நீதியானதும் நேர்மையானதுமான ஓர் தேர்தல் நடந்தால்...!
கிழக்குத் தேர்தலின் பின்னணி
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம், அதன் பின்னரான சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வின் மீதான அரசின் நடவடிக்கைள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்ததே. இலங்கை அரசையும் அதன் தலைமைகளையும் குற்றக் கூண்டில் நிறுத்தியிருக்கும் இந்நிழ்வுகள்தான் ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களின் போது ஏற்படுத்தப்பட்ட தடங்கல்கள், அரசு முறைப்ப பயணங்களின் போது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள், ஐ.நா. மனித உரிமைத் தீர்மானங்கள் ஆகியனவும் ஏனயவுமாகும். இந்தக் குற்றச் சாட்டுக்களிலிருந்து விடுபட்டு சர்வதேசத்தில் சரிந்து போயிருக்கும் தனது இமேஜை மீட்டுக் கொள்ள வேண்டிய தேவையிலும், அரச தலைவர்களின் மீதான சர்வதேசத்தின் சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான அவசியத்திலும் அரசு மாட்டிக் கொண்டிருக்கின்றது. அரசு இக்கட்டான பொறியில் மாட்டிக் கொண்டிருப்பதாக நான் இங்கு எழுதுவதை அரசின் அமைச்சரான றிஷாத் பதியுத்தீன் அவர்கள் புல்மோட்டையில் நடந்த இறுதிப் பிரச்சாரத்தின் போது ”இந்த நாட்டின் ஜனாதிபதியை சர்வதேசத்தின் தூக்குக் கயிற்றிலிருந்து கழற்றியெடுக்கும் ஒரு பலமான ஆயுதமாக இந்தத் தேர்தல் இருக்கும்” என்று தெளிவாகக் கூறியிருப்பது உறுதிப்படுத்துகின்றது.
இலங்கையின் மூவின மக்களும் ஏறத்தாள சமனாக வாழும் கிழக்கு மாகாண சபையைக் கைப்பற்றி சிறுபான்மை இனங்கள் அரசுடன் இருப்பதாகவும், சிறுபான்மை மக்களுக்கு இந்நாட்டில் பாரபட்ஷம் காட்டப்படவில்லை என்பதனை சர்வதேசத்துக்குக் காட்டுவதன் மூலம் தனது நோக்கங்களை அடைந்து கொள்ள அரசு எத்தனிக்கின்றது. யுத்தத்துக்குப் பின்னர் வடக்கில் பல தேர்தல்கள் நடாத்தப்பட்டிருந்த போதும், 2010 இல் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதாக அரசு அறிவித்திருந்த போதும் அந்தத் தேர்தலை கண்ணிவெடிகளைக் காணரம்காட்டி அரசு பின்போட்டுவிட்டு கிழக்கில் கை வைத்திருக்கின்றது.
வடக்கில் தனக்கு நிமை சாதகமாக இல்லை என்பதும் கிழக்கில் தனது இலக்கை இலகுவில் அடைந்து கொள்ளலாம் என்பதும் அரசின் நிலைப்பாடாகும். கிழக்கு மாகாண சபையை உரிய காலத்துக்கு முன்னரே கலைத்து எதிர்வரும் நவம்பருக்கு முன்னர் தனது நிலைப்பாட்டை சரி செய்து கொள்ள அரசு நம்பியிருந்த ஆயுதம் முஸ்லிம் காங்கிரஸாகும். மு.கா. அரசோடு இருப்பதை ஆதாரமாகக் கொண்டு அரசு இந்தப் பலப் பரீட்ஷையில் இறங்கியது.
மு.கா. இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனிக் கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கீகரிக்கப்பட்டதாகும். கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை எவ்வாறு போனாலும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தெரிவாக இருப்பது இக்கட்சியே. மக்களின் இந்தப் பலத்த ஆதரவின் காரணமாக மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்தே இலங்கை அரசியலில் தீர்மானிக்கின்ற சக்தியாக, பேரம் பேசும் பலமாக இக்கட்சி இருந்து வந்திருக்கின்றது.
