Header Ads



இஹ்வான்களுக்கு அஞ்சியவருக்கு நாட்டின் உயர் விருது வழங்கிய மொஹமட் முர்ஸி


எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பாதுகாப்பு படைகளின் புதிய தளபதிகளை நியமித்துள்ளார். படைத் தளபதிகளுக்கு திடீர் ஓய்வு வழங்கிய நிலையிலேயே அவர் புதிய தளபதிகளை நியமித்துள்ளார்.

இந்நிலையில் மேஜர் ஜெனரல் அப்தல் மொனன் பயல்மி அல் அர்ராஸை விமானப் பாதுகாப்பு படையின் தளபதியாக நியமித்த ஜனாதிபதி முர்சி, வைஸ் மார்ஷல் யூனிஸ் அல் செயிட் ஹமத்தை விமானப்படை தளபதியாகவும், ரியர் அட்மிரர் ஓசாமா அஹமட் அல் தன்தியை கடற்படை தளபதியாகவும் நியமித்துள்ளார். அவரது பேச்சாளர் யாசிர் அலி அரச தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவல்லாமல் ஜனாதிபதி நேரடியாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜனாதிபதி கடந்த 60 ஆண்டுகளில் இராணுவத்திடம் இருந்த அதிகாரங்களை சிவில் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவரும் முயற்சியை தொடர்ந்து செயற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஓய்வு வழங்கப்பட்ட இராணுவ கவுன்ஸிலின் தலைவர் ஹுஸைன் தன்தாவி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சமி அனான் ஆகியோருக்கு ஜனாதிபதி நேற்று முன்தினம் நாட்டின் உயரிய விருதான தேசிய பதக்கத்தை வழங்கி கெளரவித்தார்.


No comments

Powered by Blogger.