Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் விபரம் கோரப்படுகிறது

 
இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராம் யாழ் நகரிலே வரலாற்று நெடுங்காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் சமூகம் 1990 ஒக்டோபர் 30ம் திகதியன்று விடுதலைக்காக என்று கூறி புறப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் 2 மணித்தியால கால அவகாசத்தினுள் முழு வாழ்வாதாரங்களும், வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு தாயக மண்ணிலிருந்து ஆயுத முனையில் துரத்தப்பட்டனர்.

அன்று இருந்த இலங்கை அரசாங்கம் இவ்வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ளாததால் சாதாரணமாக கிடைக்கக்கூடிய எந்த அரச நிவாரணமும் உடனடியாகக் கிடைக்காமல் இலங்கையின் வடக்கிற்கு வெளியே வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகமும் பள்ளிவாசல் நிருவாகங்களும் இஸ்லாமிய அமைப்புக்களும் அனாதரவாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட அந்த யாழ் முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்து தேவையானவற்றை வழங்கி ஆறுதலளித்தனர்.

அந்தவகையில் இன்றும் கூட அனைத்து பள்ளிவாசல் நிருவாகங்களுக்கும், இஸ்லாமிய அமைப்புக்களுக்கும் யாழ் சமூகம் நன்றியுடையதாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்திலே 1990 இற்கு முதல் காலாகாலமாக ஒரு தேன்கூடு போல் வாழ்ந்த எமது சமூகம் 1990 இன் பின் சிதறி உறவுகளையும் நண்பர்களையும் இழந்து இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் எந்தவித தாயக உரிமையுமின்றி கடந்த 22 வருடங்களாக சிதறிய சமூகமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

2009 ம் ஆண்டு இலங்கையின் கொடூர யுத்தம் முடிவுறுத்தப்பட்டபின் தம் தாயக மண்ணிற்கு திரும்பிச் சென்ற யாழ் முஸ்லிம் சமூகம் இடிபாடடைந்த வீடுகளையும், அடையாளம் காணப்படாத முகவரிகளையும் கண்டதோடு அவர்களது மீள்குடியேற்றத்திற்கான அரச, அரசசார்பற்ற அமைப்புக்கள் எந்தவொரு உதவியையும் ஒத்தாசையும் வழங்கவில்லை. எவ்வாறு அன்று 1990 இல் யாழ் முஸ்லிம்களின் வெளியேற்றம் அன்றைய அரசால் புறக்கனிக்கப்பட்டதோ அதேபோல் இன்றும் இன்றைய அரசால் மீள்குடியேற்றமும் கவனிக்கப்படாமல் இருக்கின்றது.

இந்த நிலையிலே சாதாரணமாக இலங்கை வாழ் முஸ்லிம் சமூக மத்தியில் இருக்கின்ற அனைத்து அரசியல், சமூக, மத பிரச்சினைகளோடு கடந்த 22 வருடங்களாக ஒரு சமூகக் கட்டமைப்பில்லாது சிதறி வாழ்ந்ததன் காரணமாக எமது யாழ் முஸ்லிம் சமூக மத்தியிலும் சொல்லொனாத் துயரங்களும், பிரச்சினைகளும், தடைகளும், முரண்பாடுகளும் இருந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலே யாழ்முஸ்லிம் சமூகம் இரு தசாப்தங்களுக்கு மேலாக சிதறி வாழ்ந்ததன் காரணமாக தனது சமூகக் கட்டமைப்பையும், சமூக உறவுகளையும் இழந்து அடையாளமற்ற எச்சங்களாக எதிர்காலத்தில் வாழ வேண்டிய நிலை உருவாகும். வெளியேற்றத்தின் பின் இந்த சமூகம் திருமண வைபவங்களிலும், ஜனாஸா நிகழ்வுகளிலும் கூடுகின்ற, உறவுகளை, நண்பர்களைக் காணுகின்ற, இணைகின்ற சமூகமாக மாறிவிட்டது.

யாழ்சமூகக் கட்டமைப்பு இன்றும்கூட ஓரளவு அடையாளம் காணக்கூடியதாக இருப்பதற்கு அவர்களிடையே செயற்பட்ட அரசியல்வாதிகளும், சமூக அமைப்புக்களும், சமூக சேவையாளர்களும் செயற்பட்டிருக்கிறார்கள்.

அத்தோடு இன்னமும் விலகிப் போகாத யாழ் சமூக மத்தியிலான திருமண சம்பந்த உறவுகளும், இச் சமூகத்தை உறவுகளோடு வாழ வைத்திருக்கின்றது.

இன்று இந்த யாழ் சமூகம் மூன்று வகையினராக பிரிந்துள்ளார்கள்

1. யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வாழும் முஸ்லிம் சமூகம்

2. யாழ்ப்பாணத்திற்கு வெளியே புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை இன்னும் பல பிரதேசங்களென சிதறி வாழும் யாழ் முஸ்லிம் சமூகம்

3. இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் யாழ் முஸ்லிம் சமூகம்.

இவ்வாறு சிதறி பல பிரதேசங்கள், பல நாடுகள் என வாழும் யாழ் முஸ்லிம் சமூகத்தின் தகவல்களைத் திரட்டி அவர்களை ஒரு சமூகக் கட்டமைப்பாக அடையாளம் காணக்கூடிய வகையில் ஒரு தகவல் விபரக் கொத்தை உடனடியாக தயாரிக்க வேண்டிய சமூகக் கடமை நம் மத்தியில் உள்ளது. இவ்வாறான ஒரு நடவடிக்கையை இன்று நாம் எடுக்காவிட்டால் இன்னுமோர்
தசாப்தகாலத்தின் பின் நமது சமூகத்தின் அடுத்த சந்ததி ஓர் அடையாளம் காணப்படாத ஆங்காங்கே வாழும் சமூக எச்சங்களாக தனிக் குடும்பங்களாக, தனி மனிதர்களாக வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.

