ரத்தம் சிந்தாப் போரில், சிந்தப்படும் ரத்தங்கள்..!
தம்பி
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் என்பார்கள். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் என்பார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக நமது அரசியலோ ரத்தம் சிந்துகின்ற போராக மாறியிருக்கிறது. குறிப்பாக, தேர்தல் களத்தில் பெண்களையே மிக மோசமாகத் தாக்குகின்ற வெறியினை இந்த அரசியல் நம்மவர்களுக்கு ஊட்டியிருப்பதை நினைக்கையில் கவலையாக இருக்கின்றது.
ஏறாவூர் பிரதேசத்தில் மு.காங்கிரசுக்காக வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களை, ஐ.ம.சு.முன்னணியின் ஆதரவாளர்கள் குழுவொன்று - மிக மோசமாகத் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்கள்.
நமது அரசியல் கள நிலைவரம் இந்தளவு மோசமடைவதற்கு - பெரும் பதவியிலுள்ள அரசியல்வாதிகளே காரணமாகவுள்ளனர். குறிப்பாக, அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகளின் குழுக்களே இவ்வாறான செயற்பாடுகளில் மிக அதிகம் ஈடுபடுவதாகப் புகார் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் - தமது பதவியினையும், அரச வளங்களையும் தேர்தலின் பொருட்டு துஷ்பிரயோகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
உதாரணமாக, வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்து கொடுக்கும் உறைகளிலே - பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தனது பெயர் மற்றும் விருப்பு இலக்கம் போன்றவற்றினை அச்சிட்டுள்ளார் என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வடமத்திய மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரான பேர்டி பிரேமலால், இம்முறையும் வெற்றிலைச் சின்னத்தில் அங்கு போட்டியிடுகின்றார்.
இதேபோன்று கமநல சேவைகள், வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன, வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது இளைய சகோரதர் எஸ்.எம். ரஞ்சித் என்பருக்கு ஆதரவு திரட்டும் நோக்குடன் - தன்னுடைய அமைச்சினூடாக விவசாய உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இவ் விடயம் தேர்தல் கண்காணிப்பாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டதையடுத்து, அமைச்சர் சந்திரசேன நடத்தவிருந்த விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வொன்று - தேர்தல் ஆணையாளரின் தலையீட்டினால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அமைச்சர் சந்திரசேனவின் இளைய சகோதரர் ரஞ்சித் என்பவர், கலைக்கப்பட்ட வடமத்திய மாகாணசபையில் உறுப்பினராக இருந்தவர்.
இவ்வாறான தேர்தல் துஷ்பிரயோகங்களில் ஆங்காங்கே ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்ற போதிலும், கிழக்கு மாகாண தேர்தல் களத்தில்தான் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அதிகமாக எழுந்துள்ளன. குறிப்பாக, அமைச்சர் அதாஉல்லா மீதே இவ்வகையான புகார்கள் தொடர்ச்சியாகச் சுமத்தப்பட்டு வருகின்றன.
உதாரணமாக, அமைச்சர் அதாஉல்லா தனது வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரிப்பதற்காக, அரச வளங்களை அதிகளவில் பயன்படுத்துவதாகவும், அரச ஊழியர்களை அச்சுறுத்தி வருவதாகவும் 'பஃப்ரல்' அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகின்றார்.
பொது நிர்வாக அமைச்சு மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் கீழுள்ள வாகனங்களை தனது தேர்தல் தேவைகளுக்காக அமைச்சர் அதாஉல்லா பயன்படுத்தி வருகின்றார் எனவும், அரச உத்தியோகத்தர்களை – அமைச்சர் அச்சுறுத்தியுள்ளார் எனவும் ரோஹன ஹெட்யாராச்சி மேலும் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அக்கரைப்பற்றிலுள்ள தேசிய நீர்வழங்கல் அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதியினை அமைச்சர் அதாஉல்லா தமது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றாரென 'கபே' அமைப்பும் தெரிவிக்கின்றது. இந்தச் சுற்றுலா விடுதியில் 20 க்கும் மேற்பட்ட ஆட்களுடன் அமைச்சர் தங்கியுள்ளதாகவும் 'கபே' கூறுகின்றது.
