கருமலையூற்று பள்ளிவாசல் விரைவில் பொதுமக்ளிடம் கையளிப்பு - நஜீப் ஏ. மஜீத் உறுதி
அப்துல் சலாம் றிலா
கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டிருந்த திருமலை வெள்ளைமணல், கருமலையூற்று பள்ளிவாயலை மீண்டும் திறந்து பொதுமக்களிடம் கையளிக்க முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை வேட்பாளருமான நஜீப் ஏ மஜீத் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் குழுவின் தலைவரும் சுற்றாடல் துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட குழுவினருடன் நேற்று சனிக்கிழமை (11) நஜீப் ஏ மஜீத் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற கலைந்துரையாடலின்போது கருமலையூற்று பள்ளிவாயலை மீண்டும் திறப்பதுகுறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ மஜீத், அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குழுவினர் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்புகொண்டு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் மார்க்க கடமைகளை மேற்கொள்வதற்காக இப்பள்ளிவாயலை பொதுமக்களுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அத்தோடு முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ மஜீத் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், திருமலை மாவட்ட கிழக்குமாகான சபை வேட்பாளர் ஆதம்பாவா தௌபீக், குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் மாநகரசபை உறுப்பினருமான அப்துல் சத்தார், மாத்தளை மாநகரசபை தவிசாளர் ஹில்மி கரீம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று (11) மாலை கருமலையூற்று கிராமத்திற்கு நேரடியாக விஜயம் செய்தனர்.
இதன்போது நஜீப் ஏ மஜீத் தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா இராணுவத்தின் 22வது படையணி திருமலை மாவட்ட பொறுப்பதிகாரி ப்ரிகேடியர் விஜேரட்னவின் அனுமதியுடன் பள்ளிவாயலினுள் சென்று பார்வையிட்ட பின்னர் கிராம மக்களை சந்தித்தபோது பள்ளிவாயல் சுத்தமாகவும், எவ்வித பாதிப்புமின்றி இருப்பதாக தெரிவித்ததோடு பொதுமக்களை பொறுமையாக இருக்குமாறும் பள்ளிவாயலை ஒருவாரத்திற்குள் மீட்டுத்தருவதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து கிராமமக்கள் இக்குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
வடகிழக்கு யுத்தம் காரணமாக இக்கிராம மக்கள் இடம்பெயர்ந்திருந்த வேளையில் 2007 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த நஜீப் ஏ மஜீத் அவர்கள் கருமலையூற்று கிராம மக்களை மீண்டும் குடியேற்றி கருமலையூற்று பள்ளிவாயலை பத்து இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புனரமைத்து கிராமமக்களுக்கு கையளித்திருந்தார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இராணுவத்தின் 22வது படையணியினர் இப்பள்ளிவாயலை உட்படுத்தி முகாம் அமைத்திருந்தனர். பள்ளிவாயளுக்கு கிராமமக்கள் செல்வதும் தடைப்பட்டது. இதன்பின்னர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் பள்ளிவாயலை பார்வையிட சென்றபோது 2 மணித்தியாலயங்கள் முயற்சித்தும் பள்ளிவாயலை பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில் திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சோழியன் குடுமி சும்மா ஆடாது.
ReplyDelete