தன்னோடு பேரம் பேசும் ஒரு சக்தி இருப்பதனை ஒரு போதும் ஆளும் தரப்பு சகித்துக் கொண்டிருப்பதில்லை. ஆளும் தரப்பின் சூழ்ச்சிகளுக்கு மு.கா. எப்போதும் இலக்காகியே வந்திருக்கின்றது. அண்மையில் மு.கா. அரசோடு இணைந்து கொண்ட போது ”எனது கண்களைத் திறந்து கொண்டே குழியில் விழுகின்றேன்” என மு.கா. தலைவர் ஹகீம் கூறியதன் அர்த்தம் இதுதான். ஆளும் தரப்பின் சதிவலையில் சிக்குண்டு கட்சிக்குள் இருந்து கொண்டே கட்சித் தலைமையைத் தனிமைப்படுத்திவிட்டு தாவுகின்ற எத்தனத்திலிருந்து கட்சியைக் காப்பாற்றும் நிர்ப்பந்தம் காரணமாகவே அரசோடு இணையும் தேவை ஹகீமுக்கு வந்தது.
எனவே, தனது தலைமைத்துவத்திலும் முஸ்லிம்களின் பேராதரவு மு.கா. வுக்கு உண்டு என்பதனை ஊர்ஜீதப்படுத்தும் தேவை மு.கா. தலைமைத்துவத்துக்குத் தேவைப்பட்டது. அதற்கான ஒரே வழி மக்களின் ஆணையை தருகின்ற தேர்தல் ஒன்றின் வெற்றியாகும். சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த மு.கா. தலைமைக்கு வாய்த்தது கிழக்குத் தேர்தல். தனித்து நின்று போட்டியிட்டு மு.கா. வுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை மீண்டுமொருமுறை நிலைநிறுத்திக் காட்ட தலைமை தயாரானது. ஆனால், கட்சியின் நலன் கருதி, அரசுக்கு முண்டு கொடுக்கும் முகவர்களின் நிர்ப்பந்தத்துக்கு கட்டுப்படவேண்டிய நிலைமை தலைமைக்கு ஏற்பட்டது.
அரசிலிருந்து மு.கா. தனித்தல்
அரசுக்கு மு.கா. தேவை, முகவர்களுக்கு அரசு தேவை, தலைமைக்கு மக்கள் ஆணை தேவை. மக்களுக்கு அரசு தேவையில்லை. ஆனால் இதிலிருந்து வேறுபட்ட மற்றோரு புலமும் மு.கா. – அரசு உறவில் செல்வாக்குச் செலுத்தியது. அதுதான் தேசிய காங்கிரஸ் தலைமை அமைச்சர் அதாஉல்லா.
அமைச்சர் அதாஉல்லாவின் அரசியலுக்கு அக்கரைப்பற்றில் சவாலாக இன்று எழுந்து நிற்பவர் தவம். இவர் கடந்த மாநகர சபைத் தேர்தல் வரை அதாஉல்லாவின் தானைத் தளபதி. அப்போதைய அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக இருந்த தவம் அமைச்சரின் மகனின் அரசியல் பிரவேசத்தின் தேவை கருதி அமைச்சரினால் ஓரங்கட்டப்பட்டார். தேசிய காங்கிரஸின் மாநகர சபை வேட்பாளராக நிறுத்தப்பட்ட போதும் அமைச்சரினால் பகிரங்கமாகவே நிராகரிக்கப்பட்டார். அதிருப்தி மேலோங்கவே அதாஉல்லா – தவம் முறுகலும் வலுப் பெற்றது. கட்சியிலிருந்த தவத்தை நீக்குவதன் மூலம் மாநகர சபை உறுப்புரிமையையும் தவத்திடமிருந்து பறித்தெடுப்பதற்கு தேசிய காங்கிரஸ் தலைமை தயாராகிவிட்டதை மோப்பம் பிடித்த தவம் அதற்கு ஒருநாள் முன்னதாகவே பத்திரிகையாளர்களைக் கூட்டி தனது மாநகர சபை உறுப்புரிமையோடு சேர்த்து தே.கா. உறுப்புரிமையையும் களைவதாக அறிவித்தார். இராஜினாமா செய்த கையோடு மு.கா. வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அக்கரைப்பற்றில் தவம் அவர்களுக்கு கணிசமான ஆதரவு இருப்பதனை மறுப்பதற்கில்லை. அக்கரைப்பற்றில் மு.