தெதுருஓயகம சம்பவம் உணர்த்துவது என்ன..?
(இன்று வியாழக்கிழமை 26-07-2012 வெளியாகியுள்ள விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)
குருநாகல் தெதுருஓயகம கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபடுவதற்கு பௌத்த பிக்குகள் இடையூறு விளைவித்த சம்பவம் முஸ்லிம் மக்களை அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு பள்ளிவாசல் வளாகத்திற்குள் பிரவேசித்த அப்பிரதேச விகாராதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு வெள்ளைப் புடைவைகளை விரித்து அமர்ந்திருந்து பிரித் ஓதியுள்ளதுடன் தொழுகை நடத்தக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
புனித ரமழான் மாதத்தில் இடம்பெற்ற இச் சம்பவமானது குருநாகல் மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஏனைய பிரதேச முஸ்லிம்களுக்கும் பல்வேறு செய்திகளைச் சொல்வதாகவே அமைந்துள்ளது.
ரமழான் மாதத்தில் நாட்டின் எந்தவொரு பகுதியிலும் முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமைகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும் எனவும் அதற்குத் தேவையான முழுமையான பாதுகாப்பினை பொலிசார் வழங்குவர் எனவும் பாதுகாப்பு செயலாளர் கடந்த வாரம் உறுதியளித்திருந்தார். முஸ்லிம் கவுன்சில் மற்றும் உலமா சபை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.
துரதிஷ்டவசமாக அவரது உத்தரவாதத்தின் ஈரம் காயும் முன்பதாகவே தற்போது குருநாகலில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபடுவதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டுள்ள பௌத்த பிக்குகள் பள்ளிவாசல் வளாகத்தில் அமர்ந்து பிரித் ஓதியிருக்கிறார்கள். எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்கள்.
தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கி இன்று தெதுருஓயகம பள்ளிவாசல் வரை நடந்து கொண்டிருப்பது என்ன என்பது பற்றி நாம் எல்லோரும் நன்கு விளங்கி வைத்திருக்கிறோம். இந்த சம்பவங்கள் நிகழ்ந்தபோதெல்லாம் கலகம் விளைவிக்க முற்பட்டவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை நோக்கியே சுட்டுவிரல்கள் நீட்டப்பட்டன என்பதே இந்த இடத்தில் குறிப்பிட்டுக்காட்டபபட வேண்டிய உண்மையாகும்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிக்கு மிகப் பகிரங்கமாகவே அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார். ஏனைய பகுதிகளிலும் பௌத்த பிக்குகள் அவ்வாறே நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக பள்ளிவாசல் பதியப்பட்டிருக்கிறதா? அது சட்டவிரோதக்கட்டிடமா? என்றுதான் பொலிசாரும் அதிகாரிகளும் முஸ்லிம்களிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நாட்டில் அமுலில் உள்ள சட்டம் ஒழுங்கு என்பது அனைவருக்கும் பொதுவானது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. ஆனால் இன்று சில விசேட உடை தரித்தவர்களுக்காக சட்டமும் ஒழுங்கும் நெளிந்து கொடுப்பது இந்த நாட்டின் சிறந்ததோர் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட மேற்படி தருணங்களிலெல்லாம் முஸ்லிம்களை அமைதியாக இருக்குமாறும் தாம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அறிக்கை அரசியல் நடத்தி வரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்குப் பொறுப்புச் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.
அதிகார வர்க்கத்திற்குத் தலைவணங்கும் இந்த அரசியல் தலைமைகள் தமது மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கும்போது பூசி மெழுகி தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கின்றார்கள்.
மக்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி அதிகார வர்க்கத்திடம் பேரம் பேச வேண்டிய இவர்கள் அதற்கான சந்தர்ப்பங்களையெல்லாம் நழுவவிட்டுக் கொண்டே வருகிறார்கள்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தாம் வெற்றி பெற வேண்டுமானால் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு தேவை என்பதை அரசாங்கம் நன்கு விளங்கியிருந்தது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
ஆனால் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் தமது வாக்குப் பலத்தைப் பிரயோகித்து தமது சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முயற்சிக்கவில்லை.
மாறாக தாம் அரசாங்கத்துடன் எந்தவித உடன்படிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று வெட்கமின்றி அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
புனித ரமழான் மாதத்தில் கூட இந்த நாட்டில் முஸ்லிம்கள் நிம்மதியாக அச்சமின்றி தொழுகையில் ஈடுபட முடியாத நிலை தோற்றம் பெற்று வருகின்ற நிலையில் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் சதி நடவடிக்கைகள்\" என்று அராஜகத்துக்கு ஒத்து ஊதுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் நம்மத்தியில் இருக்கும் வரை நமக்கு ஏது நிம்மதி?Delete ReplyReply ForwardNot SpamMovePrint Actions NextPrevious
vidivelly pththirikaikku nandry.
ReplyDelete