Header Ads



கிழக்கில் வன்முறை வெடித்துவிடும் ஆபத்து - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை


TM

எம்.சி.அன்சார்

முஸ்லிம் காங்கிரஸ் என்பது அரசாங்கத்திற்குள்ளே இருக்கின்ற, முஸ்லிம் மக்களின் மனச்சாட்சி. எங்களுடைய மனச்சாட்சிக்கு ஒத்தவகையில் தான் தீர்மானங்களை எடுக்க முடியும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம்களுடைய தனித்துவமான இயக்கம் என்ற அடிப்படையில் எங்களுடைய தனித்துவத்தை எந்த அடிப்படையிலும் அடகு வைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராகமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

 கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் தனது கட்சியின் வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

 "முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு எங்களின் தனித்துவத்தினை பேணுகின்ற சிறப்பான முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவின் பின்னணியில் தேர்தல் மூலமாக மக்களின் ஆணையை பெற்றவர்களாக ஒரு பலமான நிலையில் கிழக்கில் சிறுபான்மை இனங்களை கௌரவமாக நடத்துகின்ற ஆட்சியை உருவாக்கின்ற முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியுள்ளது.

எங்களுடைய இந்த முடிவினை மக்கள் எல்லோரும் பூரணமாக அங்கீகரித்துள்ளனர். இந்த தேர்தல் மூலமாக  மக்கள் ஆணையை வழங்குவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவோடு நேற்று இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையின் பிறகு சுமுகமாக நாங்கள் தனித்துக் கேட்பதனை அவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்கின்ற பெரும்பான்மை கிடைக்காது என்பது யதார்த்தபூர்வமான அரசியல் அவதானிகளின் கருத்தாகும். அதனை அடிப்படையாக வைத்துதான் வன்முறைகள் வெடித்து விடும் என்ற ஆபத்து இருக்கின்றது. அதனை தவிர்க்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

தேர்தலுக்கு பிறகு கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தினை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸின் ஆசனங்கள் திகழும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே கிழக்கிலேயே மூவின மக்களின் இன ஐக்கியதோடு ஒருமித்து ஆட்சியமைக்கின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழும் என்பது திண்ணம்" என்றார்.
 

2 comments:

  1. this is rou haqqim own decisions.

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லுவீங்க. தீர்மானிக்கும் சக்தி.......தீர்மானிக்கும் சக்தி......என்று. தேர்தலின் பின் முஸ்லீம் காங்கிரஸ் அல்ல தீர்மானிக்கும் சக்தி.பணம் தான் தீர்மானிக்கும் சக்தியாக மாறும். இந்த வீர வசனமெல்லாம் கேட்டு புளித்துப்போச்சுங்க.
    லயலொக்க மாற்றுங்க சேர். கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.