தேர்தல் காலங்களில் அமைச்சர் அதாஉல்லா, மேற்படி சுற்றுலா விடுதியில் தங்கியிருந்து தனது தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது ஒளிவு மறைவானதொரு விடயமல்ல. அக்கரைப்பற்று மாநகரசபையின் தற்போதைய உறுப்பினரான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி கடந்த 2009 ஆம் ஆண்டு அமைச்சர் அதாஉல்லாவின் ஆட்களால் கடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அப்போது, அவரைக் கடத்தியவர்கள், மேற்படி தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த அமைச்சர் அதாஉல்லாவிடமே கொண்டு சென்றதாக, ஹனீபா மதனி – தன்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அதாஉல்லா மீது தொடராகவும், அடிக்கடியும் - இவ்வாறு எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்திற்கொண்ட தேர்தல் திணக்களம் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக 03 பேர் கொண்ட குழுவொன்றினை களத்துக்கே அனுப்பி வைத்திருந்தது.
அக்கரைப்பற்றினைத் தளமாகக் கொண்டு அமைச்சர் அதாஉல்லா பல்வேறு வகையான தேர்தல் துஷ்பியோகங்களை மேற்கொண்டு வருகிறார் என அரசியல் கட்சிகளும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றில் உண்மைகளும் இல்லாமலில்லை. கடந்த நோன்பு காலத்தின் போது, அக்கரைப்பற்றில் மு.காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வினைத் தடுத்ததும், அங்கு வரவிருந்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததும் அமைச்சர் அதாஉல்லாவின் ஆட்கள்தான்! இதை நிரூபிக்கும் வகையிலான பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆனாலும், அந்த ஆர்ப்பாடங்களில் தன்னுடைய தேசிய காங்கிரஸ்காரர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் அதாஉல்லா சத்தியம் செய்தார்.
குறித்த இப்பதார் நிகழ்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளர் யூ.எல். உவைஸ், அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களான எஸ்.எம். சபீஸ், நஜிமுத்தீன் உள்ளிட்ட பலர் நேரடியாகவே கலந்து கொண்டமைக்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பிறகும் கூட- அமைச்சர் அதாஉல்லா, அதை மறுத்து வருகின்றமைதான் பெரும் பகிடியாகும்!
இதேவேளை, அம்பாறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தயட்சகர் ரணகல என்பவர் - அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச தேர்தல் நடவடிக்கைளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. மேற்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல என்பவர் - அமைச்சர் அதாஉல்லாவுக்கு பக்கச் சார்பாகச் செயற்பட்டார் எனவும், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மோசடிகள் இடம்பெறுவதற்குத் துணைபோனார் என்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் பல்வேறு தடவைகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரொருவர் விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தேர்தல் ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக, பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இவற்றினையெல்லாம் அவதானிக்கும் போது, தற்போதைய தேர்தல் ஆணையாளர் மீது தமக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்தாகவும், கடந்த முறை இடம்பெற்ற தேர்தல் மோசடிகள் இந்த முறை ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைந்துள்ளது எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆறுதல் பட்டுள்ளார்.
ஆனாலும் கூட, தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே, தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். அரச முத்திரை பொறிக்கப்பட்ட தபாலுறைகளை உபயோகித்தல், அரச வாகனங்களைப் பயன்படுத்துதல், அரசாங்கத்தின் சுற்றுலா விடுதிகளைப் பயன்படுத்துதல் போன்ற – தேர்தல் துஷ்பிரயோகங்களில் ஆளுந்தரப்பினர் ஈடுபடுவதாக கண்காணிப்பாளர்கள் விபரிக்கின்றனர். அப்படியென்றால், எவர் எதைச் சொன்னாலும், செய்தாலும் - அரச கட்சி சார்போனோரின் தேர்தல் சட்ட மீறல்கள் நின்றபாடில்லை என்பதே, இதன் மறுபொருளாக அமைகிறது.
சட்டத்தினையும், ஒழுங்கினையும் பாதுகாப்பதில் இரட்டிப்புப் பொறுப்புதாரிகளாகச் செயற்பட வேண்டிய அமைச்சர்களே – சண்டியர்களாகச் செயற்படுவதும், சட்டங்களை அவமதிப்பதும் வெட்கப்படத்தக்க விடயங்களாகும். இந்த நிலை தொடர்ந்தால், நீதியான தேர்தல் என்பது மீண்டும் கேள்விக்குட்பட்டு விடக்கூடும்!
