Header Ads



ரஷ்யாவில் மிகப்பெரும் பள்ளிவாசல்

மு.உ.

ரஷ்யாவின் மிகப்பெரிய பள்ளிவாசல், அதன் தலைநகர் மொஸ்கோவில் அமைக்கப்படவுள்ளது. ஒரேதடவையில் 60,000பேர் தொழக்கூடிய வசதியுடன் மேற்படி பள்ளிவாசல் அமைக்கப்படவுள்ளது. மொஸ்கோ நகரில் வசிக்கும் 2 மில்லியன் முஸ்லிம்களின் சனத்தொகையை கருத்தில் கொண்டே இப்பள்ளிவாசல் அமைக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பள்ளிவாசலுடன், கலாச்சார  நிலையமொன்றும் கட்டப்படவுள்ளது. மோஸ்கோவின் மேயர் சேர்ஜி சோப்யான் உடன் பள்ளிவாசலின் கட்டுமாணப் பணிகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், கட்டிட நிர்மாணத்துறை மற்றும் நகரத் திட்டமிடலுக்கான மோஸ்கோ சங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மானப் பணிகள் கண்காணிக்கப்படவுள்ளது.
 
இப்பள்ளிவாசலானது பிந்திய சோவியத் நாடுகளில் மிகப்பெரிய பள்ளிவாசலாகவும், ரஷ்யாவின் மிகவிசாலமான பள்ளிவாசலாகவும் திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரஷ்யாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை அமைப்பதற்கான பொருத்தமான இடமானது நகரத்திட்டமிடல் அதிகாரிகளால் தேடப்பட்டு வருகின்றதுடன், இதற்குப் பொருத்தமான இடம் பற்றிய இறுதித் தீர்மானம் செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
 
இதேவேளை மொஸ்கோ நகரில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு சிறப்பான ஓர் இடத்தில் பள்ளிவாசல் அமைத்துக் கொடுப்பது மிகவும் அவசியமாகும் என ரஷ்யாவின் ஓர்த்தகோடஸ் கிறிஸ்தவத் திருச்சபை அதிகாரி ஆர்க்பிரிஸ்ட் வஸ்ட்வோல்ட் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் மிகமுக்கியமான விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான வணக்கசாளிகளுக்கு பாதைகளில் தொழுகையில் ஈடுபடுவதற்கு ரஷ்ய அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதுடன், இந்நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கு நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பள்ளிவாசல் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

1 comment:

Powered by Blogger.