Header Ads



இலங்கையின் சாபக்கேடு..!


இலங்கை பெண்களும் சிறார்களும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொடர்ந்தும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படும் நிலைமை காணப்படுவதாக அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்ட 2012 ஆம் ஆண்டுக்கான சட்டவிரோத ஆட்கடத்தல் குறித்த உலகலாவிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு பாதிக்கப்பட இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பல விபச்சார விடுதிகளில் இலங்கை சிறார்கள் மற்றும் பெண்களுடன், தாய்லாந்து, சீனா, தெற்காசிய நாடுகள். ஐரோப்பா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பெண்களும் பலவந்தமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது குறித்தும் தெரியவந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

குறிப்பாக பெண்களை விட இலங்கையைச் சேர்ந்த ஆண் சிறுவர்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்படுவது அதிகமாகக் காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மலையகத்தைச் சேர்ந்த சிறுவர்கள், கொழும்பு வீடுகளிலும், உலர்வலய பண்ணை நிலங்களிலும் சிறார் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுவதுடன், சில தருணங்களில் பட்டாசுக்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பணிக்கமர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இப்படியாக பணிக்கமர்த்தப்படும் சிறார்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதுடன், அவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் அமெரிக்க அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

உலக மட்டத்தில் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதை தடைசெய்வதற்கான குறைந்தபட்சம் அடிப்படை தராதரங்களை இலங்கை அரசாங்கம் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் அமெரிக்க அரசுத்துறையின் அறிக்கை கூறியுள்ளது.

எப்படியிருந்தபோதிலும், இப்படியான விடயங்களை தடுப்பதற்கு அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றிய அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் அவர்கள், இப்படியான சட்டவிரோத ஆட்கடத்தல்களை, நவீன அடிமைப்படுத்தல் என்று விபரித்திருக்கின்றார். ஆட்கடத்தலை தடுப்பதற்கு உலக மட்டத்தில் 17 நாடுகள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.