கா. வை அழிப்பதற்கு அதன் முன்னாள் அமைப்பாளர் உவைஸ் பணியாற்றி வந்ததும், அமைச்சர் அதாஉல்லாவின் ஆசீர்வாதம் இருந்ததும் ஊரறிந்த இரகசியம். எனவே, மு.கா.வுக்கு அக்கரைப்பற்றில் செய்யப்படுகின்ற சதியிலிருந்து அதனை மீட்டெடுக்க காலம் கனிந்திருப்பதாகக் கண்ட மு.கா. தலைமை தவத்துக்கு மாகாண சபைத் தேர்தலில் இடமளிக்க முன்வந்தது. தவத்துக்கு இடமளிக்கப்படுவது தனது வாரிசான தற்போதைய மாநகர சபை மேயர் சக்கியின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியக்கிவிடும் என்பதனால் மாகாண சபை வேட்புமனுவில் தவத்துக்கு இடம் கிடைத்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் அதாஉல்லா கண்ணும் கருத்துமாக இருந்தார்.
இதனாலேயே ஐ.ம.சு.கூ. இல் மு.கா. வுக்கு திகாமடுல்லவில் ஒதுக்கப்படும் வேட்பாளகளின் எண்ணிக்கை ஐந்தா, ஆறா எனும் இழுபறி ஏற்பட்டது. அமைச்சர் அதாஉல்லா மு.கா.வுக்கு ஐந்து இடங்களே வழங்கப்பட வேண்டும் என்பதில் பிடியாக இருந்தார். மு.கா. வுக்கு ஐந்து இடங்கள் வழங்கப்படும் போது தவத்துக்கு சந்தர்ப்பம் கிடைக்கமாட்டாது என்பது அதாஉல்லாவின் கணிப்பு. மு.கா. வை அரசின் பட்டியலில் தனக்குத் தோதான எண்ணிக்கை ஆசனங்களுடன் கட்டிப்போட அவர் முனைந்தார்.
தனித்து தேர்தலில் இறங்க வேண்டும், அதாஉல்லாவுக்கு சவால் விடுக்கும் சக்தியாகிய தவத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் ஆகிய இரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் வீழ்த்துவதற்கு இதுவே ஹகீமுக்கு வாய்ப்பாகிப் போனது. திகாமடுல்லவில் ஆறு ஆசனங்கள் வேண்டும் எனும் துரும்பைத் தூக்கிப் போட்டார் ஹகீம். இந்த வியுகம் புரியாமல் ஒற்றைக் காலில் நின்றார் அதாஉல்லா. அதாஉல்லா நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. ஆறு ஐந்தானது. ஹகீம் எதிர்பார்த்தது வாய்த்தது. ஹகீம் தனித்துத் தேர்தலில் இறங்க முடிவெடுத்தார்.
மு.கா. தனித்து தேர்தலில் இறங்குவதற்கு எடுத்த முடிவோடு மற்றுமொரு விடயத்தையும் ஹகீம் செய்து வருகின்றார். அதுதான் கட்சி தாவும், தாவத் தயாராக இருக்கும் உறுப்பினர்களை மக்கள் முன் நிறுத்துவதாகும். கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் குறிப்பாக வேட்பாளர்கள் இன்று மக்கள் மன்றத்தில் சமயப் பெரியவர்கள் முன்னிலையில் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படுவதுபற்றி வாக்குறுதி வழங்கியிருக்கின்றார்கள். அடிமட்டத் தொண்டர்கள் அன்றி இவர்கள் தான் எதிர்கால்லத்தில் தாவும் சாத்தியமுள்ளவர்கள். தாம் வழங்கிய வாக்குறுதியின் மீது நிலைத்திருக்க வேண்டிய கட்டாயம் அதனை வழங்கியவர்களுக்கு இருக்கின்றது. இது ஹகீமின் மற்றுமொரு அடைவாகும்.
