Header Ads



முஸ்லிம்களின் கடமையும், ஜமியத்துல் உலமாவின் பொறுப்பும்...!




சுவைர் மீரான் (யாழ்ப்பாணம்)

மன்னாரில் மீளக் குடியேறச் சென்ற மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு அந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்த சகோதரர்கள், தாக்கப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இலங்கை முஸ்லிம்களுக்காக துணிவுடன் குரல் கொடுக்கும் ஒரு முக்கிய முஸ்லிம் அமைச்சரின் குரலை ஊமையாக்கவும், அவரின் செயல்பாடுகளை முடக்கவும் கடந்த சில மாதங்களாக புலி சார்பு சக்திகள் வெளிப்படையாகவே செயல்பட ஆரம்பித்துள்ளன.

முப்படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் வழிகாட்டுதலில் புலிப் பயங்கரவாதத்தினை தோற்கடித்த இத்திரு நாட்டில், யுத்தத்தில் தோற்கடிக்கப் பட்ட  புலிப் பயங்கரவாதிகளால்  ஆயுத முனையில்மேற்கொள்ளப் பட்ட தீர்மானத்தை (அ)நீதிபதி ஒருவர்  உறுதிப்படுத்திய வெட்கக்கேடான சம்பவம் நடைபெற்றுள்ளமை நாட்டின் இறைமை குறித்து அக்கறை உள்ள எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

வரிவரிச் சீருடை அணிந்த புலிப் பயங்கரவாதிகள், வன்னிக்காட்டின் பதுங்குகுழிக்குள் இருந்து வழங்கப்பட்ட எந்தக் கட்டளையை 23  வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றி முஸ்லிம்களை இனச் சுத்தீகரிப்பு செய்தார்களோ,அதையொத்த கட்டளையை அரச பதவி என்னும் பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொண்டிருக்கும் புலிகள் வழங்கி, அதனை காக்கி உடை தரித்த போலீசாரைக் கொண்டு நிறைவேற்ற முயன்ற சகுனித்தனத்தை கண்டு இந்நாட்டின் அமைதியை விரும்பும், பயங்கரவாதத்தை வெறுக்கும் மக்கள் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நாம் இந்த விடையங்களை தமிழில் மட்டுமே பேசிக் கொண்டு இருக்கின்றோம். மன்னாரில் புலிகள் செய்யும் அட்டூழியங்கள் குறித்த உண்மைகள் சிங்கள மொழியில், சிங்கள மொழிபேசும் மக்கள் மத்தியில் தெளிவு படுத்தப் பட வேண்டும். அரச எதிர்ப்பு என்ற போர்வைக்குள் மன்னார் முஸ்லிம்களின் அவலக் குரலும், நியோ புலிகளின் அட்டூழியங்கள் பற்றிய உண்மைகளும் அடங்கிவிட அனுமதிக்க முடியாது.

நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்த விடயத்தின் ஆழத்தை அறியாமல், அரசாங்கத்தை எதிர்க்கும் ஒரு விடையமாக மட்டுமே இதனைப் பார்க்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஊடகங்களில் அதிகமானவையும் அதைத்தான் விரும்புகின்றன. DailyMirror ஆங்கில செய்தி இணையத்தளத்தில், இவ்விடையத்தின் உண்மையத் தெளிவுபடுத்திப் பதியப்படும் பின்னூட்டங்கள் கூட பிரசுரிக்கப் படாத கொடுமை நிகழ்கின்றது. அரச எதிர்ப்பை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் DailyMirror போன்ற ஊடகங்கள், அரசுக்கு ஆதரவானவை அல்லது அரச எதிர்ப்புணர்வை பாதிக்கக் கூடியன என அவை கருதும் எந்த பின்னூட்டங்களையும் அனுமதிப்பதில்லை என்பது ரகசியமல்ல. அதிலும் முஸ்லிம்கள் தொடர்பான விடையமாக இருப்பதால், உண்மையை தெளிவு படுத்த வேண்டும் என்ற தேவை அவற்றிற்கு இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இவ்விடையத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, புலி சார்பு சக்திகளின் சதி குறித்து தெளிவு படுத்த வேண்டிய தேவை உள்ளது.
மும்மொழி வல்லுனர்களான முஸ்லிம்கள் ஆர்வலர்கள் இவ்விடையத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கழுத்துக்கு மேல் வெள்ளம் உயர்ந்த பின்னர் கவலைப் பட்டுப் பயனில்லை. வெள்ளம் வருமுன்னே அணைதான் கட்டவில்லை, முற்றாக மூழ்கி அழிந்துவிடாமலிருக்க இதையாவது செய்வோமாக.  
 
