Header Ads



இனியும் இவற்றை தொடர அனுமதிப்பதா..?



(இன்று 1-05-2012 நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கத்தை இங்கு மீளப்பதிவிடுகிறோம்)

கடந்த ஏப்ரல் மாதம் 20ம் திகதி தம்புள்ளை கைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியையடுத்து குருநாகல் தெஹிவளை ஆகிய இடங்களிலும் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கான முயற்சிகளை கடும்போக்கு சிங்கள சக்திகள் மேற்கொண்டு வரும் செயற்பாடு குறித்து முழு முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி நாட்டில் சமாதானத்தை, சகவாழ்வை விரும்ம் சிங்களச் சகோதரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து அரசாங்கம் அக்கறையில்லாதிருக்கின்றதா? மௌனம் சாதிக்கின்றதா? என்ற பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கடைசியாக தெஹிவளையில் கடந்த 15 வருட காலமாக இயங்கி வரும் மத்ரஸாவுடனான பள்ளிவாசலை அகற்றுமாறு கடும்போக்கு சிங்களவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு பள்ளிவாசலுக்கு கற்களையும் எறிந்துள்ளனர்.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே தெஹிவளைப் பள்ளிவாசல் பிரச்சினை களத்திலிருந்தது. இது தொடர்பான பிரச்சினை பெரிதாவதற்கு முன் பொறுப்பானவர்கள், ஆட்சியிலுள்ளோர் உடனடியாக செயற்பட்டிருந்தால் கல்லடித்து நாட்டில் மற்றொரு பள்ளிவாசல் தாக்கப்பட்டது என்ற செய்தி வெளிவராது தடுத்திருக்கலாம். துரதிஷ்டம் அவ்வாறு சிந்தித்துச் செயற்படாமையாகும்.

இலங்கை சர்வதேச ரீதியாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள வேளை பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டு அதனை அகற்றுமாறு ஊர்வலம் செல்வது போன்ற நிகழ்வுகள் இந்த நாட்டை சிக்கலுக்குள் மாட்டக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே கதவைத் திறந்து கொடுப்பது போன்றதாக இருக்கும்.

தர்மத்தைப் பேணும் பள்ளிவாசல் ஒன்றுக்குக் கூட இந்த நாடு அங்கீகாரம் அளிக்க மறுக்கின்றது என்று பிரச்சாரம் செய்ய முற்படுவதற்கு இவ்வாறான சம்பவங்கள் தொடர இடமளிப்பதால் பிரச்சாரம் செய்வதற்கு நாமே வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

தெஹிவளை பள்ளிவாசல் சம்பவம் நடந்த தனையடுத்து பள்ளிவாசலுக்கருகில் அமைந்துள்ள பொலன்னறுவை கல் விஹாரையின் அதிபதி கலாநிதி எச். தர்மாசோக தேரரை கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான குழு ஒன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது வழிபாட்டுத் தளங்கள் தொடர்பாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும் போது தீர்த்து வைப்பதற்கு பல்வேறு சமய பிரதிநிதிகள் மற்றும் அரச பிரதிநிதிகளை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்று இருப்பது அவசியம் என
வலியுறுத்தியுள்ளார்.

தெஹிவளை விஹாராதிபதியின் இந்த யோசனை வரவேற்புக்குரியது. அவ்வாறான பொறிமுறை ஒன்றிருந்தால் தடி எடுத்தவர்களுக்கெல்லாம் வேட்டையாட வாய்ப்புக் கிடைப்பதில்லை. தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை சம்பவங்களின் பின்னணியில் அரசுக்கும் முஸ்லிம் உலகுக்குமிடையே வளர்ந்து வரும் உறவைச் சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் ஒரு சதியாக இருக்கலாம் என முஸ்லிம அரசியல் தலைவர்களான ஏ.எச்.எம். பௌசி, அலவி மௌலானா, றிஷhத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், ஏ.எச்.எம். அஸ்வர் போன்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களை நோக்கும்போது அவ்வாறான ஒரு சதி இருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகின்றது. சியோனிச சக்திகளது கரங்கள் என்றுமில்லாதளவுக்கு இந்த நாட்டில் பலம் பெற்றுள்ள நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் இல்லை என்று நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சதியை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சதி பற்றிக் குறிப்பிடும் முஸ்லிம் தலைவர்கள் அரசினை வற்புறுத்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்யாதிருக்கிறார்கள். சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அரசை வலியுறுத்த வேண்டும்.

இந்த விடயங்களில் சட்டமும் நீதியும் நிலைநாட்டப்படாது மென்மைப் போக்கினை கடைப்பிடித்தால் இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற இடமுண்டு. இது குறித்து அரசு விழிப்பாக இருக்க வேண்டும்.

உருவாகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை ஒத்திப்போடாது உடன் தீர்வு காண முற்பட வேண்டும். கடந்த ஒரு மாத காலத்துக்குள் நடந்த மூன்று சம்பவங்களால் இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் அதிர்ச்சியடைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் தனித் தனியாக சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஒன்றுபட்டு இந்தப் பிரச்சினைகளை எதிர் நோக்காதது குறித்து கவலை கொண்டுள்ளது. சமூகத்தின் இருப்போடு தொடர்பான விசயமாக இருப்பதனால் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டுச் செயற்படுவது அவசியமாகும். பிரச்சினைகளை சிவில் தலைமைத்துவத் திற்கு விட்டு விட்டு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒதுங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உட்பட்ட சிவில் தலைமைத்துவத்தின் பணி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களால் ஓர் எல்லைக்குத்தான் செல்ல முடியும். இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் ஒன்றுபட்டு இவ்வாறான சம்பவங்கள் தொடராதிருப்பதற்கு ஆக்கபூர்வமான சில செயற்பாடுகளை அரசு மூலம் செய்வதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

அவ்வாறு தவறும் பட்சத்தில் தம்புள்ளை, குருநாகல், தெஹிவளை எனத் தொடரும் சம்பவங்களது பட்டியல் மேலும் நீடிக்க இடமுண்டு.

2 comments:

  1. ASSALAAMU ALAIKKUM
    MINISTER MAARHALE M.P.MAARHALE
    PALLI VAASAL SAMPAWANGAL
    THODARAAMAL IRUKKA AAWANA SEIYUNGAL

    ReplyDelete
  2. Aethaavathu Oru kulappa nilaiyei naaddil vaitthukkollave arasu virumpukiradu srupanmai makkalukku ethiraaha kreesmanithan,putter silai vaippadu,mervinsilvavin kovilil kulappam,pallivasal udaippu enru thodarkirradau pavam namadu m.p.kalum kalaitthuviddarkal ivatrai vaittu kalatthai kalitthu viduvaarkal.

    ReplyDelete

Powered by Blogger.