பத்தரமுல்லையில் வங்கிக் கொள்ளை முயற்சி - ஒருவர் சுட்டுக்கொலை, ஒருவர் கைது
பத்தரமுல்ல பகுதியிலுள்ள வங்கியொன்றில் கொள்ளையிட முயற்சித்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 2.30 அளவில் பத்தரமுல்ல பகுதியில் உள்ள வங்கியொன்றினை கொள்ளையிடுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த மூன்று சந்தேகநபர்கள் தப்பியோடுவதற்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ஒருவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இன்னுமொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் நீதவான் விசாரணை இன்று நடைபெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment