பிள்ளை குட்டி என்றால்..!
ஆடுகள் என்றாலே உரோமத்துக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்பட வேண்டியவை என்று நினைக்கும் ஐரோப்பியர்களே நெகிழ்ந்து போகும் ஆராய்ச்சி முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. லண்டன் பல்கலைக் கழகத்தாரின் நெடிய ஆராய்ச்சி தெரிவிக்கும் உண்மைகள் நம்மில் பலரின் கண்ணையும் திறக்க உதவக்கூடும்.
ஆடுகள் தங்களுடைய குட்டிகளைப் பிரிந்தாலும் அவற்றின் குரலை மறப்பதில்லை. ஓராண்டுக்குப் பிறகு கூட குட்டியின் குரல் கேட்டால், அது எங்கே இருக்கிறது என்று நாலா திசைகளிலும் உற்றுப் பார்த்து தேடுகிறது தாய் ஆடு.
நாட்டிங்காம்ஷைர் என்ற இடத்தில் ஆட்டுப் பண்ணையில் சில குட்டிகளின் குரல்களை ஓலி நாடாவில் பதிவு செய்தார்கள். சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு, அந்தக் குட்டிகள் தாய் ஆடுகளைப் பிரிந்தநிலையில் அந்தப் பண்ணைக்குச் சென்று ஒலிபரப்பினார்கள். அப்போது தாய் ஆடுகள் தத்தமது குட்டியின் குரலைக் கேட்டவுடன் தலையை உயர்த்தி, அது எங்கே என்று நாலா பக்கங்களிலும் பார்த்ததையும் தேடியதையும் பதிலுக்குக் குரல் கொடுத்ததையும் கண்டு நெகிழ்ந்தார்கள். குட்டி எதிரில் இல்லை என்றதும் எல்லா தாய் ஆடுகளுமே சோகத்திலும் ஏமாற்றத்திலும் ஆழ்ந்தன.
தாய் ஆடுகள் தங்களுடைய குட்டிகளை அவற்றின் குரல்கள் மூலமும் உடலில் உள்ள சில குறிகள் மூலமும் வாசனை மூலமும் அடையாளம் காண்கின்றன.
மந்தையாக வாழும் இயல்புடைய ஆடுகள் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இரைதேடும் இயல்பின. தாய் ஆடுகள் தன்னுடைய பிள்ளை ஆடுகளின் குரல்களை அறிந்திருப்பதால் இரவில் அவை ""சேர வந்தால்'' தவிர்த்துவிடுகின்றன.
குட்டிகள் பிறந்தவுடனே அவற்றுக்குப் பால் அளிக்கும்போதும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கு உதவியாக இருக்கும்போதும் குட்டிகளின் குரல்களையும் அடையாளங்களையும் தாய் ஆடுகள் கவனித்து நினைவில் கொள்கின்றன.
தாய் ஆடுகள் மட்டும் அல்ல அதன் குட்டிகளும் அருகில் தன்னுடைய தாய், தகப்பன், சகோதரன், சகோதரி உறவுள்ள ஆடுகளின் குரல்களைக் கேட்டதும் அடையாளம் கண்டு பதிலுக்கு உற்சாகக் குரல் எழுப்புகின்றன.
தாமரின் என்ற வகைக் குரங்குகள் தன்னுடைய குட்டிகளைப் பிரிந்த 4 ஆண்டுகளுக்குப் பிறகுகூட நினைவில் வைத்திருந்து அடையாளம் காண்கின்றன.
சீல் என்று அழைக்கப்படும் கடல்வாழ் பிராணி, யானைகள், அணில்கள் போன்றவையும் தங்களுடைய உறவினர்களைப் பிரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகும் குரலை வைத்து அடையாளம் காணும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குணம் இந்தப் பிராணிகளுக்கு மட்டுமல்லாது ஏனைய பலவற்றுக்கும்கூட பொதுவானதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment