Header Ads



நீதியினைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதி இழைக்க முடியாது - சம்பந்தன்

TM
 
ஹனீக் அஹமட்
 
 முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்படமாட்டோம். நீதியினைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியினை இழைக்க முடியாது என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
 
 கிழக்கு மகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துறைநீலாவணை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 
கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துவதன் நோக்கம் குறித்து அரசாங்க அமைச்சர்களே பகிரங்கமாக கூறியிருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைத் தோற்கடிக்க வேண்டும். கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால், தமிழ் - முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை ஆதரிக்கின்றார்கள். எனவே, சர்வதேச சமூகம் எந்தவிதமான அழுத்தங்களையும் அரசாங்கம் மீது பிரயோகிக்கத் தேவையில்லை என்பதை வலியுறுத்த முடியும். அதற்கு இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுதான் இந்தத் தேர்தலுடைய பின்னணியாகும். கிழக்குத் தேர்தலின் முடிவினை சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது.
 
இந்தத் தேர்தலில் அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பினார். அவ்வாறு இணைந்து போட்டியிட்டால் வெற்றி இலகுவானதாகி விடும். அந்த வெற்றியினைக் காட்டி சர்வதேச சமூகத்தின் முயற்சிகளைப் புறந்தள்ள முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால், முஸ்லிம் மக்களும் - முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதை விரும்பவில்லை. அதன் காரணமாக தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. இதனால் நிலைமை முழுமையாக மாறியிருக்கின்றது. அரசாங்கம் எதிர்பார்த்த வெற்றியினை அடைய முடியாததொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.
 
நாம் எவருக்கும் அநீதி இழைக்கமாட்டோம். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினை அரவணைத்து அவர்களின் ஆதரவினைப் பெற்று அவர்களும் திருப்தியடைக்கூடிய வகையில்தான் எங்களுடைய முடிவுகளை நாம் எடுப்போம். முஸ்லிம்களுக்கு மாறாகவோ, எதிராகவோ அல்லது அவர்களைப் பலவீனப்படுத்தும் வகையிலோ நாம் செயற்பட மாட்டோம். நீதியினைக் கேட்கின்ற நாங்கள் எவருக்கும் அநீதியினை இழைக்க முடியாது என்றார்.
 
 

1 comment:

  1. இந்த ஞானம் அப்போது பிரபாகரனுக்கு வந்திருந்தால் இன்றைய நிலைமை அவர்களுக்கு வந்திருக்காதோ!...

    ReplyDelete

Powered by Blogger.