அதே போல வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் நமது அமைதியான எதிர்ப்பை நாடுமுழுவதும் வெளிப்படுத்தி உச்ச பயன் பெற வேண்டிய தேவை உள்ளது. உலமாசபை  இவ்விடையத்தில் பங்குதாரர்களாக்கப் பட வேண்டும். சமூகத்தைக் காக்க வேண்டிய பாரிய பொறுப்பு அனைவருக்கும் உரியது.
இதுவரை முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா தனது பணியை  ''முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா விடுக்கும் வேண்டுகோள்'' என்ற தலைப்பிடப்பட்ட வேண்டுகோளின் மூலம் ஓரளவு சிறப்பாக செய்துள்ளது.

விடையத்தை அதிகார பூர்வமாக பள்ளிவாசல்களுக்கு எடுத்துச் செல்லும் கடமை ஜமியத்துல் உலமாவுடையது. காலம் தாமதிக்காமல், அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் வெள்ளிக்கிழமை ஈடுபமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்து அதனை நெறிப்படுத்த வேண்டய தேவை ஜமியத்துல் உலமாவிற்கு உள்ளது. ஜமியத்துல் உலமா இதனை தட்டிக் கழிக்க முடியாது. எதிர்ப்பு தெளிவாக, நாடளாவிய ரீதியில் வெளிப்படுத்தப் பட வேண்டும். தஹஜ்ஜத்தில் துவா மட்டும் கேட்போம், பள்ளிக்குள் துவா பிரார்த்தனை செய்வோம் என்று ஜமியத்துல் உலமா பெட்டிப் பாம்பாக அடங்குமேயாக இருந்தால், மக்கள் மாற்று உலமா குறித்து சிந்திக்க நிர்ப்பந்திக்கப் படுவார்கள் என்பதனை ரிஸ்வி முப்தி தலைமயிலான ஜமியத்துல் உலமா கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாற்று உலமா சபை என்ற சிந்தனையை மக்கள் மனதில் விதைத்த பிரிவினைப் பாவத்தை ஜமியத்துல் உலமாவின் தலைவர்கள் சுமக்காமல் இருக்க, இவ்விடையத்தில் விரைந்து செயல் பட வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் யாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து அவர்களுக்கு முழுமையான தெளிவு ஜும்மாவின் இறுதியில் வழங்கப் பட வேண்டும். (ஜும்மா முடிவடைந்த பின்னர் அல்ல)

நீதி மற்றும் அரச துறைகளில் ஊடுருவியுள்ள புலிகளின் எடுபிடிகளுக்கு எதிராகவும், பாதிக்கப் பட்ட, தொடர்ந்தும் பாதிக்கப் பட்டு வரும் நமது சகோதரர்களுக்கு ஆதரவாகவுமே இந்த ஆர்ப்பாட்டம் என்ற தெளிவு வழங்கப்பட வேண்டும்.

