சவூதி அரேபியாவில் ரமளான் ஏற்பாடுகள் - ஆகஸ்ட் 3 இல் இலங்கை தூதரக இப்தார்
எம்.எஸ்.ஷாஜஹான்
சவூதி அரேபியாவிலும் ஏனைய அறபுலகத்திலும் புனித ரமழான் தலைப்பிறையானது கடந்த 19ம் திகதி வியாழன் இரவு கண்டு, வெள்ளியன்று முதல் நோன்பு நோற்கப்பட்டது. அன்று வெள்ளிக்கிழமை நடந்த புனித ரமழானின் முதல் ஜூம்ஆ தொழுகையின்போது மக்காவிலும் மதீனாவிலுமாக சுமார் 25 லட்சம் முஸ்லிம்கள் தங்களது தொழுகையை மஸ்ஜிதுல் ஹரம் பெரிய பள்ளிவாயலிலும் மதீனாவின் மஸ்ஜிதுல் நபவிபள்ளியிலும் நிறைவேற்றினர்.
இதில் பெருந்தொகையான முஸ்லிம்கள் மக்காவில் தங்கள் தொழுகையை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் சவூதியின் பல பகுதிகளில் இருந்தும் மற்றைய அறபு நாடுகள், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும், ரமழான் உம்ருவை நிறைவேற்ற வந்தவர்கள்.
இவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக சுமார் 28,000 பாதுகாப்புஊழியர்கள் மக்கா மஸ்ஜிதுல் ஹரம் பள்ளியைச் சுற்றியும் அதன் உட்பகுதியிலும், பக்கத்து தெருக்களிலும் தங்கள் கடமையை செவ்வனே செய்தனர். சிவில் பாதுகாப்பு இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜமீல் அர்பயின் கூறும் போது, தவாப் செய்கையில் சில முதியவர்கள் மயக்கமுற்றதாகவும் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு அவர்கள் நலமானதாகவும் தெரிவித்தார்.
மேலும் சவூதி போக்குவரத்து நிறுவனம் லட்சக்கணக்கான உம்றா பயணிகளை வெளிப் பகுதியில் இருந்து பெரிய பள்ளிவாயலுக்கு கொண்டுவர தொடர் ஷிசிஸிஹிஹிழிரி சேவையை ஆரம்பித்துள்ளது. மக்காவின் தெரு போக்குவரத்து இலாகாவின் இயக்குனரான முகம்மது மதனி கூறும் போது, 950 பஸ்கள் இந்த சேவையில் ஈடுபடும் என்றும் இவைகள் மத்திய ஹரம் பகுதியில் உள்ள எட்டு பஸ்தரிப்பிடங்களில் இருந்து பெரிய பள்ளிவாயலுக்கு தொடர் சேவை வழங்கும் என்றும் கூறினார். இது மக்காநகரின் மற்றைய பகுதிகளுக்கும் செல்லும் இச்சேவை மக்களின் பிரயாண சிரமத்தை பெருமளவு குறைக்கும் என்பது அவர் எண்ணம்.
சாத் அல்குரேஷி, மக்கா வர்த்தக சங்கத்தின் போக்குவரத்து துறையின் தலைவரான இவர் பஸ்கள் தினசரி 9500 சேவைகளில் ஈடுபடும் என்றும் நோன்பு முடியும் வரையிலு மான நாட்களுக்குள் அது 282,000 சேவைகளை நிறைவு செய்யும் என்றும் கூறினார்.
பயணிகள் தங்களின் தங்குமிடங்கள், ஹோட்டல்கள் முக்கிய பஸ்தரிப்பு நிலையங்களில் இருந்து. ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முறை என்று ஏறி இறங்கினாலும் சுமார் 50 லட்சம் பயணிகள் இந்த சேவையை பாவிப்பர் என்றார். குரேஷி அதோடு பெரிய தனியார் போக்குவரத்து நிறுவனங்களும் மக்கள் வசதிக்காக இது போன்ற சேவையில் ஈடுபடும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஹரத்தின் எட்டு பகுதியில் இருந்தும் பயணிகள் இச்சேவையை பாவிக்கமுடியும் என்பதால், அவர்கள் தனிப்பட்ட தங்கள் சொந்த போக்குவரத்து வசதிகளைக் குறைத்து அல்லது தவிர்த்து இந்த ஷிதிஜிஹிவிலி சேவையை உபயோகித்தால் நகரத்தில் பெருமளவு போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பிரிகேடியர் ஜெனரல் மிஷல் அல் மக்ரபி, மக்காவின் வீதிப் போக்குவரத்து இயக்குனர் கூறுகையில் சில விசேஷமான வீதிப் போக்குவரத்து முறைகளை அமுல்படுத்துவதாகவும் அதன்படி ஐந்து குறிப்பிட்ட முறையின் கீழ் பயணிகளை தங்கள் ஹோட்டல்களில் இருந்து ஹரத்திற்கு கொண்டு வரவும் திரும்பி செல்லவுமான ஏற்பாட்டை செய்துள்ளதாகவும் அறிவித்தார்.
