127 வயது மூதாட்டியின் வாத்துக்கறி சாப்பாடு...!
சீனாவை சேர்ந்த 127 வயது பாட்டி லூ மெய்சன், உலகிலேயே அதிக வயதானவர் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அவர் வாத்துக்கறி, சிக்கனை ஒரு பிடி பிடித்தார்.
சீனாவின் குவாங்சி மாகாணம் பாமா கவுன்டி பகுதியை சேர்ந்தவர் லூ மெய்சன். 1885ம் ஆண்டில் பிறந்தவர். தனது 127வது பர்த்டேயை சமீபத்தில் கொண்டாடினார். இதையொட்டி, அவரது ஒரே மகன் தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். பேர குழந்தைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் புடைசூழ பாட்டி கேக் வெட்டினார். 2 ஸ்லைஸ் போர்க், ஒரு பீஸ் வாத்துக் கறி, சிக்கன் சேர்த்து ஒரு கிண்ணம் நிறைய சாதத்தை பாட்டி ஒரு பிடி பிடித்தார். 2 பீஸ் பர்த்டே கேக் சாப்பிட்டார்.
மகன் பிறக்கும்போது தனக்கு 61 வயது என்பதையும் ஆச்சரியத்துடன் நினைவுகூர்ந்தார். பிரான்சை சேர்ந்த ஜீன் கால்மன்ட் (122) அதிக வயது வரை வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. 1997ல் இறந்துவிட்டார். தற்போது அதிக வயது உள்ளவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளவர் அமெரிக்காவை சேர்ந்த பீஸ் கூப்பர் (116). அவரைவிட சீன பாட்டிக்கு 11 வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டி வசிக்கும் பாமா கவுன்டி பகுதியில் சீனியர் சிட்டிசன்கள் அதிகம். 100 வயதை கடந்தவர்கள் 74 பேர் என்கிறது 2000ம் ஆண்டு சர்வே.

Post a Comment