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்று யாருமே தவறாக விளங்கி விடாதபடிக்கு தெளிவு வழங்கப்பட வேண்டும். கொடும்பாவிகள் எரிக்கப் படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதா என்ற கேள்விக்கு அப்பால், எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் சகோதரர்கள், பொதுப் போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையிலும், அரச, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காத வகையிலும், பொலிசாருடன் முரண்பட்டுக் கொல்லாத வகையிலும் அறிவுறுத்தப் படவும், வழிநடாத்தப்படவும் வேண்டியுள்ளது. பள்ளி நிர்வாகங்கள், கல்விமான்களின்
பங்களிப்பு இது விடையத்தில் கட்டாயம் தேவைப்படும். இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள், மன்னார் (அ)நீதிபதியின் அக்கிரமமான, ரவ்டித்தனமான செயல்பாட்டைக் கண்டிப்பதுடன், அப்பாவிப் பொதுமக்களை சுட்டுத்தள்ளும் படி பொலிசாருக்கு கட்டளையிட்டதட்காக குறித்த அநீதிபதியை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் படியும் வலியுறுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகளைச் சேகரிக்க வரும் மாற்றுமொழி ஊடகவியலாளர்களுக்கு, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன்ன என்பது தெளிவாகப் புரிய வைக்கப்பட வேண்டும். ஜம்மா முடிந்ததும், இறைச்சிக் கஞ்சி, பாலுதா, சமூசாக் கனவுகளுடன் கலைந்து செல்லாமல், நமது சகோதரர்களுக்காக இதையாவது செய்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்வோம்.

4 comments:

  1. ஏதாவது ஒரு விடயத்தை கூறும் போது அந்த விடயம் மக்களை கவரும் வகையிலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கூறுவது நல்லது என்று நான் இங்கு எனது கருத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நீங்கள் இங்கு கூறுகின்ற விதமானது நோன்பாளியாக இருக்கும் மக்களை வெறுப்பேற்ற செய்கிறது.

    ReplyDelete
  2. கட்டுரை முக்கியமாக இரண்டு விடையங்களைச் சொல்கின்றது.

    மன்னார் சம்பவத்தில் புலி சார் சக்திகளின் செயல்பாடு குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்களுக்கு தெளிவு வழங்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மை தெளிவுபடுத்தப் பட வேண்டும். விஜயதாச ராஜபக்ஷ தனக்கு மகிந்த அரசுடன் இருக்கும் தனிப்பட்ட பகைக்காக, ரிஷாத் பதியுதீனை பழிவாங்க துடிக்கின்றார். இதற்காக நாட்டின் சட்டத்தரணிகளும், ஊடகத்துறையினரும் தவறாக வழிநடத்தப் படுகின்றனர். உண்மையான நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் தேசிய ஊடகங்களில் இடம்பெறாமை மாபெரும் குறையாகும். இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.


    டெய்லி Mirror பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்பது உண்மையே. மன்னார் அநீதிபதி அப்பாவி மக்களை சுட உத்தரவிடும் விடியோ குறித்து பதியப்பட்ட குறிப்புக்கள், விடியோ பற்றிய விபரங்கள், youtube link என அதுவுமே அனுமதிக்கப் படவில்லை.

    அடுத்து ஜமியத்துல் உலமா இவ்விடையத்தில் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைக்க முன்வர வேண்டும். பொறுப்பைத் தட்டிக் கழித்து பெட்டப் பாம்பாக இருக்க முயலக்
    கூடாது.

    ReplyDelete
  3. சகோதரர் Mohamedfasmin அவர்களே, நானும் நோன்பாளியாகத்தான் இருக்கின்றேன், எனினும் கட்டுரை என்னை வெறுப்பேற்றவில்லையே!


    ஒரு வேளை நான் சமூசா, பலூடா, இறைச்சிக் கஞ்சிக் கனவுகளுடன் இல்லாமல் இருப்பதால் அப்படியோ தெரியவில்லை.

    ReplyDelete
  4. சகோதரர் Mohamed Fasmin அவர்களே!
    இங்கே நமது முஸ்லிம் சமூகம் பற்றிய ஒரு முக்கியமான பிரச்சினைபற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கான சரியான தீர்வை எவ்வாறு எட்டலாம் என்கிற சிந்தனையையும் பொறுப்புணர்ச்சியையும் விடுத்து இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்ற ஒரு சின்ன வார்த்தையைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறீர்களே. ஒரு முஸ்லிம் என்றவகையில் உங்களுக்கும் சில கடமைகளும் பொறுப்புக்களும் உண்டென்பதை மனதிற்கொள்க. (தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்ற பழமொழியை ஞாபகத்திற்கொள்க.

    ReplyDelete

Powered by Blogger.