Header Ads



பயிர் வளர்க்க உரம் போல, முடி வளர்க்க லோஷன்

வழுக்கை பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் விரைவில் லோஷன் அறிமுகப்படுத்தப்படும் என்று அமெரிக்க தோல் நோய் நிபுணர் கூறியுள்ளார்.
 
லோஷன் தயாரிக்கும் ஆராய்ச்சி முழு வீச்சில் நடந்து வருகிறது. 35 வயதை கடந்த ஆண்களில் சராசரியாக 75 சதவீதம் பேர் வழுக்கை தலையர்கள் என்கிறது சர்வதேச புள்ளிவிவரங்கள். பரம்பரை ஜீன், குளிக்கும் தண்ணீர், சுற்றுச்சூழல், அதிக டென்ஷன் என்று வழுக்கைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏராளமான ஆய்வுகள் நடக்கின்றன. பல்வேறு தீர்வுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
 
இந்நிலையில், இதுதொடர்பாக அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சரும பாதுகாப்பு துறை தலைவர் ஜார்ஜ் காட்சரலிஸ் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தலை முடி உதிர்வதும் மீண்டும் முளைப்பதும் தொடர்ந்து நடந்து வரும் செயல். இளம் வயதில் இந்த வேலை தடங்கலின்றி நடக்கிறது. சராசரியாக 30 அல்லது 35 வயதை கடந்த பிறகு, முடி உதிர உதிர, மீண்டும் முளைப்பது நின்றுவிடுகிறது. படிப்படியாக எல்லா முடியும் கொட்டிய நிலைதான் வழுக்கை. புரோஸ்டாகிளாண்டின் டி2 (பிஜிடி2) என்ற ஒரே ஒரு என்சைம்தான் இதற்கு காரணம் என்று சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. 250 வகையான ஜீன்களை அலசி ஆராய்ந்ததில் இது தெரியவந்தது.

வழுக்கை தலை உள்ள 17 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் தலையில் முடி இருக்கும் பகுதியைவிட வழுக்கையாக இருக்கும் பகுதியில் பிஜிடி2 என்சைம் அளவு 3 மடங்கு அதிகம் இருந்தது. இந்த என்சைம் அதிகரிப்புதான் முடி வளர்ச்சியை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டது. பிஜிடி2 என்சைமை கட்டுப்படுத்த ஏற்கனவே பல மருந்துகள் உள்ளன. ஆனால், அவை பக்கவிளைவாக ஆஸ்துமாவை ஏற்படுத்துகின்றன. எனவே, பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் பிஜிடி2 என்சைமை கட்டுப்படுத்தும் மருந்து உருவாக்குவது தொடர்பாக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வழுக்கை தலையிலும் முடி வளரச் செய்யும் லோஷன் 2 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு ஜார்ஜ் கூறினார்.

No comments

Powered by Blogger.