அரசு
ஹகீமின் இந்த முடிவினால் ஆட்டம் கண்டிருப்பது அரசு என்பதனைவிட அதாஉல்லாதான் அதிகம் ஆட்டம் கண்டிருக்கின்றார். அரசுக்குத் தேவை கிழக்கு மாகாணத்தில் வெற்றி. மூவின மக்களும் ஏறத்தாள சமனாக வாழும் இம்மாகாணத்தில் தமிழரின் வாக்கு நிச்சயம் அரசுக்கு இல்லை. இருந்திருந்தால் வடக்கிலும் தேர்தல் நடாத்தியிருக்கலாம். எனவே மு.கா. வை இணைத்துக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறலாம் என்ற எண்ணத்தில் மாகாணத்தைக் கலைத்த அரசும் ஹகீமின் வெளியேற்றத்தை இவ்வளவு இலகுவாக எதிர்பார்க்கவில்லை. இதற்கு அதாஉல்லாவினால் அதீத நம்பிக்கை ஊட்டப்பட்ட அமைச்சர்களும் காரணம்.
எதிர்பார்த்ததற்கு மாற்றமாக சிறுபான்மையினர் தத்தமது அடையாளத்தை நிலைநாட்டுவதற்கு தயாராகிவிட்ட நிலைமை காணப்படுவதனால் அரசு இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. அரசு ஒரு புறமும். மு.கா. மறுபுறமும், த.தே.கூ. இன்னோரு புறமுமாக மும்முனைக் களமாக மாறியிருக்கிறது கிழக்கு. மு.கா. அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்குமானால் அரசுக்கு இந்த திரிசங்கு நிலை ஏற்பட்டிருக்காது. இந்நிலை அரசுக்கு ஏற்பட்டமைக்கான முழுக் பொறுப்பையும் அமைச்சர் அதாஉல்லா ஏற்கவேண்டும்.
இந்தத் தேர்தலில் அரசு தோல்வியுறுமாக இருந்தால் அரசிலும், அக்கரைப்பற்றிலும் அதாஉல்லாவின் அரசியல் இருப்பு சரிந்து விழும்.
கிழக்குத்தேர்தலில் அரசு மண்கவ்வும் என்று புலனாய்வு அறிக்கைகள் அரசுக்குச் சொல்லியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அரசின் நோக்கத்தை அடைந்துகொள்ள எவ்வாறான கைங்கரியங்ளை ஆற்றலாம் என ஜனாதிபதி தலைமையில் பொலநறுவையில் மந்திராலோசனை நடைபெற்றிருப்பதாக அறியக் கிடக்கின்றது.
தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டு தேர்தலில் வென்றதாகக் காட்டுவதனையும்விட, நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நடாத்தி தோல்வியுறும் பட்ஷத்தில் தோல்வியை பக்குவமாக ஒப்புக்கொள்வதே அரசுக்கு சாலப் பொருத்தமானதாகும். ஏனெனில் இரண்டு முறைகேடுகளுக்காக சர்வதேசத்திடம் மாட்டிக் கொள்ளும் நிலையைத் தவிர்ப்பதே மேல்.
கள நிலவரம்.
கிழக்கின் கள நிலவரங்களைப் பார்க்கின்ற போது அரசு மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. இதற்கு அரசு மேற்கொண்டுவரும் சிறுபான்மையினரின் இருப்பு மீதான கெடுபிடிகளே காரணமாகும். வாழ்க்கைச் செலவு வரவையும் விஞ்சிவிட்ட இக்காலகட்டத்தில் கிழக்கு மக்களோ வாழ்வே கேள்விக் குறியாகியிருப்பதாக எண்ணுகின்றனர்.
