மொஹமட் முர்ஸியின் அதிரடி தீர்மானங்களுக்கு மக்கள் ஆதரவு - இராணுவம் மௌனம்
எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி நாட்டின் அதிகாரம் மிக்க இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சரான பீல்ட் மார்ஷர் ஹுஸைன் தன்தாவி உட்பட பல சிரேஷ்ட ஜெனரல்களுக்கு திடீர் ஓய்வு வழங்கியுள்ளார். அத்துடன் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் இடைக்கால அரசியல் அமைப்பையும் புதிய ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் எகிப்து அரச தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் மாலை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
எகிப்தில் நீடித்து வரும் ஜனாதிபதிக்கும் இராணுவத்திற்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் முக்கிய திருப்பு முனையாக இது அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார். எனினும் ஜனாதிபதியின் முடிவை இராணுவ கவுன்ஸில் தலைவர் ஹுஸைன் தன்தாவி ஏற்றாரா என்பது குறித்து அவர் தரப்பில் உடன் விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
ஆனால் ஹுஸைன் தன்தாவி மற்றும் ஏனைய இராணுவ கவுன்ஸில் உறுப்பினர்களிடம் ஆலோசித்த பின்னரே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளதாக இராணுவ கவுன்ஸில் உறுப்பினரான ஜெனரல் மொஹமட் அல் அஸார் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்வான முதல் ஜனாதிபதியான முன்னாள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த மொஹமட் முர்சி எவரும் எதிர்பார்க்காத தருணத்தில் திடீர் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
இதன்படி அவர் முதல் நடவடிக்கையாக இராணுவ கவுன்ஸில் கடந்த ஜூன் 17ம் திகதி அறிவித்த இடைக்கால அரசியல் அமைப்பின் பிற்சேர்க்கையை ரத்துச் செய்தார். இந்த பிற்சேர்க்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு, முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் மற்றும் புதிய அரசியல் அமைப்பை வரையும் அதிகாரம் ஆகியன இராணுவ கவுன்ஸிலுக்கு வழங்கப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதன் பின்னர் கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் 30 ம் திகதி இராணுவ கவுன்ஸிலால் அறிவிக்கப்பட்ட இடைக்கால அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதி இந்த முடிவை எடுத்தார். இந்த இடைக்கால அரசியல் அமைப்பின் 56 ஆவது சரத்தின் படி தேர்வாகும் புதிய ஜனாதிபதிக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சரத்தின் கீழ் புதிய ஜனாதிபதிக்கு நிறைவேற்று மற்றும் அரசியல் அமைப்பு அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. அதேபோன்று எகிப்தின் பொதுக் கொள்கை பிரகடனம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு கைச்சாத்திடும் அதிகாரமும் ஜனாதிபதி வசமாகிறது. இதுதவிர, ஜனாதிபதிக்கு புதிய அரசியல் அமைப்பு குழுவை அமைக்கும் அதிகாரமும் வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து எகிப்தின் அதிகாரம் மிக்க இராணுவ கவுன்ஸிலின் தலைவர் ஹுஸைன் தன்தாவிக்கு ஓய்வு வழங்கினார். 76 வயதான தன்தாவி ஹொஸ்னி முபாரக் அரசில் இரண்டு தசாப்தங்களாக பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார். மக்கள் எழுச்சியின் மூலம் முபாரக் பதவி விலகியதன் பின் கடந்த ஓர் ஆண்டாக நாட்டின் இடைக்கால ஆட்சியாளராகவும் தன்தாவி செயற்பட்டார்.
அவர் கடந்த ஜூன் 30 ஆம் திகதி ஆட்சிப் பொறுப்பை ஜனாதிபதியிடம் கையளித்தார். அதேபோன்று கூட்டுப்படைகளின் தலைவர் சமி அனானுக்கும் ஜனாதிபதி ஓய்வு வழங்கியுள்ளார். ஹொஸ்னி முபாரக்கிற்கு பின்னர் கடந்த ஓர் ஆண்டாக நீடித்த இடைக்கால அரசில் தன்தாவிக்கு அடுத்து சமி அனான் அதிக செல்வாக்கு மிக்கவராக செயற்பட்டவராவார்.