அப்துல்லா அல் சவாட், மக்காவின் சுற்றுப் பயணத்துறையின் நிறைவேற்று அதிகாரியான இவர் ஹோட்டல்கள், கார்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு தங்கள் வாகனங்களை ஹோட்டலிலேயே நிறுத்தி வைக்கும் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவைகள் வீதியில் நிறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது நிற்க சவூதிதொழில் அமைச்சும், சிவில் சேவை அமைச்சும் விடுத்துள்ள அறிக்கையில் அரசு,தனியார் துறை ஊழியர்களுக்கான வேலைநேரத்தை அறிவித்துள்ளனர். அதன் படி புனித ரமழானில் அரசு நிறுவனங்கள் தீர்மானம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. வாராந்தர முறைப்படி வேலை செய்வதாயின் வாரம் 36 மணித்தியாலங்கள் அவர்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த பணிப்புரை கூறுகிறது.
சவூதியின் தொழிலாளர் சட்டத்தில் முஸ்லிம் பணியாளர்கள் நோன்பு மாதத்தில் தினசரி எட்டு மணி என்பதற்கு பதிலாக ஆறுமணித்தியாலம் வேலை செய்யலாம் என்ற சலுகை உண்டு. அதோடு திறந்த வெளியில் வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள் கோடை காலத்தில் உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்பதால் நண்பகலில் வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைநகர் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் அடுத்த வெள்ளிக்கிழமை ஓகஸ்ட் 3ம் திகதி இலங்கையர்க்கான ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருடந்தோறும் நடைபெறும் இவ் வைபவம் ரியாத்தில் வாழும் இலங்கையர்களை இணைக்கும் இனிய நிகழ்வாகும் தூதுவரகத்தோடு தனியார்களும் கொடையாளர்களும் சேர்த்து பொறுப்பு எடுத்து இதனை நடத்துகிறார்கள். தூதுவர் அஹ்மத் ஏ ஜவாத் அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகக் கவனிக்கிறார்.
சவூதி வாழ் இலங்கை சமூகத்தினர் அனைவருக்கும் அழைப்பு உண்டு. பலரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 1000 விருந்தாளிகளை வரவேற்க ஏற்பாடுகள் நடக்கின்றன. நிகழ்ச்சி நிரலில் நோன்பின் மாண்பைப் பற்றி தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் சொற்பொழிவு நடைபெறும்.
அதனை அடுத்து நடைபெறும் இப்தார் இரவு சாப்பாட்டில் இலங்கை சிற்றுண்டிகளான சமூசா, ரோல்ஸ், குளிர்பானம் ஆகிய வற்றோடு சிறப்பு அம்சமாக நோன்பு கஞ்சியும் வழங்கப்படும் இந்நிகழ்வு இலங்கை தூதவராலயத்திலேயே நடைபெறும்.
ஜித்தாவில் இப்தார் நிகழ்ச்சியானது சென்ற வெள்ளி ஜூலை 27ம் திகதி நடைபெற்றது டொக்டர் எச்.எம்.றபீக் அவர்கள் இதற்குரிய ஏற்பாடுகளை செய்தார். மதீனா வாழ் இலங்கையரின் இப்தார் நிகழ்ச்சிக்கு இன்னும் திகதி குறிப்பிடவில்லை என பசால் அஹமத் கூறினார். இவர் இலங்கை சமூகத்தினர் அமைப்பின் செயலாளர் ஆவார். மொத்தத்தில் சவூதியில் ரமழான் களைகட்டுகிறது.
தினகரன் வாரமஞ்சரி

Post a Comment