தமது சொந்த வயல் நிலங்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடுவதற்கு யுத்த காலத்தில் கூட இல்லாத கெடுபிடிகளை விவசாயிகள் எதிர் நோக்குகின்றார்கள். வெள்ளத்தில் அழிந்துபோன செந்தக் காணிகளின் அணைகளைக் கூட திருத்துவதற்கு இராணுவத்தின் அனுமதிக்காக பல நாட்களாக அலையவேண்டியிருப்பதாக விசாயிகள் சலித்துக் கொள்கின்றார்கள்.
தமது மதச் சுதந்திரம் கேலி செய்யப்படுவதாக சிறுபான்மை மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களின் மீது நடாத்தப்படும் தாக்குதல்களுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என அரசு திரும்பத் திரும்பச் சொன்னாலும் அந்தச் சொல்லின் மீது மக்களுக்கு நம்பிக்கை தரும் வண்ணம் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை அரசு நீதியின் முன் நிறுத்தவில்லை என்பது மக்களை அவநம்பிக்ளை கொள்ள வைத்துள்ளது.
அரச தரப்பு வேட்பாளாகள், அமைச்சர்களின் தேர்தல்கால கெடுபிடிகள் மக்களை அரசின் மீது வெறுப்படையச் செய்திருக்கின்றது. குறிப்பாக அமைச்சர் அதாஉல்லாவின் கெடுபிடிகள் அக்கரைப்பற்று மற்றும் அம்பாறையின் முஸ்லிம் பிரதேச மக்களிடத்தில் அரச தரப்புக்கு மிதக்கும் வாக்காளர்களிடம் இருந்த கடைநிலை ஆதரவைக்கூட இல்லாமலாக்கியிருக்கின்றது.
வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்கப்போகின்றார்கள், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படவில்லை என்பனவே எதிர்த்தரப்பினர் மீது அரச தரப்பு பிரச்சாரம் செய்யும் குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன. வடக்கு – கிழக்கு இணைப்பு பிரிப்பு பற்றி ஏனய மாகாண மக்களைவிட வடக்கு கிழக்கு மக்கள் மிகுந்த அரசியல் அறிவுடன் இருப்பதனால் இந்தப் பிரச்சாரம் வெகுவாக மக்களிடம் எடுபடவில்லை என்றே தோன்றுகின்றது. மேலும் ஊடகங்கள், சமூ வலைத் தளங்கள் மூலம் தகவல்கள் உடனுக்குடனும், துல்லியமாகவும் மக்களைச் சென்றடையும் இந்தக் காலத்தில் வழிபாட்டுத் தல விடயமும் மக்களிடம் எடுபடவில்லை.
மு.கா. கிழக்குத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக வரப்போவதை ஏனய இரண்டு அணிகளினதும் பிரச்சாரங்களில் இருந்து அறிய முடிகின்றது. ஆளும் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் தமது விடயங்கள் தொடர்பில் பேசியதைவிட ஹகீமின் மீது வசை பாடியதையே மேடைகளில் அதிகமாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. இது தாம் முஸ்லிம்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டவர் என்று எண்ணிக் கொண்டிருந்த ஹகீம் மீண்டும் தன்னை தூக்கி நிலைநிறுத்தி வருகின்றார் என்பதனால் ஏற்பட்ட அச்ச உணர்வென்றே தோன்றுகின்றது. குறிப்பாக, அதாஉல்லா, றிஷாத் பதீஉத்தீன், ஹிஸ்புல்லா மற்றும் அமீர் அலி, அஸ்வர் ஆகியோர் ஹகீம் வசை மழை பொழிவதில் முன்னணி வகிப்பதோடு ஹகீமைப் பற்றி அரச உயர் மட்டத்திலும் போட்டுக் கொடுத்துக் கொள்கின்றார்கள். இதனை அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஹகீமிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கின்றார்.