இதேவேளை, வாகனங்களை உடைத்தல், தேர்தல் அலுவலகங்களைச் சேதப்படுத்துதல், மாற்றுக் கட்சிக்காரர்களைத் தாக்குதல், தமக்கு விரோதமானவர்கள் மீது தேர்தல் களத்தினைச் சாட்டாக வைத்து பொலிஸ் நிலையங்களில் பொய்ப் புகார்களைப் பதிவு செய்தல் என்று தேர்தல் வன்முறைகளும், பழிவாங்கும் படலங்களும் கிழக்குத் தேர்தல் களத்தில் பற்றியெரிந்த வண்ணமுள்ளது. இவ்வாறான நிலையில், அமைதியானதொரு தேர்தலை முகம்கொள்வதென்பது சாத்தியமற்றுப் போய்விடும்.
இவ்வாறான அச்சமூட்டும் நடவடிக்கைகள் தேர்தல் களத்தில் தொடர்ந்தும் இடம்பெறுமாக இருந்தால், பொதுமக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கே பயப்படுவார்கள். இதன் காரணமாக, வாக்களிப்பு வீதத்தில் வீழ்ச்சி ஏற்படவும் கூடும்!
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், 09 லட்சத்து 82 ஆயிரத்து 721 பதியப்பட்ட வாக்காளர்களில் 06 லட்சத்து 46 ஆயிரத்து 456 வாக்காளர்களே தமது வாக்குகளை அளித்திருந்தனர். இந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையில், கிட்டத்தட்ட 34 வீதமான வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லவில்லை. இவர்கள் வாக்களிக்கச் செல்லாமைக்கு அப்போதைய தேர்தல் களத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த வன்முறைகளும், அச்சமூட்டும் நடவடிக்கைகளும் கூட காரணங்களாக அமைந்திருந்தன.
இதேவேளை, தேர்தல் நடத்தப்படவுள்ள சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் உத்தியோகபூர்வ இணையத் தளங்களில் - கலைக்கப்பட்ட சபையில் பதவி வகித்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளமையினைக் காணக் கூடியதாக உள்ளது. கிழக்கு மாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே மேற்படி தகவல்கள் அகற்றப்பட்டுள்ளன. குறித்த மூன்று மாகாணசபைகளிலும் மேற்சொன்ன பதவிகளை வகித்தவர்களில் அநேகமானோர் இம்முறையும் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகள் தமது உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மூலமாக இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விளம்பரம் கொடுத்து வருவதாகவே இதனைக் கருத முடிகிறது! இவ்விடயம் குறித்தும், தேர்தல் ஆணையாளரின் உடனடிக் கவனம் திரும்புதல் வேண்டும்.
கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, தேர்தல் களத்தில் சட்டத்தை மீறும் செயல்களும், அச்சமூட்டும் நடவடிக்கைகளும் அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பின்னாலும், முன்னாலும் நிற்பவர்களில் அதிகமானோர் அரச தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கடுவாடு புழுத்தால் உப்பைப் போடலாம், உப்பே புழுத்தால் என்ன செய்வது?
குற்றச் செயல்களை அடக்கி, சட்டத்தினை நிலைநாட்ட வேண்டிய அரசு மற்றும் அரசாங்கத் தரப்பிலுள்ளவர்களே இவ்வாறான தேர்தல் காலங்களில் அவற்றுக்கு முரணாக நடந்து கொள்வதாக வரும் செய்திகள் மக்கள் மனதில் தேர்தல் பற்றிய நம்பிக்கையீனங்களை இன்னுமின்னும் வளர்த்து விடும்!
·

Hello Thambi,
ReplyDeleteSalt never spoil! dont dream for that!
Finally you clearly mentioned for what you are trying and to whom you are targeting
Yes Mr Butt, using muslim women for election purposes may not violate election rules in Sri Lanka but it clearly violates the rules of Islam. SLMC can not go against Islamic principles because they claim that the constitution of their party is Holy Qur aan and Hadees.Howlong will they be decieving innocent people in the name of religion?
ReplyDeleteஅணைகின்ற தீபம்
ReplyDeleteநெய் காய்ந்த போதும்
திரிதான் கருகி
சுடர் மேவி எரியும்.