Header Ads



சிரியாவின் கொடுர அரசாங்கத்தை பாதுகாக்கும் சீனாவும், ரஷ்யாவும்

சிரியா தொடர்பான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியுள்ளன. ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைகளை சிரியா நிறுத்தாவிடின் அந்த நாட்டு அதிகாரிகள் மீது தடைகளை விதிப்பது தொடர்பாக இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான தீர்மானங்களை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மூன்றாவது முறையாக தடுத்து நிறுத்தியுள்ளன.

இந்த தீர்மானத்தை தடைசெய்யும் வகையில் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் விட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியமை குறித்து மேற்குலக நாடுகள் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இந்த நகர்வு ஆபத்தானதும் வருந்தத்தக்கதும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சூசன் ரைஸ் கூறியுள்ளார். கொடுரமான அரசாங்கத்தை பாதுகாக்கும் செயற்பாடாக இது அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கு பலமானதும் ஒற்றுமையானதுமான குரலை  சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா பாதுகாப்பு பேரவை ஆகியன ஒன்றிணைந்து கொடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.