த.தே.கூ. முஸ்லிம் காங்கிரஸோடு அதிக பட்ஷ விட்டுக் கொடுப்போடு கிழக்கில் ஆட்சி அமைப்பது பற்றிப் பேசி வருகின்றார்கள். அத்தோடு தங்களது நிலைப்பாட்டை சர்வதேசம் வரவேற்பதாகவும் கூறுகின்றார்கள். அமைச்சராக இருந்து கொண்டே அரசுக்குப் போட்டியாக களமிறங்கிய ஹகீமின் தைரியத்தை சிலாகிக்கின்றார்கள். இது முஸ்லிம்கள் இல்லாமல் தீர்வொன்றுக்குப் போக முடியாது எனும் பாடத்தை அவர்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனைக் காட்டுகின்றது. இது கிழக்கின் தீர்மனிக்கும் சக்தியாக வரப்போகின்ற மு.காவை அனுசரிப்பதனால் மாத்திரமே முடியும் என்று அவர்கள் கருதுவதனாலாகும்.
ஆக, மு.கா. எந்தப்பக்கம் சாய்கின்றதோ அவர்கள் கிழக்கின் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள். இது சிறுபான்மை மக்களுக்கு குறிப்பாக பேரின சிந்தனையால் அன்றிலிருந்து இன்றுவரை வஞ்சிக்கப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கு தங்கள் நியாயமான அபிலாஷைகளை சம பலத்துடன் நின்று பேசுவதற்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகும். இதனை முஸ்லிம்கள் தவற விடக் கூடாது.
மட்டுமல்லாமல் தமிழர் தரப்பும் இந்தத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் விட்ட தவறுகளில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று பட்டால்தான் வாழ்வு உண்டு என்பது ஏட்டுச் சுரைக்காயாக ஆகிவிடக் கூடாது.
கிழக்கில் முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்வது நாம் அனைவரும் எதிர்பார்ப்பதும், விரும்புவதுமாகும். அனைவரதும் சுபீட்ஷமான வாழ்வுக்கு இது இன்றியமையாததாகும். அயலவருடன் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் வாழவேண்டும் என்பதற்கா நமது வீட்டின் வேலிளைப் பிடுங்கிப் போடவேண்டியதில்லை. நமது வேலிகளுடன் அடுத்தவர் உரிமைகளை மதித்து நமது கடமைகளைச் செய்து மானிட மாண்போங்கி வாழ இந்தத் தேர்தலைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இந்தத் தேர்தலை நடாத்துவதில் அரசுக்கு என்ன தேவைப்பாடு இருந்தாலும் வாழப்போகின்ற நாம் நமது தேவைப்பாட்டை அடைந்து கொள்ள கரிசனை எடுப்போம்.
எல்லாவற்றுக்கும் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்தாக வேண்டும்.

மாஷா அல்லாஹ் நல்ல கருத்துக்களை கூறினீர்கள். ஹக்கீமை அவமானப்படுத்தியவர்கள் வரிசையில் நன்றி மறந்த பாயிஸை மறந்து விட்டீர்கள் போலும்
ReplyDeletesabaash....omar farook....thamilarkal TNA itku vaakkalipparkal enral muslimkalai muslimcongres itku vaakkalikka solla ean oruvrum nadunilamyaha munvaruvathillai.muslimkale sinthiyunkal.senchoatruk kadan kalikkum muslim arasiyalwathikalin maya walai il irunthu emmai paathukaththu Insha allah anaivarum Muslimcongress itku vaakkalippoam.
ReplyDeleteயார் எது சொன்னாலும் இப்படியான சிந்தித்து சமூகத்துக்கு அறிவுறுத்தும் காலத்துக்கு ஏற்ற கட்டுரைகள் நம்மை வலம்வரவேண்டும் ஓமர் பாருக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேவையான நேரத்தில் சரியான கருத்தக்களை உள்வாங்கி எழுதியமைக்காக உமர் பாருக் அவர்களுக்கு அல்லாஹ் நல்வழியைக்காட்டுவானாக.,அத்துடன் மு.கா.அணைவருக்கும் ஹிதாயத்தை கொடுத்து முஸ்லிம்களை நல்வழிப்படுத்தி தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக.
