நோன்புடன் நித்திரையிலிருந்தவர்கள் மீது ஆசாத்தின் படைகள் வெறியாட்டம் (வீடியோ)
சிரியாவில் புரட்சிப் படையினர் பிடித்து வைத்துள்ள வர்த்தக நகரான அலெப்போவை கைப்பற்ற அதிபர் ஆசாத்தின் அரசுப் படை கடும் போரில் ஈடுபட்டுள்ளது. அலெப்போவை சுற்றி வளைத்துள்ள அரசுப் படை, விமானத் தாக்குதலையும் நடத்தி வருகிறது. இன்று அலெப்போ அருகில் உள்ள பிரதான போர்க்களமான அஜாஸ் பகுதியில், சிரியா ராணுவ போர் விமானம் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இதில் 10 வீடுகள் தரைமட்டமாகின. அந்த வீடுகளில் இருந்த குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரமலான் விரதமிருந்து வரும் பொதுமக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது குண்டுகள் வீசி தாக்கப்பட்டதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். நாய்கள் தான் இதுபோன்ற செயலைச் செய்யும் என்று சம்பவத்தை நேரில் பார்த்த நபர், அரசுப் படைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
இத்தாக்குதலையடுத்து அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் இருக்கின்றனர். எனவே குடும்பத்துடன் துருக்கிக்கு செல்ல உள்ளோம். இங்கு வாழ்வதற்கு சாத்தியமில்லை என்று மற்றொரு நபர் தெரிவித்தார். அதிபர் பசார் நமக்கு என்ன செய்வார் என்பது தெரிந்துவிட்டது என்றும் அவர் விரக்தியுடன் கூறினார். அலெப்போ எல்லையில் உள்ள அஜாஸ் பகுதியை தாக்கி அழித்திருப்பதால், சிரிய ராணுவம் தனது தளத்தை அங்கு அமைத்து எளிதில் முன்னேற முடியும்.

Post a Comment