Header Ads



சிங்கள பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட மஹிந்த ஆட்சேபனை தெரிவிக்கவில்லை - ஹக்கீம்

கிழக்கு மாகாணசபை உரிய பதவி காலத்திற்கு முன்னரே கலைக்கப்பட்டு, தேர்தல் நடாத்தப்படுவதை ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாற்றமான செயற்பாடு என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் விரும்பவில்லை. அதுபற்றி அரசாங்கம் எங்களிடம் கலந்தாலோசிக்கவும் இல்லை. ஆயினும் நான் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை பற்றி தனக்கு தெரியுமென கூறிய ஜனாதிபதி, அதற்கு எந்த ஆட்சேபனையையும்; தெரிவிக்கவில்லை. சுதந்திரமாக எமது கட்சி பிரசார நடவடிக்கையில் ஈடுபட அவர் இடமளித்திருக்கிறார்.

இவ்வாறு நீதி அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெஹியத்த கண்டியவில் புதன்கிழமை (15) நடைபெற்ற பிரசார ஒன்றுகூடல் நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய சிங்கள பிரதேசங்களில் ஒன்றான தெஹியத்தகண்டியவிற்கு மீண்டும் வருகை தந்துள்ள நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் புதன் (15) வியாழன் (16) தினங்களில் அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்சியின் 42 கிளைகளில் அநேகமானவற்றிற்கு சென்று கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டார். 

புதன் கிழமையன்று தியவித்திகல, தியபெதும, அஞ்சிகடே, சூரிய பொக்குன, சமனலதென்ன, குடாகல நாடஸ்வௌ உட்பட பல கிராமங்களுக்கு சென்ற அமைச்சர ஹக்கீம் வியாழக்கிழமை கதிராபொல விஜேபுர, லிஹினியாகம, சல்பிட்டிகம என்பன உட்பட பல குக்கிராமங்களுக்கு சென்று கிழக்கு மகாண தேர்தலில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்பதை வலியுறுத்தி தமது கட்சிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

அமைச்சர் ஹக்கீம் தெஹியத்தகண்டியவில்  உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,

கிழக்கு மாகாண தேர்தலை நடாத்துவதற்கு இன்னும் மிக நீண்டகாலம் இருக்கத்தக்கதாக, அரசாங்கம் இந்த தேர்தலை வலிந்து வரவழைத்துள்ளது. சர்வதேச ரீதியாக இலங்கை முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவும், அடுத்தாண்டு அளவில் நாட்டில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளின் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாலும் இத்தேர்தல் முன்கூட்டியே நடாத்த அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்த தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையிலான ஒரு பலப்பரீட்சையாகவும், மும்முனைப்போட்டியாகவும் தற்பொழுது மாறியுள்ளது. பல்வேறு காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி இந்த மாகாணசபைத் தேர்தலில் பெரிய பின்னடைவை சந்திக்கவுள்ளது.

அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் சிங்கள பிரதேசங்களுக்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே நான் நேரில் சென்று பல்வேறு வகைகளில் பாதிப்புக்குள்ளாயிருக்கும் மக்களை சந்தித்து, நிலைமையை கேட்டறிந்து அவற்றுக்கு எவ்வாறான தீர்வுகளை காணலாம் என்பதைப் பற்றி கவனம் செலுத்தி வருகின்றேன். வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு எவ்வாறான தொழில் வாய்ப்புகளை அரசாங்கத்தினூடாகவும், தனியார் துறையிலும் பெற்றுக் கொடுக்கலாம் என்பதற்கான ஒரு செயல் திட்டத்தையும் தயாரித்து வருகின்றோம்.

'தேசத்துக்கு மகுடம்' என்ற நிகழ்ச்சி திட்டத்தில் எமது கட்சியின் சார்பில் முன்வைக்கப்படும் ஆலோசனைகளில் இவ்வாறான சிங்கள பிரதேசங்களையும் உள்வாங்க உள்ளோம். 

பின்தங்கியுள்ள இவ்வாறான கிராமங்களில் வசிக்கும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு உணவுப் பொதிகளை வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்ட இவ்வாறான கிராமவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. தேர்தலை முன்னிலைப்படுத்தி மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவன்றி மக்கள் நலனோம்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே முஸ்லிம் பிரதேசங்களுக்கு சமாந்தரமாக சிங்கள பிரதேசங்களிலும் கடந்த சில மாதங்களாக நான் கவனம் செலுத்தி வருகின்றேன் என்றார்.

அமைச்சரையும், அவரது குழுவினரையும் வரவேற்பதற்காக செல்லுமிடமெல்லாம் முஸ்லிம் காங்கிரஸின் பச்சை, மஞ்சல் கலந்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் ஹக்கீமின் தெஹியத்தகண்டிய பிரதேச ஒன்று கூடல்களின் போது, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பொருளாளர் எஹியாகான், இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான், மக்கள் தொடர்பு அதிகாரி மஹியால் த சில்வா, கட்சி முக்கியஸ்தர் ரவூப் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

1 comment:

  1. MR. HAKEEM,
    WHAT HAPPEN ?? LAST TWELVE YEARS HAVE DONE MUSLIM YOUTH EMPLOYMENT WORK. NOW WILL BE START SINGHALESH AREA YOUTH EMPLOYMENT WORK CHEATING METHOD NO.2013. WHY?? YOU ARE SAYING LIE TELL TRUTH EVERYTHING CAN BE DONE.

    ReplyDelete

Powered by Blogger.