ReplyDeleteமுஸ்லிம் காங்ரஸ் சரியோ, பிழையொ நாட்டு நிலைமைகளைப் பொருத்த முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதே பொருத்தமென்று நினைக்கிறென். துரதிஷ்டவசம் நாம் இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்கவில்லையாயினும் நாம் முஸ்லிங்காங்கிரஸ் வெற்றிபெரவேண்டுமென்று பிரத்திக்கிரோம்.
ReplyDeletenalla unmaiyana bisayam sollum anaivarukkum en salam
ReplyDeleteகாலத்துக்கேற்ற கட்டுரை வாழ்த்துக்கள் உமர் பரூக் அவர்களுக்கு.
ReplyDeleteஆம், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நோக்கத்தில் கட்டுரையாளர் எழுதி உள்ளார். இது கருத்து தெரிவிப்பவர்களின் கருத்துக்கள் மூலம் தெளிவாகிறது. மற்றும் திரு "UNKNOWN " என்பவர் உமர் பாரூக் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு மாத்திரமே ஹிதாயத் வேண்டுகிறார் போலும். பாவம் அவரது அறியாமை. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ ஹிதாயத் கொடுப்பானாக!
ReplyDeleteதம்பி இக்கறாம் அதாஉல்லா என்ற ”கண்ணாடி” யைக் கழற்றி வைத்துவிட்டு சமூகத்தை கொஞ்சம் பாருங்கள். கட்டுரைகளில் சொல்லப்பட்ட கருத்துக்களைப் பற்றிப் பேசாமல் உங்கள் பதி விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்காக கண்டதை எல்லாம் எழுதாதீர்கள். யதார்த்தம் என்று ஒன்று இருக்கின்றது. விமர்சனம் செய்யும் போது விசனப்படாதீர்கள்.
ReplyDeleteபாவம் ikram நுனிப்புல் மேய்பவர் போலும்,மு.கா.கட்சி தற்போது முஸ்லிம் சமூகத்துக்கு தேவை அதில் இருப்பவர்கள் நல்லவர்களாக ஆகும் போது நல்லதே நடக்கும் என்பது என்னுடைய ஆவலும்,கருத்தும் ஆகும்.சரி உங்களையும் மு.கா.சேர்த்துக்கொள்ளும் படி சம்பந்தப்பட்டவர்களை இங்கு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteவேறு வழி இன்றி "கஹடோவிட" வின் கருத்துக்கு நான் உடன் படுகிறேன். முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாய் இலங்கையில் முஸ்லிம்களுக்கும், பிற சமூகங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பதிவாகிவிட்டது. அவ்வளவு தியாகங்களுக்கு மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாய் வளர்க்கப் பட்டது. நமக்கு ஒரு (இலங்கை முஸ்லிம்களுக்கு) அரணாகவும் இருந்தது. தற்பொழுது கட்சியில் இருப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி.. பொறுப்பின் பாரத்தை. வோட்டுக் கேட்டுவிட்டு கை கழுவி விடாதீர்கள். இவ்வளவு நம்பிக்கயின்மைக்கும் மத்தியில் இம்மக்கள் வோட்டுப் போடுவது உங்களுக்காக அல்ல... மரம் சாயந்து விடக் கூடாது என்பதற்காக எவர் என்ன சொன்னாலும் மக்கள் இன்ஷா அல்லாஹ் வாக்களிப்பார்கள்.. இது நம்பிக்கை, எதிர்பார்ப்பு, நெருப்பு . மக்கள் நம்பிக்கையில், பிள்ளைகளின் எதிர் காலத்துடன் விளையாடாதீர்கள்.
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்துக்கு தேவையானதும் ஆரோக்கியமானதுமான கட்டுரை தொடர்ந்து எழுதுங்கள்.. ஆனால் தனிப்பட்ட நபரின் ஆதரவாளராக மாறிவிடாதீர்கள்...
ReplyDeleteIkram உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்... நீங்கள் நிறையப் பேரை எழுதத் தூண்டுகிறீர்கள்... தொடர்ந்து உங்களது கருத்தை முன்வையுங்கள்.. ஆனால் உங்களது கருத்தை கொஞ்சம் நியாயப்படுத்தும்படி எழுதுங்கள்...