப்புத் தேவைகளையும் ஓரளவேனும் நிறைவேற்றிக்கொடுக்கலாமென்பதும் எமது நம்பிக்கை.

இலங்கையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இப்பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றும் வடமாகாணத்தில் ஒவ்வொரு வீட்டை கட்டிக்ககொடுக்க முன்வந்தால் முஸ்லிம்களின் தாயகப் பிரதேசத்தில் 2 ஆயிரம் வீடுகள் குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டுவிடும். இவற்றில் 2 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்கள் மீளக்குடியேறுவார்களாயின் சாதாரணமாக அவர்களின் தனிநபர் எண்ணிக்கை 8 ஆயிரத்தையும் தாண்டிவிடும். 

இதன்மூலம் வடக்கு முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நிறைவேறுவதுடன், அவர்களின் தாயகப் பிரதேசம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், அப்பிரதேசங்களில் இஸ்லாத்தை உயிர்ப்பிக்கவும், முஸ்லிம்கள் அங்கு தொடர்ந்து வாழும் நிலையும் ஏற்படும்.

எனவே இத்திட்டதை இலங்கை முஸ்லிம்களிடம் எடுத்துச்செல்லும் பொறுப்பும், எடுத்துச் சொல்லும் கடமையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையைச் சார்ந்துள்ளது. இத்திட்டத்திற்கு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் மற்றும் பைத்துல்மால் நிதியமும்கூட பங்களிப்புச்செய்யலாம்.

வடக்கு முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க நாம் முன்வராத பட்சத்தில் முஸ்லிம்களின் தாயகப் பிரதேசங்கள் கபளீகரம் செய்யப்படும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே வடக்கில் தமிழ் இனவாம், கிறிஸ்த்தவ மேலாதிக்கம் என்பன தலைவிரித்தாடுகிறது. 

யாழப்பாணத்தில் 1000 பேர் தொழக்கூடிய ஜும்ஆ பள்ளிவாசல் நல்லூர் கந்தசுவாமி கோயிலாக மாறியதையும், 1000 பேருக்கும் அதிகமானோர் புனித ஜும்ஆ கடமையை நிறைவேற்றியதுமான பள்ளிவாசல் மாதா தேவாலயமாகவும் எமது கண்முன்னே காட்சியளிக்கிறது. எதிர்காலங்களில் இவ்வாறான துயரமிகு சம்பவங்களிலிருந்து வடக்கு முஸ்லிம்கள் பகுதிகளிலுள்ள அல்லாஹ்வின் இல்லங்கள் காப்பாற்றப்பட வேண்டுமாயின் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உடனடியாக இப்பணியில் குதித்தாக வேண்டும்.

இதற்கு வடமாகாணத்திற்கு வெளியே வாழும் அத்தனை முஸ்லிம்களும் பங்காற்ற வேண்டும். முஸ்லிம் அமைப்புக்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்க முன்வரவேண்டும்.

ஆம், வடக்கு முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீச நாம் முன்மொழிந்துள்ள இத்திட்டம் நிச்சயம் உதவும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை களத்தில் குதிக்குமா....??

3 comments:

  1. புதிய அகதி, பழைய அகதி என்ற பாகுபாடு, எவ்வகையிலும் எந்த முஸ்லிமும் தப்பித் தவறியாவது பயன் பெற்றுவிடக் கூடாது என்பதனை கணக்கில் வைத்து உறவாக்கப் பட்ட ஒன்றாகவே இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பள்ளிவாசல் சார்பிலும் ஒவ்வொரு வீடு என்ற நவமணி முன்வைத்துள்ள ஆலோசனை மிகவும் ஏற்புடைய ஒன்று. எடுத்த எடுப்பில் நடைமுறைப் படுத்த சற்று சிரமமான ஒன்றாக இருந்தாலும், இது குறித்து முஸ்லிம் மக்களிடமும், பள்ளிவாசல் நிர்வாகிகளிடமும்
    உரிய முறையில் விளக்கம், விழிப்பூட்டல், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப் பட்டால், இன்ஷா அல்லாஹ் சாத்தியமாக்கலாம்.

    உப்புத் தூள் பக்கெற்றுக்கும் கூட ஹலால் சான்றிதழ் வழங்குவதில் கடும் சிரத்தை காட்டும் ஜமியத்துல் உலமா, இந்த விடயத்தில் ஏதாவது கவனம் செலுத்துமா என்பதனை பொறுத்துப் பார்ப்போம்.

    ReplyDelete
  2. யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. யாரும், எவ்வித தலமைகளுக்கோ, சமூக நலன் கருதி எடுக்கப் படும் தீர்மானங்களுக்கோ கட்டுப் படுவதாக இல்லை.

    ஐதுரூஸ் மகாம் வீதியில் ஏற்கனவே ஒரு வீடு முஸ்லிமல்லாதவர்களுக்கு விற்கப் பட்ட செய்தி வெளிவந்திருந்தது.
    இந்நிலையில், அதே வீதியில், செல்வாக்குடன் வாழ்ந்த குடும்பம் ஒன்றின் இரண்டு வீடுகளில் ஒன்று கடந்த வாரம் விற்பனை செய்யப் பட்டுள்ளது. இக்குடும்பத்தார் தற்பொழுது கொழும்பில் வசதி வாய்ப்புகளுடன் சொந்த வீடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    இவ்விரண்டு வீடுகளின் விற்பனைக்கும், கொழும்பில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டு, யாழ்ப்பாணத்தில் கடை கட்டி, வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் ஒருவரே தரகராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  3. நவமணி ஆலோசனை நன்றாகத்தான் இருக்கிறது சாத்தியப்பட வேண்டுமே!மேலும் பல சகப்தங்களுக்கு முன் நடந்த பள்ளிவாசல் கோயிலாகியது,பள்ளிவாசல் தேவாலயமாகியது என்ற கதைகளை
    விடுங்கள் யாழ் முஸ்லிம்கள் இது பற்றி கதைப்பதில்லை இவ் வரலாற்றை சொல்வது மூலம் ஆசிரியர் எதை சொல்ல வருகிறாரோ தெரியவில்லை இருப்பதை பாதுகாப்பதற்கான வலி முறைகளை ஆராயாமல் பழைய கதைகளை பேசிக்கொண்டுருப்பதில் ஒன்றும் ஆகப்போவதில்லை மேலும் இன முருகலுக்குதான் வழிகொடுக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.