எனவே சகல யாழ் முஸ்லிம் அங்கத்தவர்களும் இதை உணர்ந்து எம்மோடு ஒத்துழைத்துmஅவர்களது குடும்ப விபரங்களை தர வேண்டும். அவற்றை நாம் ஒன்றிணைத்து ஒரு சமூக விபரக்mகொத்தாக நூல் வடிவிலும், ஊனு வடிவிலும் இன்ஷா அல்லாஹ் வெளியிட முடியும். பின்வரும் வகையில் உங்களது குடும்ப விபரங்களை a4 தாளில் ஒரு பக்கத்தில் அமையக் கூடியவாறு தயாரித்து ஒக்டோபர் 15ம் திகதிக்கு முன்னர் எமக்கு சேரக்கூடிய வகையில் அனுப்பி வைக்கவும்
.
குடும்பத் தலைவர் பெயர்,
குடும்ப அங்கத்தவர்களது பெயர்,
வயதும் தொழிலும்,
தகைமைகள்,
1990 ற்கு முன் வாழ்ந்த யாழ்ப்பாண முகவரி,
தற்போதைய வாழ்விட முகவரி,
தொலைபேசி இலக்கங்கள் (நிரந்தர, கையடக்க),
ஈமெயில் முகவரிகள்.

மற்றும் உங்களை இலகுவாக அடையாளம் காணக்கூடிய புனைப் பெயர்கள் அல்லது குடும்ப பெயர்கள் போன்ற விபரங்கள். (1990 இற்கு முன்னரான, வெளியேற்றப்பட்டதன் பின்னரான சகல குடும்பங்களும் தங்கள் தரவுகளை தரவும்.)

கடந்த காலங்களில் நமது சமூகம் பல்வேறு தகவல் பத்திரங்களை நிரப்பியுள்ளமை பல்வேறுபட்ட தேவைகளுக்காக அமைந்திருக்கலாம். ஆனால் இம்முறை நாம் திரட்டப்படும் தகவல்கள் ஒரு நூல் வடிவமாக,  cd வடிவமாக உங்கள் ஒவ்வொருவர் வீடுகளிலும் பாதுகாக்கப்படக்கூடியதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பர்களது, பள்ளித் தோழர்களது, உறவுகளது, சமூக அங்கத்தவர்களது தொடர்பாடல் தொலைபேசி இலக்கங்களையும், முகவரிகளையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இது இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நமது உறவுகளையும் வளர்த்து நமது சமூகத்தின் கட்டமைப்பையும் பாதுகாக்க உதவும். இந் நிகழ்ச்சித் திட்டத்தில் யாழ் சமூகத்தின் பல்வேறுபட்ட கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்ட அனைத்து அரசியல்வாதிகளையும், சமூக அமைப்புக்களையும், சமூக சேவையாளர்களையும், நலன்விரும்பிகளையும் ஒன்றிணைந்து எமக்கு ஒத்துழைக்குமாறு பணிவன்போடு அழைக்கின்றோம். இது எல்லோருடைய ஒரு சமூகக் கடமை. எதிர்கால சந்ததிக்கும், நிகழ்கால சந்ததிக்கும் நாம் அளிக்கும் ஒரு வரலாற்று தகவல் என உணர்ந்து ஒத்துழைக்குமாறு வேண்டுகிறோம்.

எம். எம். எம். அஜ்மல்
செயலாளர் (sedo)

தகவல் அனுப்ப வேண்டிய முகவரிகள் :

செயலாளர் (SEDO)
18/5, ரஹ்மானாபாத், பெரியமுல்லை, நீர்கொழும்பு, ஸ்ரீலங்கா
e-mail : sedosocial@gmail.com / ajmalmmm@gmail.com
0772272742 / 07778053 9 9 / 0773851353
 

1 comment:

  1. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது ஒரு நல்ல முயற்சி என்று கூற முடியுமாக இருந்தாலும், இது குறித்த முதல் அறிவித்தல் அதிகம் அறியப்படாத, யாழ் முஸ்லிம் சம்மந்தப்பட்ட இணையத்தளம் ஒன்றில், அவர்கள் சார்பாக யாழ் முஸ்லிம்களின் விபரங்களைக் கோரி, யாழ் முஸ்லிம் டிராக்டரி என்று ஒன்றை வெளியிடப் போவதாக
    அறிவித்து வெளியிடப் பட்டிருந்தது..

    இப்பொழுது வேறு ஒரு தனிநபரின் முகவரியுடன், அதே வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து தெளிவற்ற தன்மை காணப் படுகின்றது. இரண்டுமே ஒரே நபர்தானா, அல்லது
    வேறொருவரின் திட்டத்தை, இன்னொருவர் பயன்படுத்தி புகழ்பெற்ற முயல்கின்றாரா என்று தெளிவில்லாமல் இருக்கின்றது.

    குறைந்த பட்சம் மேற்படி விடயம் தெளிவு படுத்தப்படும் வரையாவது, யாழ் முஸ்லிம்கள் பொறுமையை, நிதானத்தைக் கைக் கொள்வதே சிறந்தது.

    இவ்வாறான ஒரு பாரிய பணியை, தனிநபர்களோ, சிறு நிறுவனங்களோ மேற்கொள்வதனை விடவும், 'கிளிநொச்சி யாழ்ப்பாணம் முஸ்லிம் சம்மேளனம்' போன்ற பன்முக அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு மேற்கொள்வதே சாலப் பொருத்தமாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.