ஓய்வு வழங்கப்பட்ட தன்தாவி, அனான் இருவருக்கும் நாட்டின் உயரிய கெளரவமான தேசிய பதக்கம் அணிவிக்கப்படும் என்றும் இருவரும் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் பேச்சாளர் யாசிர் அலி குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து இராணுவ உளவுப் பிரிவு தலைவரான அப்தல் பதாஹ் அல் சிசி, தன்தாவிக்கு பதில் புதிய பாதுகாப்பு அமைச்சராகவும் இராணுவ தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அதேபோன்று லுதினன் ஜெனரல் சித்கி செயிட் அஹமட், அனானுக்கு பதில் கூட்டுப் படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது மட்டுமல்லாது கடற்படை தளபதி மொஹாப் மெமிஷ¤க்கு ஓய்வு வழங்கப்பட்டு, அவர் சுயெஸ் கால்வாய் நிர்வாக சபையின் தலைவராக நியமிக்கப்ப ட்டார். அத்துடன் விமானப்படை தளபதி ரெடா ஹபிஸ¤க்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு இராணுவ உற்பத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டு ள்ளது. இதில் இராணுவ கவுன்ஸிலின் ஆயுதங்களுக்கு பொறுப்பான உறுப்பினர் மொஹமட் அல் அஸாரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி முர்சி துணை ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றத்தின் பிரதித் தலைவர் மஹ்மூத் மக்கியை நியமித்துள்ளார். இதன் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் எகிப்தில் இரண்டாவது முறையாக துணை ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு மக்கள் எழுச்சி ஏற்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி தனது துணை ஜனாதிபதியாக ஒமர் சுலைமானை நியமித்தார்.
இந்த மாற்றங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதாக அறிவித்த ஜனாதிபதியின் பேச்சாளர், புதிய நியமனம் பெற்றோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.
ஏற்கனவே எகிப்தின் எல்லைப் பகுதியில் ஆயுததாரிகளின் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் உளவுப் பிரிவு தலைவரையும் ஜனாதிபதி பதவி நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி முர்சி கெய்ரோ பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாலை உரையாற்றினார். அதில் “எந்த தனிப்பட்ட நபரையோ, நிர்வாகத்தையோ இலக்கு வைத்து இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதன்மூலம் நான் எவருக்கும் பிரதிகூலமான தகவலை வழங்க முயற்சிக்கவில்லை. இந்த நாட்டினதும் மக்களினதும் நன்மைக்காகவே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன” என்றார்.
இதனிடையே ஜனாதிபதியின் இந்த அதிரடி முடிவுகளை ஆதரித்து கெய்ரோ நகரில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினர். இதில் ஜனாதிபதி முர்சிக்கு மக்கள் ஆதரவளிப்பதாக கோஷமெழுப்பினர்.
எனினும் ஜனாதிபதியின் இந்த முடிவுகள் குறித்து பல தரப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன. குறிப்பாக இவ்வாறு முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்து ஹுஸைன் தன்தாவியோ அல்லது இராணுவ தரப்போ இன்னும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. tn

முஹமட் முர்ஸிசியின் மூலம் எகிப்துக்கும், உலக முஸ்லிம்களுக்கும் நல்லதே நடக்க இறைவனைப் பிராத்திப்போம்.
ReplyDeleteதுருக்கியும், எகிப்தும் சர்வதேச முஸ்லிம் விவகாரங்களில் ஆக்கபூர்வமாக இணைந்து செயல்பட அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
மேற்படி நாடுகளில் நல்லாட்ச்சியும், இஸ்லாமும் தளைத்தோங்க அல்லாஹ் அருள் புரிவானாக.